Skip to main content

நான்காவது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

மாட்டுத்தீவன ஊழல் விவகாரத்தில் தொடரப்பட்ட நான்காவது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

Lalu

 

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது, அவரது ஆட்சிக்காலத்தில் மாட்டுத் தீவன ஊழலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்குகள் மீதான விசாரணை முடிந்து, ஒன்றன்பின் ஒன்றாக தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

 

இதுவரை ஏற்கெனவே மூன்று வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றிலுமே லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. அதில் முதல் வழக்கில் 5 ஆண்டுகளும், இரண்டாவது வழக்கில் 3.5 ஆண்டுகளும், மூன்றாவது வழக்கில் 15 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு, உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

இந்நிலையில், தும்சா கருவூலத்தில் இருந்து ரூ.3.13கோடி ஊழல் புரிந்தது தொடர்பான நான்காவது வழக்கில், லாலு உட்பட 14 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“அநீதி இழைக்கப்பட்டுள்ளது” - மத்திய அமைச்சர் அதிரடி ராஜினாமா! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Central Minister resigns in bihar

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் பசுபதி பராஸ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன்  கூட்டணி அமைத்து பீகார் மாநிலத்தில், உள்ள லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்டது. மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் அப்போது நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 39 இடங்களை வென்றது. இதில், பா.ஜ.க 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. மீதமுள்ள 1 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றதால், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் கடந்த 2020ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரர் பசுபதி குமார் பராஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, பசுபதி பராஸுக்கும், ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வானுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் காரணமாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனை தொடர்ந்து, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை பசுபதி பராஸும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) என்ற கட்சியை சிராஸ் பஸ்வானும் தொடங்கினர். 

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் சிராஜ் பஸ்வானுடன் கூட்டணி அமைப்பதாக பா.ஜ.க அறிவித்தது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தனது ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட பா.ஜ.க ஒதுக்கீடு செய்யப்படாததால் பசுபதி குமார் பராஸ் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

Central Minister resigns in bihar

இது குறித்து, பசுபதி குமார் பராஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பீகார் மக்களவைத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 40 வேட்பாளர்கள் பட்டியில் நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் எங்கள் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. நான் மிகுந்த நேர்மையுடன் உழைத்தேன். எங்களுக்கும், எங்கள் கட்சிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார். 

Next Story

லாலு பிரசாத்தின் மகன் மருத்துவமனையில் அனுமதி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Lalu Prasad's son admitted to hospital

லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆவார். இவர் கடந்த 1990 முதல் 1997 ஆம் ஆண்டு வரை பீகாரின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதேபோன்று மத்திய ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் தேஜ் பிரதாப் யாதவ் பீகார் மாநில அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சராகவும் பதிவி வகித்தவர் ஆவார். இந்நிலையில் நெஞ்சு வலியால் தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.