Skip to main content

ரஜினி vs கரு பழனியப்பன் - சமூக வலைத்தளங்களில் மோதல் !

Published on 19/03/2018 | Edited on 20/03/2018
karpra


சமூக கருத்துக்களை தைரியாமாகவும், வெளிப்படையாகவும் பேசுபவர்களில் இயக்குனர் கரு பழனியப்பனும் ஒருவர். விவாத மேடைகளில் அனல் பறக்கும் விவாதங்களை எடுத்துரைக்கும் இவர் சமீபத்தில் ரஜினிகாந்தின் அரசியல் பற்றி பேசும்போது...."எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வரும் போது தனித்தன்மையுடன் வந்தார். ஆனால் ரஜினியோ, எம்.ஜி.ஆர் முகமூடியை அணிந்து கொண்டு அரசியலுக்கு வருகிறார். நீங்கள் ரஜினியாகவே அரசியலுக்கு வாருங்கள். வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வருவதாக சொல்கிறீர்கள். எம்.ஜி.ஆர். வரும்போது எந்த வெற்றிடமும் இல்லை. அவர் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். ஆன்மீக அரசியல் என்பது ஜாதி, மத, இன பேதமற்ற அரசியல் என்கிறீர்கள். சாதி அரசியல் நடத்துபவர்களை அருகில் வைத்துக் கொண்டால் அது எப்படி சாத்தியமாகும்...நீங்கள் நடித்துள்ள ‘காலா’ படம் வந்தால் முதல் ஆளாக படம் பார்ப்பேன். நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறவில்லை. வாருங்கள். ஆனால், என் ஓட்டு யாருக்கு என்பதை நான் தான் முடிவு செய்வேன்" என்றார். கரு பழனியப்பன் இப்படி பேசியதற்கு சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர கிடைத்து வருகிறது. மேலும் குறிப்பாக ரஜினி ஆதரவாளர்கள் ஆபத்து காலங்களில் அவர் செய்த உதவிகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரஜினிக்கு ஆதரவாகவும், அதே சமயம் கரு பழனியப்பனுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

"பியூஷ் மனுஷ்தான் தலைமைப் பொறுக்கி!" - கரு.பழனியப்பன்

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

இயக்குனர் மஞ்சுநாத்தின் 'பொறுக்கீஸ் அல்ல நாங்கள்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கரு பழனியப்பன் பேசியது...
 

karu palaniyappan



"எனக்கு மஞ்சுநாத் அறிமுகம் இல்லை; அதனால் ராதாரவி சார்தான் எனக்கு போன் பண்ணி சொன்னார், உங்களுக்கு மஞ்சுநாத் போன் பண்ணுவார் என்று. அப்பறம் இயக்குனர் போன் பண்ணாரு. 'பொறுக்கிஸ் அல்ல நாங்கள்' படத்தோட இசை வெளியீட்டு விழா என்றார். அதுலயும் எனக்கு வெறும் 'பொறுக்கிஸ்' மட்டும் தான் காதில் விழுந்துச்சு, 'அல்ல நாங்கள்' அப்படின்றத அவரு கொஞ்சம் தேச்சுதான் சொன்னாரு. 'சரி பொறுக்கிங்க லிஸ்ட்ல நம்மள கூப்பிட்டு இருக்காங்க போல'ன்னு நான் நினைச்சுக்கிட்டேன். 'சரி அப்பறம் வேற யாரு எல்லாம் வர்றாங்க'ன்னு கேட்டேன். 'காமாட்சியைக் கூப்பிட்டு இருக்கேன்'னு சொன்னார். சரி, அடுத்த பொறுக்கி, 'அப்பறம் பியூஷ் மனுஷ்'ஷை கூப்பிட்டுருக்கேன்னு சொன்னார். 'ஆஹா..  தலைமைப் பொறுக்கி', சரி அந்த லிஸ்ட்லதான் நம்மளையும் கூப்பிட்டு இருக்காங்கனு நினைச்சி சந்தோசப்பட்டுக்கிட்டேன்".

 

 


இயக்குனர் பேசும் போது சொல்லிட்டு இருந்தாரு 'இது ஒரு சாதாரண படம்'னு. இப்படி கேட்டே ரொம்ப நாள் ஆச்சு. உலகத்துல அவனவன் நான் எடுத்ததுதான் காவியம், இந்த வெள்ளிக்கிழமையோட உலகம் மாறப் போகுதுனு சொல்லிட்டு இருக்கும் காலத்தில் இப்படி ஒருத்தரு சொல்றதுதான் அந்த படைப்பின் அடிப்படை.  எல்லாருக்கும் தெரியும் 'உலகம் ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள்'. ஆனாலும் சேக்ஷ்பியர் அதை அவர் கண்ணோட்டத்துல பார்த்து சொல்லும் போதுதான் அது காவியம் ஆகிறது. அந்த மாதிரி மஞ்சுநாத்தும் 'நான் ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன், அதை சொல்லி இருக்கேன்'னு சொல்றதுதான் பெரிய விஷயம். சமூகத்தின் மேல் இருக்கிற அதிருப்தியை நாம எல்லாரும் சொல்லணும், அவரவர் செய்கின்ற வேலையில் சொல்லணும், வேலை இல்லைனா கிடைக்கிற மேடையில் சொல்லணும், மேடை கிடைக்கிலைனா நாம் கூடுகிற இடத்தில் சொல்லணும். எங்கயாவது ஒரு இடத்தில்  நாம் சொல்லிட்டே இருக்கணும்.

 

 

piyush manush



அப்படி சொல்வதனால்தான் பியூஸ் மனுஷ் மேல் ஒரு வழக்கு போடு இருக்காங்க! அவர் எதுவும் போராட்டம் கூட பண்ணல வெறும் ஃபேஸ்புக்ல பேசியிருக்காரு. அதைப் பார்த்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வழக்கு போட்டு இருக்காரு. ஒரு காலத்தில் மக்கள் யாராவது மன்னனுக்கு பிடிக்காத வேலை செஞ்சா அவனை ஊரை விட்டு ஒதுக்கி வச்சிடுவாங்க. பட்டினிதான் பெரிய தண்டனை. அதன் பிறகு பெரிய தண்டனை ஊர் பொது குளத்தில் அவன் தண்ணீர் எடுக்கக்கூடாது, அதுக்கு அப்பறம் மனித சமூகம் நாகரிகம் அடைஞ்ச பிறகு மின்சாரத்தை தடை பண்ணுவது. ஏன்னா மின்சாரம் ரொம்ப அத்தியாவசியம், இன்று அரசாங்கம் என்ன செய்யும்னு யோசிச்சீங்கனா எந்த ஊரில் எவன் ஒருவன் உரிமைக்காக குரல் எழுப்புகிறானோ அந்த ஊரில் இன்டர்நெட் கட் பண்ணிடுவாங்க. இப்போ அடிப்படை தேவை இன்டர்நெட். இது மூலமாகத்தான் எல்லா செய்தியும் பரப்புறாங்க. அதனால் அதைத்தான் முதலில் கட் பண்ணுவாங்க.

வள்ளுவன் சொல்றான்...
'செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு'

 

 


ஒரு அரசை மக்கள் எப்போ விரும்புவாங்கனா ரொம்ப கடுமையான சொற்களால் விமர்சிக்கும்போது, உதாரணத்துக்கு ராதாரவி பேசற மாதிரி, பியூஸ் மனுஷ் பேசற மாதிரி, இந்தத் திரை படத்தின் இயக்குனர் மஞ்சுநாத் பேசுற மாதிரி, எவ்வளவு கடுமையான சொற்களாக இருந்தாலும் விமர்சனங்களாக இருந்தாலும் அது எல்லாவற்றையும் கேட்டுக்கணும். அப்படி இருக்கிற அரசாங்கம்தான் மக்களின் விருப்பமான அரசாக இருக்குமாம். இப்போ இருக்கும் அரசாங்கம் எல்லார்க்கும் விருப்பமான அரசாங்கமாக இருக்கா இல்லையான்னு நீங்களே யோசிச்சுக்குங்க..." என்றார். 

 


 

 

Next Story

பாலச்சந்தரின் சாதனை இளையராஜாவை உடைத்ததுதான்! - கரு.பழனியப்பன்

Published on 10/07/2018 | Edited on 09/07/2019

இன்று இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள். கடந்த ஆண்டு இதே நாளில் 'ஒரே ஒரு பாலச்சந்தர்' என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது கே.பாலச்சந்தர் அறக்கட்டளை. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கரு.பழனியப்பன், பாலச்சந்தர் குறித்து பேசியது...

 

karu palaniyappan



பாலச்சந்தர்தான் இளையராஜாவிடம் வந்து சேர்ந்த கடைசி இயக்குனர். இளையராஜா தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருந்த காலகட்டத்தில் இயக்குனர்கள் அனைவரும் இளையராஜாவிடம் வந்து சேர்ந்துவிட்டனர். அந்த சமயத்தில் இளையராஜா இல்லாத படங்கள் இல்லை. தயாரிப்பாளர்கள் முதலில் இளையராஜாவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டுதான் படமே தொடங்குவார்கள். டிஸ்ட்ரிபியூட்டர்களும் இளையராஜா இருந்தால்தான் வாங்குவார்கள். யார் நடித்திருக்கிறார் என்பதுகூட தேவையில்லை. இளையராஜா புகைப்படம் வைத்து 'ராகதேவனின் இசையில்'னு போஸ்டர் ஒட்டினாலே போதும், படம் விற்றுவிடும்.
 

 

balachander ilayaraja


 

kb ilayaraja



அப்படிப்பட்ட காலத்தில் கூட அவரிடம் செல்லாதவர் பாலச்சந்தர். அவர் மட்டும் எதிரே நின்றுகொண்டிருந்து வேடிக்கை பார்த்தார். அவர்தான் இளையராஜாவிடம் கடைசியாக வந்தது. அவர் இளையராஜாவுடன் சேர்ந்து, எடுத்த முதல் படம் சிந்துபைரவி. பாலச்சந்தர், 'இளையராஜாவிடம் சென்று அவருக்கு சவால்விடும் வகையில் பாட்டுக்களை வைக்கவேண்டும், அப்படியொரு கதையோடுதான் செல்லவேண்டும்' என்று காத்திருந்துள்ளார். சிந்துபைரவியில் இணைந்த இளையராஜா அதில் பாடல்களுக்கான சூழல்களைப் பார்த்து, 'இவரை தேடியல்லவா நாம் சென்றிருக்க வேண்டும்' என்று இசை அமைத்துள்ளார். இளையராஜா இயக்குனர்களை அதிகமாக பாராட்டிப் பார்த்ததில்லை. ஆனால் அவரே கர்நாடக சங்கீதம் ஒன்றைப் பாடிவிட்டு 'இது மாதிரி பாட்டெல்லாம் யாருக்கு நான் போடுவது, இது மாதிரி சிச்சுவேஷன் கொண்டு வந்தால் போடலாம்' என்று பாலச்சந்தரை பாராட்டியுள்ளார். இளையராஜா இவ்வாறு வெளிப்படையாகப் பாராட்டியது, அதுவும் அவரை விட்டு போன பின்பு என்றால் அது பாலச்சந்தர் ஒருவரை மட்டும்தான்.


இளையராஜாவுடன் இணைந்த கடைசி இயக்குனராக இருந்த பாலச்சந்தர்தான், அவரை உடைத்துக்கொண்டு வெளியே சென்ற முதல் இயக்குனரும் ஆவார். அந்த காலகட்டத்தில் இளையராஜாதான் தமிழ் சினிமா என்றாகிவிட்டது. பாலச்சந்தர்தான் முதன் முதலில் தன்னுடைய கவிதாலயா நிறுவனத்தில் இளையராஜா அல்லாத இசை இயக்குனர்களை வைத்து படம் எடுத்தவர். ஒரு படத்தில் அப்படி செய்தால் தனியாகத் தெரியும் என்று, தன்னுடைய மூன்று படங்களிலும் இளையராஜா இல்லை என்று சொல்லி அறிவித்தார். ஒன்று ரோஜா, இரண்டு வானமே எல்லை, மூன்று அண்ணாமலை. அவர் இயக்கிய வானமே எல்லை, தயாரித்த அண்ணாமலை, ரோஜா என மூன்று படங்களும் பெரு வெற்றியடைந்தது. அப்போதுதான் இளையராஜா இல்லாமல் ஒரு தமிழ் சினிமா எடுத்து வெற்றிபெறலாம் என்று எல்லோரும் பார்த்தனர். இதைத்தான் அவர் செய்ததில் சிறப்பான ஒன்றாக நான் பார்க்கிறேன். தன் வீட்டை மட்டும் உடைப்பது பெரிதல்ல அந்த மொத்த அமைப்பையுமே உடைப்பதுதான் பெரிது.