Skip to main content

அரசியலில் வலம் வரும் ஓ.பி.எஸ் வாரிசு! - உற்சாகத்தில் ர.ர.க்கள் !

Published on 12/02/2018 | Edited on 12/02/2018
ops son

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் அரசியலில் குதித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதுபோல் தற்போது மாநில அளவில் அரசியல் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருக்கக்கூடிய ஓ.பி.எஸ்-சின் மூத்த வாரிசான ரவீந்திரநாத்தும் அரசியலில் குதித்து வலம் வருகிறார்.

ஜெ., முதல்வராக இருந்த போது ஓ.பி.எஸ் மேல் அதிக மரியாதை வைத்து இருந்தார். அப்பொழுது தான் ஓ.பி.எஸ் மகனான ரவீந்திரநாத்துக்கு ஜெ., திருமணம்  செய்து வைத்தார். அதன் அடிப்படையில் தான் ஓ.பி.எஸ் மகனான ரவீந்திரநாத் இளைஞர் இளம் பெண் பாசரையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதன்மூலம் அரசியலில் குதித்த ரவி மாவட்ட அளவில் பாசரையையும் வளர்த்து வந்தார். இந்தநிலையில் தான் ஜெ.,விடம் தங்கதமிழ்ச்செல்வன் நெருக்கமாகி, மாவட்ட செயலாளர் பதவியை வாங்கியவுடனே ரவீந்திரநாத்திடம் இருந்த இளைஞர் இளம்  பெண்கள் பாசறை செயலாளர் பதவியை பறித்து  தனது ஆதரவாளரான மணிக்கு  தங்கதமிழ்ச்செல்வன் கொடுத்தார்.

இதனால் மனம் உடைந்த ரவி அரசியலில் இருந்து கொஞ்சம் விலகி வந்தார். அதன் பின் ஜெ.,மறைவுக்கு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போதும் ரவி வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்தவர் தான் தற்பொழுது ஓபிஎஸ் துணை முதல்வரானவுடனே மீண்டும் அரசியலில் குதித்து  விட்டார்.
 

son


கடந்த  மூன்று நாட்களாக தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில்  ஓ.பி.எஸ் முகாம் போட்டு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது நடைபெற்ற வனத்துறை ஆய்வு, சமூகநலத்துறை. ஜல்லிக்கட்டு உள்பட அனைத்து அரசு விழாவிலும் ஓ.பி.எஸ் கூடவே ரவீந்திரநாத்தும் கலந்து கொண்டார்.

அதுபோல் தனது மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விழா மேடையிலேயே உட்கார வைத்தார். ஒவ்வொரு விழா முடிந்த பின்பு எந்த அளவுக்கு  ஓ.பி.எஸ்.\க்கு அதிகாரிகளும். கட்சிகாரர்களும் மரியாதை கொடுப்பார்களோ அந்த  அளவுக்கு ரவீந்திரநாத்துக்கும் மரியாதை கொடுத்தனர்.

இதுபற்றி மாவட்ட பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் சிலரிடம் கேட்ட போது...

ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எல்லாம் இப்போது தீடீரென அரசியலில் குதித்து விட்டார். அதுபோல் தற்பொழுது அண்ணன் மாநில அளவில் தலைவராகி விட்டதால் மாவட்டத்தில் சரி வர கவனம் செலுத்த முடியவில்லை.

அதனால் தான் தற்போது மகன் ரவீந்திரநாத்தை அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்த இருக்கிறார். அதை உண்மையிலேயே நாங்களும் வரவேற்கிறோம். இந்த  மாவட்டத்தில் அண்ணன் ஓபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வன் செயல்பட்டு வருகிறார்.

அவரை ஓரம் கட்ட வேண்டும் என்றால் ரவியை களத்தில் இறக்கினால் தான் சரியாக இருக்கும். அதன் அடிப்படையில் ஓ.பி.எஸ் தனது மகனை இறக்கி இருக்கிறார். அது எங்களுக்கு சந்தோசம். அதோடு  இனிமேல் கட்சிகார்களின் குறை, நிறைகளையும் ரவி தீர்த்து வைப்பார்  என்ற  நம்பிக்கையில் இருக்கிறோம் என்று கூறினார்கள்.

ஆக ஓ.பி.எஸ் வாரிசு மீண்டும் அரசியலில் குதித்திருப்பது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கொடநாடு கொலை தொடர்பான ஓபிஎஸ் மகனின் ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு!

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

The Facebook post posted by OPS's son regarding the Kodanad Issue caused a stir!

 

'கொடநாடு கொலை வழக்கில் நீதி வேண்டும்' என்று ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சில ஆண்டுகளுக்கு முன் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிப்படை போலீசாரும் இதுவரை 200 மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கிடையே மறுபுறம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை சூடுபிடித்துள்ள நிலையில் 'கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் நீதி வேண்டும்' என்று தமிழக அரசுக்கு ஓபிஎஸ்சின் இளைய மகனான ஜெயபிரதீப் ஒரு கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அந்த பதிவில்,

'உண்மை ஒருநாள் வெல்லும்

கொடநாடு சம்பவம் பற்றி நான்கு வருடமாக நான் எதுவும் பேசவில்லை என்று சில நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் அவர்களுக்கு தகுந்த விளக்கத்தினை நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலான பங்களாவில் சம்பவம் நடந்த ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தேன்.

 

அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன். இரண்டு தினம் முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த கொடநாடு சம்பவத்தைப் பற்றிய தொகுப்பை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. நேற்றைய என்னுடைய பதிவில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது.

 

pp

 

மற்றவர்கள் மீது சந்தேகப்படுவதற்கு நான் காவல்துறையும் இல்லை பத்திரிக்கையாளரும் இல்லை சாதாரண மக்களின் ஒருவன்.ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது இதற்கு நியாயம்  கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது.

 

நமது கட்சிக்கு மேலும் கலங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் . இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற  கழக உண்மை தொண்டனின் எண்ணத்தை தான் நான் பதிவிட்டு இருந்தேன்'  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக வும் பரவி வருகிறது. அதேபோல் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

Next Story

ஓ.பி.எஸ். மகனுக்கு எம்.எல்.ஏ. சீட்! - 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக ஏன் தாமதம்? 

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

ddd

 

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் என்றும், எந்தெந்த தொகுதிகள் என்றும் ஒதுக்கி வருகிறது அதிமுக.

 

இதனிடையே திடீரென கடந்த வாரம் அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்; தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்; சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார்; தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறார்; திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் எஸ்.தேன்மொழி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதால் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதமாகி வருகிறது என்கின்றனர் அக்கட்சியினர்.

 

மேலும், கம்பம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரதீப் என இருக்கிறதாம். இந்நிலையில், பாஜகவும் கம்பம் தொகுதியைக் கேட்டு உறுதியாக நிற்பதால் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தாமதமாவதற்கு அதுவும் ஒரு காரணம் என்கின்றனர்

 

இந்தத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஜக்கையன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என பிரிந்தபோது, ஜக்கையன் தினகரன் அணியில் இருந்தார். புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்தவர், புதுச்சேயில் இருந்து திரும்பியதும், எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போதிலிருந்து எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து வரும் ஜக்கையன், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.