2018 ஆம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பில் காதல் என்பது குற்றமற்றது என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இருப்பினும் தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்த சூழலில் சிறப்பு திருமண சான்றிதழின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஒரே பாலின ஜோடி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள ஒரே பாலின ஈர்ப்பு திருமண வழக்குகளை விசாரிக்க முடிவு செய்தது. .
இதையடுத்து இந்த வழக்கில் தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியது. இறுதியாக 3-க்கு 2என்ற விகிதத்தில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு திருமண உரிமையை வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு குறித்துப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது, "உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மிகவும் முற்போக்காக சென்றுகொண்டிருக்கும் இந்த சமயத்தில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சட்டத்தை இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, பல உள்நோக்கம் கொண்ட தீர்ப்பாக நான் பார்க்கிறேன்" என்றார்.
இதையடுத்து சினிமா மேடையில் அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப அதற்குப் பதிலளித்த ரஞ்சித், "நல்லது தான்" என்றார்.