ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம்
பாகிஸ்தான் உருவானதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்கிறாரே மோடி?
இந்தியா உருவானதற்கு பிரிட்டிஷ்காரன்தான் காரணம் என்பதை விட்டுவிட்டார் மன்னா.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
வாகனங்களில் கொடிகள், தலைவர்களின் படங்களுக்குத் தடை விதித்தால் 50 சதவீத குற்றம் குறையும் என்ற உயர்நீதிமன்றக் கருத்து?
எத்தனை சதவீதம் என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால், "வாகனங்களில் கட்சிக் கொடிகள், தலைவர்கள் படங்களை வைத்தால் சட்டத்தை மீறலாம்' என்ற எண்ணம் சம்பந்தப்பட்டவர்களின் மனதில் உருவாகிவிடுகிறது. சட்டத்தை மீறுவதற்காகவே இப்படிச் செய்பவர்களும் பெருகி வருகிறார்கள். அரசியல் சாயம் மட்டுமல்ல, பிரஸ், மீடியா, வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை இதற்காகப் பயன்படுத்தும் போலிகளும் அதிகரித்தபடி இருக்கிறார்கள்.
அறிவுத்தொகையன், திருலோக்கி
நடிகர்கள் சிவகார்த்திகேயனும் ஸ்ரீகாந்த்தும் வாக்காளர்கள் பட்டியலில் பெயரில்லாமலேயே வாக்களித்திருக்கிறார்களே?
வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், மாற்று (சேலஞ்ச்) ஓட்டு என்ற முறையில் வாக்களிக்க முடியும். இதற்கு அதிகாரிகளின் அனுமதியும், பூத்தில் உள்ள கட்சி ஏஜெண்டுகளின் ஒத்துழைப்பும் முக்கியம். எனினும், வாக்கு எண்ணிக்கையில் இது சேர்க்கப்படுமா என்பது கேள்விக்குறியே! சென்னை முதல் கன்னியாகுமரி வரை லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இல்லை. அவர்கள் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதிக்கவுமில்லை. சினிமாக்காரர்களுக்கு அரசியல்கட்சியினர், அதிகாரிகள், ஊடகத்தினர் எல்லோரும் ரசிகர்களாக இருப்பதால் வாக்களிக்க அனுமதித்துவிட்டார்கள். இதே ரசிக மனோபாவம்தான், ரஜினியின் இடது கைக்குப் பதில் வலது கையில் மை வைக்க காரணமானது.
எம்.செல்லையா, ஏழாயிரம் பண்ணை
"தனக்கு எந்தக் கிராமத்தில் அதிக ஓட்டு கிடைக்கிறதோ அங்கு முன்னுரிமை அடிப்படையில் வசதிகள் செய்துகொடுப்பேன்' என்று மேனகாகாந்தி சொல்கிறாரே?
தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாகவோ அமைச்சராகவோ ஆகிவிட்டால், வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் அவர் மக்கள் பிரதிநிதி. ஆனால், அரசியல்வாதிகள் அப்படிப் பார்ப்பதில்லை. தங்களை வெற்றிபெற வைத்த பகுதி, சாதி இப்படித்தான் கணக்கிடுகிறார்கள். எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்ற தொகுதிகளுக்கு அடிப்படைத் தேவைக்கான நிதி கூட வழங்காமல் வஞ்சிக்கும் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டிலும் உண்டு.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
ஆணாதிக்கம் மிகுந்த சூழலில், "மனைவி சொல்லே மந்திரம்' என்ற கருத்து உருவானது எப்படி?
ஆணாதிக்கத்தால்தான்! மந்திரம் என்பது மயக்குவது, கட்டுப்படுத்துவது, தன் இயல்பிலிருந்து மாற்றிவிடுவது என்ற அர்த்தத்திலேயே இந்தக் கருத்து பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
நித்திலா, தேவதானப்பட்டி
சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை ஐ.நா. சபை அறிவித்ததற்கு பிரதமர் மோடி பெருமிதப்படுகிறாரா?
ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பைக் கூட தனக்கான அரசியல் லாபமாகக் கருதும் பிரதமர் மோடி, இதற்காகப் பெருமிதப்படாவிட்டால்தான் ஆச்சரியம். இந்த மசூத் அசாரை கந்தகார் விமானக் கடத்தல் பேரமாக விடுவித்தது வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு. அதன்பின், மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, பாகிஸ்தானில் செயல்பட்டபடி இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
"மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும்' என 2009-லிருந்தே இந்தியா வலியுறுத்தி வருகிறது. அப்போது மோடி ஆட்சி இல்லை. ஐ.நாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா எடுத்த நிலைப்பாட்டால், மோடி ஆட்சி அமைந்த பிறகும், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட முடியாத சூழல் இருந்தது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மூலம் இந்தியா தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால் சீனா இறங்கிவர, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது.
__________
காந்தி தேசம்
ப.மூர்த்தி, பெங்களூரு-97
மகாத்மா காந்தி உயிரிழந்த விநாடியில் "ஹே ராம்' என்றாராமே... அப்போது அவரது மனது என்ன நினைத்திருக்கும்?
கோட்சேவின் துப்பாக்கியிலிருந்து சீறிய தோட்டாக்கள் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் மாலை 5:17மணிக்கு காந்தியின் உடலைத் துளைத்தபோது, அந்தத் துப்பாக்கியின் சத்தமும், காந்தியுடன் பிரார்த்தனை செய்தவர்களின் அதிர்ச்சி நிறைந்த குரலொலியும்தான் அந்த இடத்தில் பலமாகக் கேட்டிருக்கிறது. காந்தி எப்போதும் ராமர் மீது பக்தி கொண்டவர். இதிகாசம் காட்டும் ராமனிலிருந்து மாறுபட்டது, காந்தியின் மனதில் இருந்த ராமனும் அதன் பெயரில் அவர் உருவாக்க நினைத்த ராமராஜ்ஜியமும். தனது மரணத்தின்போதும் ராமனின் பெயரை உச்சரிக்க வேண்டும் என்பது காந்தியின் விருப்பமாக இருந்தது. தன்னை யாராவது சுட்டுக்கொல்ல நேர்ந்தாலும், அந்த நிலையிலும் தன் உதடுகள் ராமரின் பெயரை உச்சரிக்க வேண்டும் என்கிற தன் இறுதி விருப்பத்தையும் தன்னுடன் இருந்தவர்களிடம் அவர் தெரிவித்திருந்தார். கோட்சே சுட்டபோது, மயங்கிச் சரிந்த காந்தியின் உதடுகள் சில வார்த்தைகளை முணுமுணுத்தன. காந்திக்கு உதவியாக இருந்த பெண்கள் மனுவும் அபாவும் இதைப் பற்றிக் குறிப்பிட்ட நிலையில், காந்தி தன் இறுதி விருப்பத்தின் அடிப்படையில் "ஹே ராம்' என உச்சரித்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. அதனடிப்படையில், டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டிலும் "ஹே ராம்' என்ற வார்த்தைகளே காந்தியின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளன.
காந்தியின் உதவியாளராக அப்போது இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்யாணம். அவர் பின்னாளில் அளித்த பேட்டியில், காந்தி சுடப்பட்டபோது அவருக்குப் பின்னால், தான் இருந்ததாகவும் அப்போது காந்தி எந்த வார்த்தையும் உச்சரிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதாவது, "ஹே ராம்' என மரணத்தின்போது காந்தி கூறவில்லை என அவர் தெரிவித்தது, விவாதப் பொருளானது. காந்தியின் உதடுகள் என்ன உச்சரித்திருந்தாலும், அவர் மனது, இப்படியொரு மரணத்தை எதிர்பார்த்தே இருந்தது என்பது அவர் வாயிலிருந்து ஏற்கனவே வெளிப்பட்டிருந்தது.