Skip to main content

"மு.க. ஸ்டாலின் மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி" - கார்த்தி அறிக்கை

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

karthi thanked cm stalin minister mrk paneer selvam for Agricultural Budget

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். 

 

இந்த நிலையில் வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளதாகக் கூறி முதல்வர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தான் நடத்தி வரும் உழவன் ஃபவுண்டேஷன் சார்பாக கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு, மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. 

 

இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவற்றுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுபோன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்