Skip to main content

சுசாந்த் மரணம்: சல்மான் கான் உட்பட 8 பேர் மீது வழக்கு!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
sallu


எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.

'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், வெற்றிகளையும், தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.

இதனிடையே அவரது உடல் மும்பையிலுள்ள 'வைல் பார்லே' என்னும் இடத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஏராளமான பிரபலங்கள் பங்குகொண்டனர். ஸ்ரெத்தா கபூர், கிரீத்தி சனோன், ராஜ்குமார் ராவ், விவேக் ஓபராய், ஏக்தா கபூர், வருண் சர்மா, ரன்வீர் ஷெராய், ரியா சக்கரவர்த்தி போன்ற பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சுசாந்தின் தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு திணிப்பு மற்றும் அதிகாரமிக்கவர்களாக இருக்கும் ஒருசில நட்சத்திரங்கள்தான் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக பிகாரை சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர், கரண் ஜோஹர், சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோர் மீது ஐபிசி 306, 109, 504 மற்றும் 506 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “7 படங்களிலிருந்து சுஷாந்த் நீக்கப்பட்டார் என்பதை எனது புகாரில் தெரிவித்துள்ளேன். அதுபோன்ற சூழல் உருவாக்கப்பட்டதுதான் அவர் தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்