Skip to main content

'ஐ' படம் தொடர்பான வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

i movie entertainment tax exemption issue update

 

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஐ'. விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. ஆனால் விக்ரமின் அர்ப்பணிப்பான நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பலரது பாராட்டையும் குவித்திருந்தது. 

 

இப்படத்தின் புதுச்சேரி விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. மேலும் 'ஐ' படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்திருந்தது புதுச்சேரி அரசாங்கம். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஐ என்பது தமிழ் எழுத்தாக இருந்தாலும் அர்த்தம் தரக்கூடிய வார்த்தையாக இல்லை. அதனால் கேளிக்கை வரி அளிக்கவில்லை” என வாதிட்டார். ஆனால் தமிழில் ஐ என்பது வியப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒற்றை வார்த்தை என்றும் அதற்கு அர்த்தம் உள்ளதால் கேளிக்கை வரி விலக்கு வழங்க வேண்டும் என்றும் நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிப்பதற்காக கேளிக்கை வரி விலக்களிப்பதாக அரசு சலுகை அளித்து வருகிறது. ஆனால் சலுகையை உரிமையாக கோர முடியாது. நிபந்தனைகள் பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்கும். கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம். தமிழில் பெயர் வைத்ததால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும்படி உரிமை கோர முடியாது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்