கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது, உலக நாடுகள் முழுவதும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ள அரசு, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது ஏன் என விளக்கமளித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், "அரசு மருத்துவமனைகள்தான் பெரும்பாலான மக்களுக்கு மருத்துவ சேவையைக் கொண்டு செல்கின்றன. நிறைய மக்களிடம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா, பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து நிறைய சந்தேகங்கள் உள்ளன. தடுப்பூசி போடுவதால், எந்தவித ஆபத்தும் இல்லையென பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்தோடு நான் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன்" எனக் கூறினார்.