Skip to main content

“யார் மறந்தாலும் அவற்றை நான் மறக்க மாட்டேன்...” - ராகவா லாரன்ஸ் வேதனை

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

raghava lawrence

 

உடல்நிலை பிரச்சனை காரணமாக கட்சி தொடங்கப்போவதில்லை என்று ரஜினிகாந்த் அண்மையில் அறிக்கை வெளியிட்டார். இதனால் அதிருப்தியடைந்த ரஜினி மன்ற உறுப்பினர்கள், வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என்று அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ரனினி ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நேற்று (12/01/2021) ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

அதில், "நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம்

 

இன்று (12/01/2021) நான் ஒரு முக்கியமான அறிக்கையை அழுத்தமாகச் சொல்ல நினைக்கிறேன். இனிமேல், எனது அனைத்து பதிவுகளும் அறிக்கைகளும் எனது தனிப்பட்ட கருத்துகளாகவே இருக்கும். அதில், எனது குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்புபடுத்தவே மாட்டேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதோ கெட்டதோ என்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘கல்லால் அடித்தால் ஆறிவிடும் ஆனால் சொல்லால் அடித்தால் காயம் ஆறாது’ என்பார்கள். ஒரு சில குழுவினர் ரொம்பவே அடித்துவிட்டார்கள். நானே மன்னிக்க மறக்க நினைத்தாலும், சில வார்த்தைகளை மறக்க இயலவில்லை. யார் மறந்தாலும் அவற்றை நான் மறக்க மாட்டேன். காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்.

 

வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு என்னை நிறைய பேர் வற்புறுத்தினீர்கள். இயக்குனர் சாய் ரமணி வாயிலாக நிறைய வாய்ஸ் நோட்ஸை நான் கேட்டேன். இன்றளவும் நிறைய பேர், தலைவரிடம் அவருடைய முடிவை மாற்றிக்கொள்ள கேட்குமாறு என்னை வற்புறுத்துகிறார்கள். அதனாலேயே இன்று இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன்.

 

தலைவரின் முடிவால் நீங்கள் அனைவரும் அடைந்த வேதனையையே நானும் எதிர்கொள்கிறேன். தலைவர் வேறேதும் காரணம் சொல்லியிருந்தால், நான் அவரிடம் முடிவை மாற்றிக்கொள்ள கெஞ்சியிருப்பேன். ஆனால், அவரோ உடல்நிலையைக் காரணமாகக் கூறிவிட்டாரே.

 

இப்போது நாம் அவரை நிர்பந்தித்து அதனால் அவரும் முடிவெடுத்து, பின்னர் அவரின் உடல்நிலைக்கு ஏதாவது நேர்ந்தால், வாழ்நாளுக்கும் நாம் குற்ற உணர்வோடு அல்லவா இருக்க வேண்டும். அரசியலில் பிரவேசிக்காவிட்டாலும், அவர் என்றுமே எனது குருதான். அவருடன் நெருங்கிப் பேசுவதால் எனக்கு அவரின் உடல்நிலை பற்றி நன்றாகத் தெரியும். இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய உடல்நலனுக்கும் உள அமைதிக்கும் பிரார்த்தனை செய்வது மட்டுமே. அவர் என்றும் நமது பிரார்த்தனையில் இருப்பார். குருவே சரணம்" என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்