Skip to main content

ஒரு தலைமுறையைத் தாங்கிய இருவர்... கிரிக்கெட்டில் இருந்தும் கவனிக்கப்படவில்லை?  

Published on 20/02/2018 | Edited on 20/02/2018

கிரிக்கெட் விளையாட்டு, இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தை விட, மரியாதையை விட பணத்தை விட, இப்படி பல விட விட விட சொல்லலாம், அத்தனையும் அதிகமாகக் கிடைக்கும் விளையாட்டு.  அப்படிப்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய நபருக்கும், அதிக ரன்கள் குவித்த நபருக்கும் பெரிய வெளிச்சமோ பாராட்டோ இல்லாமல் இருக்கிறதென்றால் நம்புவீர்களா?  நம்பித்தான் ஆகணும். ஏனென்றால் அது பெண்கள் கிரிக்கெட்.

1982ஆம் வருடம் ஒரு வார இடைவெளியில் பிறந்த இருவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 35 வயதான மிதாலி ராஜ் மற்றும் ஜுலான் கோஸ்வாமி எனும் இரு ஜாம்பவான்கள் சாதித்து வருவது பின்வரும் தலைமுறைக்கு ஒரு மிகப் பெரும் திறவாக இருக்கும். அந்த அளவுக்கு ஆண்கள் ஆதிக்கம் நிறைந்தது கிரிக்கெட் விளையாட்டு.
 

Mithali shot


சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர் மித்தாலி ராஜ் ,189 போட்டிகளில் 6259 ரன்கள் 50.88 சராசரியில் குவித்து முதல் இடத்தில் உள்ளார். 17 வயதில் தன் பயணத்தைத் தொடங்கி அயர்லாந்து அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் 114 ரன்கள், 19 வயதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 214 ரன்கள் என்று அடித்து தன் வருகையை உலகிற்கு உரத்து பதிவு செய்தவர். இந்தியாவிற்காக பல வெற்றிகள், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை இறுதிவரை இரண்டு முறை என மித்தாலி ராஜின் சாதனைகள் அவரது ரன்களைப் போலவே அதிகம்.   

சர்வதேச பெண்கள்  ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் கோஸ்வாமி.166 போட்டிகளில் 200 விக்கெட்டுகள். சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது 200வது விக்கெட்டை வீழ்த்தினார். இச்சிறப்பைப் பெறும் முதல் பெண் பந்துவீச்சாளர்  இவர்தான். இவரும் தன் 19 வயதிலேயே இங்கிலாந்து தொடரில் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கப் போவதற்கான அடையாளமாக சிறப்பான ஆட்டத்தை பேட்டிங், பௌலிங் இரண்டிலும் காட்டினார். அன்று தொடங்கிய புயல் இன்னும் சுழற்றி அடிக்கிறது.  
 

Jhulan bowling


இத்தனை சாதனைகள் இருந்தாலும், சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் சஹால், குல்தீப் ஆகியோருக்குக் கிடைத்த கவனமும் பாராட்டும் பல ஆண்டுகளாக சாதிக்கும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே எதார்த்த உண்மை. ஆனாலும், தங்களைத் தாங்களே தட்டிக் கொடுத்துக் கொண்டு சிறப்பாக ஆடி வருகிறது இந்திய பெண்கள் அணி.  

மித்தாலி, ஜூலான் இருவரும் ஒரு புதிய பாதையை இந்திய பெண்கள் அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அதன் பலன் இப்போது நம் கண்முன்னே மந்தனா, கவுர், வேதா போன்ற பேட்டிங் வரவுகள் மற்றும் தீப்தி, பாண்டே, பிஸ்ட் போன்ற பௌலிங் வரவுகள் என்று தெரிகிறது. இவர்களின் இத்தனை ஆண்டு கால ஆட்டத்திற்கு கிடைத்த பெருமை இதுதான். இவர்கள் சாதித்ததை  தனிப்பட்ட சாதனையாக மட்டும் பார்க்க முடியாது. ஒரு தலைமுறையின் பெண்கள் கிரிக்கெட்டை தாங்கிப் பிடித்ததற்கான பாராட்டு அவர்களைச் சேர வேண்டும். ஆனால், ட்விட்டரில் மித்தாலியின் உடையையும் அதில் தெரிந்த வேர்வையையும் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கின்றனர் சிலர்.   
 

Indian womens cricket


அனைத்தையும் தாண்டி இவர்கள் இருவரின் முன் வயது இப்பொழுது கேள்விக்குறியாக இருக்கிறது. வரும் டிசம்பரில் 36 வயதைத் தொடுகிறார்கள் இருவரும். சாதனைகள் தொடரும்போது வயது தடுக்குமா என்ன? அதுவும், தோனி, ரோஜர் ஃபெடெரர், விஸ்வநாதன் ஆனந்த் என வயது பிரச்சனையாக பேசப்பட்டவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள காலமிது. விருதுகள் பல வாங்கிவிட்டார்கள், வெற்றிகள் பல குவித்துவிட்டார்கள், உலகக்கோப்பையையும் வாங்கிவிட்டால் விடைபெறும் பொழுது முழு நிறைவாக இருக்கும். வாழ்த்துவோம்...         

Next Story

கேப்டனுக்கு மீண்டும் எதிர்ப்பு; எல்லை மீறிய ரசிகர்கள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Rohit fans who crossed the line for Opposition to hardik pandya for Captain

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், இரண்டு அணிகளுமே தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. ஐ.பி.எல். 2024 போட்டியில் 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியை பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கையை அணி நிர்வாகம் மேற்கொண்டது. 

அந்த வகையில், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களில் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் குறைந்தனர்.

இதனை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் சொந்த மண்னான அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலே, ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் 2024 இன் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போட ஹர்திக் பாண்டியா வந்த போதே, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.  அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மாஞ்ரேகர், ரசிகர்களை மரியாதையாக நடக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோஹித்... ரோஹித்.... ’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கே.கே.ஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கே.கே.ஆர் அணி நிர்வாகத்திற்கு எதிராக கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

5 முறை சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பரிதாப நிலை!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
5-time champions Mumbai Indians team's pathetic condition for hatrick loss

ஐபிஎல் கிரிக்கெட் 2024 இல் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், இஷான் கிஷன் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்து 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ரோஹித் ஷர்மா, நமன் திர், டிவால்ட் ப்ரிவிஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்து 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, திலக் வர்மா 29 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பந்து வீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களான டிரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திய சஹால் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. அதன்படி தொடக்க வீரரான யஷ்ல்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் குவெனா பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை விளையாடிய ரியான் பராக் அதிகபட்சமாக 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்து 54 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளோடு ராஜஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஐ.பி.எல் சீசன் தொடங்கி 14 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் எல்லா அணிகளும் குறைந்தபட்சம் 1 வெற்றி முதல் 2 வெற்றி வரை பெற்று புள்ளிப்பட்டியலில் போட்டி போடத் தொடங்கியுள்ளன. ஆனால் 5 முறை சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் பரிதாபகரமான நிலையில் உள்ளது.