Skip to main content

“நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக அமையும்”- கீர்த்தி சுரேஷ் கோபம்

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

keerthy suresh

 

 

ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா (26), மாதாபூரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இரவு பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரியங்கா, தனது சகோதரி பவ்யாவை செல்போன் மூலம் தொடர்புகொண்டுள்ளார். அப்போது தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், சிலர் உதவி செய்வதாக கூறி வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். அருகில் உள்ள கடைக்கு எடுத்து சென்று சரி செய்துகொள்கிறேன் என பிரியங்கா கூறியபோதிலும், சிலர் வாகனத்தை சரிசெய்ய எடுத்து சென்றதாக போனில் கூறியுள்ளார்.

தொடர்ந்து பவ்யாவிடம் பேசிய பிரியங்கா, "தயவுசெய்து என்னுடன் சிறிது நேரம் பேசு, அதற்கான காரணத்தை பின்னர் சொல்கிறேன். நான் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறேன். பயமாக உள்ளது. என்னை முறைத்து பார்க்கிறார்கள். மிகவும் பயமாக இருக்கிறது. நான் அழுவது போல் உணர்கிறேன். எனது பைக் திரும்பி வரும் வரை தயவுசெய்து பேசிக் கொண்டே இரு" என கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே பிரியங்காவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண், எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண், பிரியங்காதான் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. மனம் நொறுங்கிவிட்டது.

ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. பேச வார்த்தைகள் வரவில்லை. யார் மீது பழி சொல்வது என்பதும் தெரியவில்லை. ஹைதராபாத்தை நான் இதுவரை மிக மிக பாதுகாப்பான நகரம் என எண்ணியிருந்தேன். அங்குதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக அமையும்.

கொடூர கொலையாளிகள் கைது செய்யப்பட வேண்டும். மனமார்ந்த இரங்கலை அந்தக் குடும்பத்துக்கு உரித்தாக்குகிறேன். இதனைத் தாங்கும் சக்தியை இறைவன் தான் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நான் கர்மாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்