Skip to main content

எதை நோக்கிச் செல்கிறார் 'ஹிப்ஹாப்' ஆதி? நட்பே துணை - விமர்சனம் 

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

'மீசைய முறுக்கு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிப்பில் வெளிவந்துள்ள இரண்டாவது படம். விளையாட்டு, அரசியல்... இந்த இரண்டு கதைக்களங்களில் சமீபமாக அதிக தமிழ் படங்கள் வெளிவருகின்றன. இது விளையாட்டு + அரசியல் படம். இரண்டையும் கலந்து படம் முழுவதும் நட்பைத் தூவி எடுக்கப்பட்டுள்ள படம் 'நட்பே துணை'.

 

adhi hip hop tamizha



காரைக்காலில் ஒரு நதி கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள, தியாகி அரங்கநாதன் என்பவரால் போராடி மீட்கப்பட்ட வரலாறுள்ள ஹாக்கி மைதானத்தை ஒரு வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம் அரசியல்வாதியான கரு.பழனியப்பன் உதவியுடன் கையகப்படுத்த முயற்சி செய்கிறது. இதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திப் பார்த்தும் பயன் இல்லாமல் போகிறது. அந்த ஹாக்கி மைதானத்தில் விளையாடி பயற்சி பெறும் வீரர்களும் அவர்களது பயிற்சியாளரும் ஒன்றிணைந்து மைதானம் பறிபோவதை தடுக்க முயற்சிக்கிறார்கள். இன்னொரு பக்கம் புதுச்சேரி பையன் பிரபாகரனாக ஹிப் ஹாப் ஆதி, ஃபிரான்ஸ்க்கு சென்று செட்டிலாக நினைக்கிறார். அந்த வேலையாக காரைக்காலில் உள்ள அவரது மாமா பாண்டியராஜன் வீட்டுக்கு வருகிறார். வந்த இடத்தில் காதலிலும் விழுகிறார். அந்த மைதானத்துக்கும் ஆதிக்கும் என்ன தொடர்பு, மைதானத்தை மீட்க ஆதி எப்படி உதவுகிறார் என்பதே 'நட்பே துணை'.

 

anaga natpe thunai



படம் முழுவதும் நட்பை கொண்டாடும் வசனங்கள், பரிட்சயமான யூ-ட்யூப் முகங்கள், சோசியல் மீடியா ட்ரெண்ட் விஷயங்கள் என தனது டார்கெட் ஆடியன்ஸ் இளைஞர்கள் மட்டும்தான் என குறி வைத்து சரியாக அடித்திருக்கிறார்கள் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கும் கிரியேட்டிவ் டைரக்ட்ர்கள் 'ஹிப் ஹாப் தமிழா'வும். பார்த்துப் பழக்கப்பட்ட கதை, திரைக்கதையில் கரண்ட் விஷயங்களை சரியான இடத்தில் பயன்படுத்தி ரசிக்கவைத்திருக்கிறார்கள். இடைவேளை வரை பார்த்த ஹீரோ, இடைவேளைக்கு சற்று முன் வெயிட்டாக, வேறு ஒரு ஆளாக மாறுவது, அவருக்கு ஒரு உணர்வுபூர்வமான பின்கதை என்று தரமான தமிழ் மசாலா செய்திருக்கிறார்கள். படம் முழுவதும் ஆங்காங்கே க்ளிஷேவான காட்சிகள் இருந்தாலும் அதை பல இடங்களில் மறக்கடிக்கும் வகையில் மாஸான காட்சிகளும், புல்லரிக்கவைக்கும் ஸ்போர்ட்ஸ் மூவ்மெண்டுகளும் வந்து அயர்ச்சியை அகற்றியுள்ளது. இயக்குனர் அணியில் இருக்கும் ராஜா தேசிங்கு கதை டீம் ஸ்ரீகாந்த், தேவேஷ் ஜெயச்சந்திரன் ஆகியோர் ட்ரெண்டில் உள்ளதைக் கொண்டு சேஃபாக விளையாடியுள்ளனர். மிக மிக வழக்கமான, பெரிய சுவாரசியமில்லாத ஆரம்ப காதல், காமெடி காட்சிகளும் நீண்ட ஹாக்கி மேட்சும் கொஞ்சம் டயர்ட் ஆக்குகின்றன.

குறிப்பாக கரு.பழனியப்பன் வரும் காட்சிகளும், அலட்டிக்கொள்ளாத அவர் பேசும் வசன வரிகளும் தியேட்டர்களில் கைதட்டல்கள் பெறுகின்றன. 'நீங்க நெனக்கிற மாதிரி நான் ரொம்ப கெட்டவன் லா இல்ல. நான் ஒரு சாதாரண அரசியல் வாதி' போன்ற சமகால அட்டகாசங்களை நையாண்டி செய்யும் வசனங்கள் மூலம் லொள்ளான நடிப்பை அசால்டாக செய்துள்ளார் கரு.பழனியப்பன். அதேபோல் ஹாக்கி காட்சிகளில் மாஸ்காட்டி புல்லரிப்பை ஏற்படுத்தும் வகையில் நடித்து தனக்குண்டான கூட்டத்திற்கு விருந்தளித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இவர் வரும் காதல் காட்சிகள் தவிர்த்து மற்ற காட்சிகளிலும், பாடல்களிலும் ரசிக்கும்படி தன் வேலையை செய்துள்ளார். பிரபாகரன் என பெயர், 'கேப்டன்' என்ற அடைமொழி, சமகால அரசியலை கிண்டல் செய்யும் காட்சிகள், அரசியல்வாதிகளையும் மக்களையும் கேள்வி கேட்கும் வசனங்கள், 'இவன் யார் தெரியுமா' என்ற ரீதியில் உடன் இருப்பவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்புகள் என ஆதி 'மாஸ் ஹீரோ' இலக்கை நோக்கிச் செல்கிறார், முன்னேறுகிறார்.

 

karu palaniyappan



நாயகி அனகா ஹாக்கி வீராங்கனையாக கவர்ந்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்.ஜே.விக்னேஷ், சுட்டி அரவிந்த், எரும சாணி விஜய், புட்சட்னி ராஜமோகன், ஷா ரா, பிஜிலி ரமேஷ், மண்ணை சாதிக் உட்பட பல யூ டியூப் நட்சத்திரங்கள் அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் பக்குவமாகத் தெரிபவர்கள் கோச் ஹரிஷ் உத்தமன் மற்றும் சர்பத் கடை தாத்தாவாக வரும் 'கத்தி' புகழ் தாத்தா. பாண்டியராஜன், கௌசல்யா இருவரும் குரூப்புல டூப்பு போல தனித்துத் தெரிகிறார்கள்.

ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை படம் முழுவதையும் ஆக்கிரமிக்கிறது, கொஞ்சம் குறைத்தால் நல்லது. பாடல்கள் வேகமாக போகிற போக்கில் போய்விடுகின்றன. சிங்கிள் பசங்க, கேரளா பாடல் இரண்டிற்கும் இளைஞர்கள் குதூகலிக்கிறார்கள். படத்தில்  அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் ஹாக்கி காட்சிகள் சிறப்பு. ஃபென்னியின் படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் சீராக செயலாற்றி கொஞ்சம் சுருக்கமாகியிருக்கலாம். சந்தோஷ் மற்றும் சிவராக் ஷங்கரின் நடன அமைப்பும் கவனிக்க வைத்துள்ளது.

நட்பே துணை - படத்திலும்... படம் பார்ப்பதற்கும்! 

 

 

சார்ந்த செய்திகள்