Skip to main content

டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

 

 

dengu

 

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  ’’இந்தியாவில், ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்கள் இந்திய பொது சுகாதாரத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த மர்ம காய்ச்சலுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு, சிக்கன்குனியாவின் பாதிப்பு 1950ம் ஆண்டு முதல் இருந்து வந்தாலும்,தீவிர பாதிப்பென்பது கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையில், 2.5% பேர் உயிரிழக்கின்றனர். 

 

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இந்த காய்ச்சல்களின் பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்குவை குணப்படுத்த உரிய மருந்து  இல்லாத நிலையில், தொடர் கண்காணிப்பு, ஓய்வு,திரவ உணவுகள் மூலமே இதனை சரிசெய்ய இயலும். இதற்கான தடுப்பூசியும் ஏதும் இல்லை. வாழிடங்கள், பயணிக்கும் இடங்களில் கொசுக்கள் கடிப்பதைத் தடுப்பதன் மூலமே இதனை தடுக்க இயலும். டெங்கு பாதிப்பின் அறிகுறியைக் கண்டறியவே 3 முதல் 14நாட்கள் ஆகின்றன. தமிழகத்தில் டெங்கு,சிக்கன் குனியா மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருவது குறித்த செய்திகள் தினந்தோறும் ஊடகங்கள் வாயிலாக வெளிவருகின்றன.

 

கடந்த ஆண்டு, இந்த காய்ச்சல்களுக்கு100க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் கொசுவால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தப்படுத்தவும்,குப்பைகள் தேங்காமல் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ஆனால் அரசும், அதிகாரிகளும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பல்வேறு கிராமங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கான பலிகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிப்பு அதிகரித்து மூக்கு வழியாக ரத்தம் கசியும் நிலையிலும், உரிய சிகிச்சை அளிக்க அரசு தவறியுள்ளது.  பல கிராமங்கள்,டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசு கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தவறி விட்டது. டெங்குவால் பாதிக்க்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டுகள் இல்லாமல்,சாதாரண வார்டுகளில் சிகிச்சை அளிப்பது போதுமானதாக இல்லை. ஆகவே, தமிழகத்தில் கொசுவைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் தினமும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்து வருகின்றனர்.25 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு இந்த உண்மையை மறைத்து வருகிறது. மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்காமல் வெறும் பார்வையாளனாக இருந்து வருகிறது.  டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை.

 

டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இது குறித்து நடவடிக்கை கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் சாதிக்கலவரங்களால் இறந்தவர்களின் குடும்பத்திற்கும்,விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. ஆகவே டெங்குவால்,உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்த போது,  கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆண்டு அதிக பேர் அதாவது  16301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு ள்ளதாகவும்,  52 பேர் இறந்துள்ளதாகவும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.

 

இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதி சத்தியநாராயணன்,நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்"  கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களே டெங்கு அதிகளவில் பரவியதற்கு காரணம். ஆனால் தற்போது கொசு ஒழிப்பு, கொசுக்களைக் கட்டுப்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டு, டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டால், வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் டெங்கு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

 

தற்போது டெங்கு பாதிப்பால் இறப்பு இல்லை. டெங்குவால் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மனுதாரர் கூறியுள்ளார். ஆனால்  அனைத்து இறப்புகளுக்கும் டெங்கு காரணமல்ல. ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கூறியிருந்தார். 

 

இதையடுத்து நீதிபதிகள், கொசு ஒழிப்பில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு எனவே, பொதுமக்களும் சுகாதாரத்தை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் எனக்கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Dr Arunachalam - Health care - dengue fever

 

மழைக்காலங்களில் பெருகி வரும் டெங்கு காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது. அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற கேள்வியை பிரபல மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு...

 

பருவகால மாற்றத்தால் பருவ மழை சீக்கிரமாகவே வந்து விட்டது. இதை எதிர் பார்க்காமலேயே நாம் முன்னரே மழை நீர் வடிகாலுக்கான குழிகளைத் தோண்டிப் போட்டிருந்தோம். அது பெரிய சாலைகளிலும், தெருப்புற உட்சாலைகளிலும் மூடப்படாமலே இருந்து கொண்டு தான் இருக்கிறது. 

 

இப்படி மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கிற நீரில் கொசு முட்டைகள் அதிக அளவில் உற்பத்தியாகி அவை டெங்கு காய்ச்சல் நோக்கி இழுத்துச் செல்கிறது. அது போக நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்த பிறகு மாநகராட்சி தரப்பிலிருந்து விழிப்புணர்வை ஆரம்பித்தார்கள். ஆனால் அது பெரிய அளவில் போய்ச்சேரவில்லையோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

 

இரவில் மட்டுமே கடித்துக் கொண்டிருந்த கொசு, அதிகமாக பெருகி இப்போதெல்லாம் பகலிலேயே கடிக்கிறது. அதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் சுற்றி இருக்கிற பழைய பொருட்களில் நீர் எதுவும் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்கிய பொருட்களில் பிளீச்சிங்க் பவுடரை தெளித்து கொசு பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் கொசு வலைகளை வைத்து கொசு நுழைவை தடுக்க வேண்டும். இதுவே டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளாகும்.

 

 


 

Next Story

சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு; இந்திய அணியை பாதிக்குமா?

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Dengue for Subman Kill! Will it affect the Indian team?

 

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 நடந்து வருகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை விளையாட ஓரிரு நாட்களே உள்ளது. இந்தநிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாசிடிவானது, அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துமா?

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா இந்த ஆண்டு நடத்தவுள்ளது. இன்று தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

 

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி வருகிற ஞாயிறு, சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க, சமீபத்தில் தான் இருதரப்பு வீரர்களும் சென்னை வந்திறங்கி பயிற்சி செய்து வருகின்றனர். இந்தியா தனது முதல் ஆட்டத்தை விளையாட இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்தநிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாசிடிவானது, அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. கில்லின் உடல்நிலை சரியாக 7 நாட்கள் வரை ஆகும் என்பதால், அவர் முதல் இரண்டு ஆட்டங்களையும் தவறவிட நேரிடும் எனவும் தெரிகிறது. சமீபத்தில் தான், ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியை இந்தியா துவம்சம் செய்தது.

 

அந்த ஆட்டங்களில் கில்லுக்கு பெரும் பங்கு இருந்தது. மேலும், அவரின் ஆட்டம் இந்திய அணிக்கு ஓப்பனிங்கில் பெரும் பலமாகவும் இருக்கும். அதிலும், தற்போது ரோகித் வேறு செம ஃபார்மில் இருக்கிறார். இந்த நிலையில், கில் இல்லாதது இருவரின் கூட்டணியையும் சிதைத்து புதிய வீரர் விளையாட நேரிடும். இதற்கு மத்தியில் பிசிசிஐ, இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் சுப்மன் கில்லை விளையாட வைக்கவேண்டும் என முனைப்புடன் இருக்கிறது. இதேபோன்ற பிரச்சனை தான் 2019ல் இந்திய அணி எதிர்கொண்டது. அப்போது, ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. இவரைத் தொடர்ந்து விஜய் ஷங்கருக்கும் காலில் காயம் ஏற்பட இந்திய அணி சற்றுத் தடுமாறியது. 

 

சுப்மன் கில் ஓப்பனிங்கில் இறங்கவில்லை என்றால், யார் விளையாடுவார்கள்? இவரின் இடத்தை இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷான் நிரப்புவார் எனவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு தொடக்கத்தில் வலது-இடது பேட்ஸ்மேன்களின் கூட்டணி கிடைப்பது பலம் தான் என்றாலும், கில் இல்லாமல் இந்திய அணியால் ரன்களை குவித்துவிட முடியுமா? விராத் கோலி பழைய ஃபார்மிற்கு திரும்பி நம்பிக்கை அளிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.