Skip to main content

'வாங்கடா செல்ஃபி புள்ளைங்களா...' யாரை கலாய்க்கிறது சிட்டி? 2.0 - விமர்சனம்

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

ஓடும் ரயில் மேல் சண்டை, வெடித்துப் பறக்கும் கார்கள், ஒரே பாடலில் பல நாடுகள், பூங்கொத்து கொடுக்கும் டைனோசர், மலைக்கும் ரயிலுக்கும் பெயிண்ட், காதல் கொள்ளும் ரோபோ...  இப்படி தமிழ் சினிமாவின் காட்சி வடிவ பிரம்மாண்டங்களை அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு சென்ற இயக்குனர் ஷங்கரின் அடுத்த பாய்ச்சல் 2.0. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்தில் இயக்குனர்களின் பங்களிப்பு இருவிதமாகத் தேவைப்படும். கதை, திரைக்கதை என்று படைப்பின் பக்கமும், படத்தின் அளவைப் பொறுத்து அதற்குத் தேவையான ரிசோர்ஸ்களை (பணம், டீம், தொழில்நுட்பம் அனைத்தும்) மேலாண்மை செய்து திட்டமிட்ட வடிவத்தில் படத்தை உருவாக்கும் மேனேஜ்மேண்ட் பக்கமும்தான் இந்த இரு விதங்கள். இதில் இரண்டாம் விதத்தில் (முதல் விதம் கேள்விக்குறியதுதான்) வல்லுநர் ஷங்கர். அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். பிற நாடுகளுடனான ஒப்பீடு, பொது மக்களின் தவறுகளை பெரிதாகக் காட்டுவது, பெரிய அரங்கில் மக்கள் முன் பேசுவது, ஏற்படும் பிரச்னைக்கு புகார் கொடுக்க ஊரே காவல்துறை அலுவலகத்தில் வரிசையில் நிற்பது, தேசத்துக்கு மெசேஜ் சொல்வது என்று எந்த ஷங்கர்தனங்களும் மிஸ்ஸாகாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.
 

vasee - nila



'கபாலி', 'காலா' என புது  ரூட்டில் சென்ற சூப்பர் ஸ்டார், ஒரு யூ-டர்ன் அடித்து தனது ரூட்டிற்கு வந்துள்ளார். ஆனால், இது ஓப்பனிங் சாங், பில்ட்-அப் வசனங்கள் எல்லாம் கொண்ட பழைய ரூட் இல்லை. ஆனால், அவரது சூப்பர் ஸ்டார்தனத்தை முழுதாகப் பிரயோகப்படுத்த இடமுள்ள ரூட். எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த எந்திரனில் இருந்த ரஜினி தோற்றத்துக்கும் இதற்கும் சின்ன வித்தியாசத்தை மட்டுமே உணர முடிகிறது. கிட்டத்தட்ட அதே ஆற்றலையும் தோற்றத்தையும் கொண்டுவந்துள்ளார் ரஜினிகாந்த். டாக்டர்.வசீகரன், நல்ல சிட்டி, ரெட் சிப் சிட்டி, குட்டி என அத்தனை வடிவங்களுக்கும் அழகான வித்தியாசங்கள் காட்டி மிளிர்கிறார் சூப்பர் ஸ்டார். 'இதுதானே இவர் களம், எதுக்கு தேவையில்லாம...' என்று அவரை நேசிக்கும் ரசிகர்களுக்கு எண்ணம் வரலாம். 'நம்பர் 1, நம்பர் 2 எல்லாம் சின்னப் பசங்க விளையாட்டு, இங்க நான் மட்டும்தான்' என்று கெத்து காட்டுகிறார், 'செத்துப் பொழச்சு வர்றதே ஒரு சுகம்தான்' என்று ரியல் லைஃப் பன்ச் கொடுக்கிறார். மொத்தத்தில் ரஜினிகாந்த் ஃபுல் ஃபார்ம்.

வயதான ஒருவர் செல்ஃபோன் டவரில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்வதோடு தொடங்குகிறது படம். சென்னையில் திடீரென ஒரு நாள், பொதுமக்கள் ஒவ்வொருவரின் செல்ஃபோனும் பறக்க, ஊரே  செல்ஃபோன்கள் பறந்து, தினசரி வாழ்வை இழந்து (?!) பீதியுடன் நிற்கிறது. அரசும் அறிவியலாளர்களும் இதற்கு காரணம் யாரென தலையைப் பிய்த்துக் கொள்ள, இன்னொரு பக்கம் செல்ஃபோன்களை மீண்டும் கொண்டு வருவதற்காக செயல்படும் ஒவ்வொருவரும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். ஊரில் உள்ள செல்ஃபோன்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பிரம்மாண்ட உருவமாகி இந்தக் கொலைகளை நிகழ்த்த, ராணுவத்தாலும் சமாளிக்க முடியாத இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள மீண்டும் உருவாக்கப்படுகிறது சிட்டி. சிட்டி, அதை எப்படி டீல் செய்கிறது என்பதை 3டி பிரம்மாண்டத்தில் படம் காட்டியிருக்கிறது 2.0.
 

chitti



பறவைகளுக்காகவே வாழ்ந்து மடியும் 'பக்ஷிராஜனாக' அக்ஷய் குமார். சிறிது நேரம்தான் அவரது முழு தோற்றமென்றாலும் சிறப்பாக நடித்துள்ளார் (உதடசைவுகள் தவிர்த்து). வசீகரனின் பெர்சனல் செக்கரட்டரியாக கூடவே இருக்கும் எமி ஜாக்சன் ஃப்ரேமின் அழகைக் கூட்டுகிறார். அவருக்கென பெரிய தேவையும் இல்லை, இடமும் இல்லை என்றாலும் நிஜத்தில் இருக்கும் 'சோஃபியா' ரோபோட்டை நினைவுபடுத்தும் வண்ணம் அழகாய் வளம் வருகிறார். சிட்டிக்கும் இவருக்குமான காதல் ஒரு இனிப்பான டெஸ்ஸர்ட். இவர்களைத் தவிர படத்தில் நினைவில் நிற்கும் அளவுக்கு வேறு பாத்திரங்களுக்கு இடமில்லை. முக்கியமாக இருவரின் விஸ்வரூபம்தான் படம் முழுவதும்.

3டி தொழில்நுட்பத்தில் இதுவரை நாம் பார்த்த எந்த மொழி படத்தையும் மிஞ்சும் காட்சி அனுபவம்... லட்சக்கணக்கான செல்ஃபோன்கள் சேர்ந்து வைப்ரேட் ஆவது நம் நெஞ்சில் நடப்பது போன்ற ஒலி அமைப்பை வடித்த நேர்த்தி... ராட்சச பறவையாக, பிரம்மாண்ட மனிதனாக, அத்தனை ஃபோன்களின் டிஸ்பிளேயும் சேர்ந்து அக்ஷய் குமார் முகமாக என  செல்ஃபோன்களை வைத்து எத்தனை வித்தைகளை காட்ட முடியுமோ அத்தனையையும் பிசிறுகள், பிழைகள் இல்லாமல் காட்டியிருக்கும் ராட்சச உழைப்பு... என 2.0, தொழில்நுட்பத்தால் ஆளப்படும் படம். இங்கு மனித உணர்வுகளுக்கும் உணர்வுப்பூர்வமான நடிப்புக்கும் பெரிதாக இடமில்லை. அதை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். அதை மறந்துவிட்டு காட்சிகளை ரசித்தால் கொண்டாட்டம். திரைக்கதை, ஷங்கர் படங்களைப் பார்த்த யாராலும் எளிதாக யூகிக்கக்கூடியதுதான். தொடர்ந்து நடக்கும் கொலைகள், கொலைக்குப் பின்னணியில் ஒரு நெகிழ வைக்கும் ஃப்ளாஷ்பேக், இறுதியில் ஒழிக்கப்படும் வில்லன் என்பதுதான் இந்தப் படத்தின் டெம்ப்லேட்டும். என்ன குறையென்றால், இதில் ஃப்ளாஷ்பேக் நெகிழவைக்கவில்லை. படம் முழுவதும் ரோபோக்கள், மனிதர்கள், கிராஃபிக்ஸ் உலகம், உண்மை உலகம் எல்லாம் கலந்து வருவதால், மனிதர்களும் ஹியூமன் டச் கொடுக்காமல் போய்விடுகிறார்கள். அவர்களுடைய உணர்வுகள் நமக்குக் கடத்தப்படாமலேயே கடக்கின்றன. அதுபோல நிகழும் பிரம்மாண்ட கொலைகளுக்கு ஆரா, நெகட்டிவ் எனெர்ஜி, என எத்தனை அறிவியல் விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் நமக்கு அது ஆவி வந்து பழிவாங்கும் கதை என்னும் அளவில்தான் பதிகிறது. ஏனெனில் அந்த அறிவியல் விளக்கங்களில் பல நிஜத்தில் இல்லை என்பது பலருக்கும் தெரிந்ததே.

 

akshay kumar



சுஜாதா இல்லாத குறை, ஷங்கரின் ஒன்றிரண்டு படங்களின் வசனங்களில் தெரிந்தது. ஆனால், 2.0வில் எழுத்தாளர் ஜெயமோகன், கொஞ்சம் சுஜாதாவாக மாறி ஷங்கருடன் பணிபுரிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. 'ஓடிப்போறது என்னோட சாஃப்ட்வேர்லயே கிடையாது' என்று டெக்னிக்கல் பன்ச், 'வாங்கடா செல்ஃபி புள்ளைங்களா' என்று கலாட்டா கலாய், வில்லன்களை முடித்துவிட்டு 'ஜீரோ பேலன்ஸ்' என்று சொல்வது, காலை உடைத்துவிட்டு 'யுவர் கால் இஸ் டிஸ்கனெக்டட்' என்பது, கதையின் இடையே லைட்டாக புராணங்கள் தொட்டு செல்வது, எமி ஜாக்சன் அடிக்கும் நகைச்சுவை பன்ச்கள் என ஜெயமோகன் - ஷங்கர் கூட்டணியின் சுஜாதாத்தனமான வசனங்கள் படத்தின் பெரும் பலம். பெரும்பாலும் கோணங்களிலும், ஒளியைப் பயன்படுத்தும் விதத்திலும் ஒளிப்பதிவின் தரத்தை, ரசனையை அனுபவிக்கும் நமக்கு நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு புதிய அனுபவத்தைத் தருகிறது. இந்த பிரம்மாண்டத்தையும், 3டி அனுபவத்தை கொடுத்த விதத்திலும் ஒளிப்பதிவுக்கு இருக்கும் பெரும்பங்கு நன்றாகத் தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் - குத்ப் இ க்ரிபா குழுவின் பின்னணி இசை பிரம்மாண்டத்துக்கு ஏற்ப ஒலிக்கிறது. முத்துராஜின் கலை, ஆண்டனியின் படத்தொகுப்பு உட்பட அனைவர் உழைப்பும் ஷங்கர் கண்ட பிரம்மாண்டக் கனவை நிஜமாக்கியிருக்கிறது.

நாம் தூக்கத்தில் காணும் சில கனவுகள், பயங்கர சுவாரசியமாக இருக்கும், பார்க்க மிக அழகாக இருக்கும், அற்புதமான விசுவல்ஸ் வரும்... ஆனால் விடிந்த பின் அது சற்று மங்கலாகத்தான் நினைவில் இருக்கும்.  அதன் தாக்கமே பெரிதாக இருக்காது. அப்படி ஒரு கனவுதான் 2.0.                                                            

 

சார்ந்த செய்திகள்