Skip to main content

STR ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா? ஈஸ்வரன் - விமர்சனம்

Published on 14/01/2021 | Edited on 14/01/2021
eswaran STR

 

தனக்கு ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்யும் முனைப்புடன் உடல் இளைத்து, முழு வேகத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கரோனா காலத்திற்குள்ளேயே படத்தை முடித்து தனது ரசிகர்களுக்கு சிம்பு அளித்த மகிழ்ச்சி படம் பார்த்தபின்பும் தொடர்கிறதா? இயல்பான, தரமான படங்களை தந்து ஆரம்பத்தில் கவனமீர்த்த சுசீந்திரன், சமீபகாலமாக குறுகிய கால - பட்ஜெட் படைப்புகளை கொடுத்து வருகிறார். பட்ஜெட் குறைவது நல்லதுதான், தரமும் குறைந்தால் ஆபத்து.

 

பழனிக்கு அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் பாரதிராஜாவின் மகன்கள் உள்பட குடும்பத்தினர் அனைவரும் அவரை பிரிந்து வசிக்கின்றனர். சிம்பு, பாரதிராஜாவின் பாதுகாவலராக இருக்கிறார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் ஊருக்கு வர குடும்பம் ஒன்று கூடுகிறது. அதே நேரம், வில்லனின் வன்மத்தாலும் ஜோதிட கணிப்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நேரக்கூடிய ஆபத்திலிருந்து குடும்பத்தை காத்து எதிரிகளை அழித்தாரா சிம்பு என்பதுதான் 'ஈஸ்வரன்' கதை.

 

ஸ்லிம், ஃப்ரெஷ் தோற்றத்தில் ஆட்டம், பாட்டு, அதிரடி... அனைத்திலும் அசத்துகிறார் 'ஆத்மன்' STR. படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு அவர்தான் என்றாலும் அந்த ஈர்ப்பு முதல் அரை மணிநேரம்தான். அடுத்து நம்மை அமர வைக்கக்கூடியது திரைக்கதைதானே?சொல்லப்போனால் படத்தில் சிம்புவுக்கு காட்சிகள் சற்றே குறைவு. அவருக்கு மற்றவர்கள் பில்ட் - அப் கொடுத்தாலும் அவர் சற்று அமைதி காத்திருப்பது ஆறுதல். அதேபோல் அவரது டைமிங் வசனங்களும் சிறப்பாக இருக்கின்றன. படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் நந்திதா ஸ்வேதா, மற்றொருவர் நிதி அகர்வால். இருவருக்குமே அதிக வேலை இல்லை. மனதில் நிற்கும்படியான கதாபாத்திரமும் இல்லை.

 

str with bharathiraja

 

சிம்புவை காட்டிலும் இயக்குனர் பாரதிராஜாவே அதிக காட்சிகளில் தோன்றுகிறார். அவரின் நடிப்பும், கதாபாத்திரமும், அதன் பின்னணி கதையும் படத்தை தாங்கிப் பிடித்து இருக்கிறது. அதுவே படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. காட்சிக்குக் காட்சி தன் முகபாவனைகள் மூலம் உயிர் கொடுத்துள்ளார். இவரின் இளவயது கதாபாத்திரமாக நடித்திருக்கும் இவரது மகன் மனோஜ், இயல்பாகப் பொருந்தியிருக்கிறார், நடித்திருக்கிறார். பாலசரவணன், முனீஸ்காந்த் ஆகியோரின் நகைச்சுவை சில இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. காளிவெங்கட், கவனிக்கவைக்கிறார். வில்லன் 'ஸ்டன்' சிவா, மிரட்டலான தோற்றத்தோடு சிறப்பான வில்லனாகக் கூடிய சாத்தியம் இருந்தாலும் அவரது பாத்திரம் அத்தனை அழுத்தமாக இல்லை.

 

ஏற்கனவே பார்த்துப் பழகிய கதை, அரதப்பழசான காட்சி அமைப்பு என பழைய டெம்ப்ளேட்டிலேயே திரைக்கதை அமைத்திருக்கும் சுசீந்திரன் படத்தை வேகமாக முடிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தி உள்ளார் என்ற உணர்வு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனாலும் அவரின் அடிப்படை பலமான கிராமத்து வாழ்வியல், குடும்ப உறவுகளுக்கிடையிலான உணர்வுகள், இயல்பான நகைச்சுவை போன்றவை ரசிக்க வைக்கின்றன. கரோனா ஊரடங்கை சரியாகப் பொருத்தியிருப்பது நல்ல யோசனை.

 

திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் பாடல்களும், கிராமத்துக் காட்சிகளும் அழகாக இருக்கின்றன. தமனின் இசை மிக வேகமாக இருக்கிறது, வேகமாக நம்மை கடந்து சென்றுவிடுகிறது. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, அழுத்தமாக இல்லை. தமிழ் சினிமா கண்ட பல கிராமத்து படங்களின் சாயல்களுடன் உருவாகியுள்ள ’ஈஸ்வரன்’, குடும்பங்களுக்கு ஓகே. STRஐ எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் குறைவுதான். 


 

சார்ந்த செய்திகள்