Skip to main content

 கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு 

Published on 12/02/2018 | Edited on 12/02/2018
ganapathi

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனு மீதான விசாரணை  பிற்பகலுக்கு ஊழல் வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மினோ  ஒத்திவைத்தார்.

 

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர். உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்காக சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம்  லஞ்சம் வாங்கும் போது இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி கேட்டு கோவை ஊழல் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 8 -ம் தேதி மனு தாக்கல்  செய்து இருந்தனர். 9 ம் தேதி   விசாரணைக்கு வந்த  கஸ்டடி மனு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று காலை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனு மீதான  விசாரணைக்காக துணைவேந்தர் கணபதி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

 

 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட துணைவேந்தர்  கணபதியிடம், போலீஸ் காவலில் எடுத்து  விசாரிக்க அனுமதி கேட்டு இருக்கின்றனர், போலீஸ் காவலுக்கு செல்கின்றீ்களா என நிதிபதி ஜான்மினோ கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த துணை வேந்தர் கணபதி , போலீஸ் விசாரணைக்கு செல்ல விருப்பமில்லை என தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து போலீஸ்  காவல்கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. அப்போது லஞ்சமாக வாங்கப்பட்ட காசோலைகளை துணைவேந்தர் எங்கு வைத்துள்ளார் என்பது குறித்து விசாரிக்க வேண்டி இருக்கின்றது எனவும் , எனவே துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழகறிஞர் சிவக்குமார் தெரிவித்தார். 

 

அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடவிட் முறையாக இல்லை எனவும், எதற்காக நீதிமன்ற  காவல் என்பதை தெளிவாக அபிடவிட்டில் தெரிவிக்கப்படவில்லை எனவும்,  ஒரு நிமிடம் கூட போலீஸ் காவல் கொடுக்க முகாந்திரம் இல்லை எனவும் நீதிமன்ற காவல் கொடுக்க கூடாது என துணைவேந்தர் கணபதி தரப்பு வழகறிஞர் ஞானபாரதி தெரிவித்தார். இரு தரப்பு  வாதத்தினை கேட்ட நீதிபதி ஜான்மினோ வழக்கு விசாரணையை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

பட்டாசு கடையில் தீ விபத்து

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

A fire broke out in a firecracker shop

 

அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையில் இன்று மாலை 3 மணியளவில் விற்பனைக்காக வாங்கி வந்த  பட்டாசுகளை இறக்கிய போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

மேலும் அருகில் இருந்த மதுபானக் கடை உள்ளிட்ட 3 கடைகளிலும் தீ பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்து வருகிறது. இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.