Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை!
 ................................................................
நாகேஷ் எனும் மகா கலைஞன்!
 ................................................................
பாரதி காவியம்
 ................................................................
தமிழ் இலக்கியத்தில் தேவதாசிகள்
 ................................................................
தேவதேவனுக்கு கவிக்கோ விருது!
 ................................................................
குறுந்தொடர்
 ................................................................
மாணவர் கவிதைப் போட்டி - 3
 ................................................................
01-12-2017ன்றைய சமூகவியலாளர்களால் விளிம்பு நிலையில் வைத்துப் பார்க்கப்படும் தேவதாசிகள் ஒரு குறிப்பிட்ட இனத்தையோ சாதியையோ சார்ந்தவர்கள் அல்ல. சங்க இலக்கியங்களின் வழி அறியப்படும் தொன்மையான ஒரு மரபுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கிய இவர்களது வாழ்க்கை சமூக தாக்கங்களுக்கு உட்பட்டு பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளது. அவற்றை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

இறைவனுக்குத் தொண்டுசெய்து இறையடிமைகளாக வாழ்ந்த மகளிர் ‘தேவரடியார்’ என்று அழைக்கப்பட்டனர். சங்க காலம் தொட்டே இலக்கியங்களில் இவ்வகை மகளிர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. காதல்வயப்பட்டோ காதல்வயப்படாமலோ  முறையாகத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த பெண்களை தமிழ்ச்சமூகம் இன்றளவும் மதிப்பதைப்போல் தேவதாசிகள் மதிக்கப்படவில்லை என்பதை அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை உற்று நோக்கும் பொழுது அவதானிக்க முடிகிறது. தொல்காப்பியர் இத்தகைய பெண்களை காமக்கிழத்தியர், காதற்பரத்தையர், சேரிப்பரத்தையர் என மூன்று பிரிவினராகக் குறிப்பிட்டுள்ளார். (இவர்களுக்குள் நுண்மையான வேறுபாடுகள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது) அகப்பொருள் விளக்கமும்

   “காதற் பரத்தையர் காமக் கிழத்தியர்
    பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியென்று
    அன்னவர்  உரியர் அவையிரண் டற்கும்’’
(அ.பொ.விளக்கம். அ.திணை நூல்-59

என்று குறிப்பிட்டுள்ளது.  பரத்தை, காமக்கிழத்தி, இற்பரத்தை, சேரிப்பரத்தை, பொதுமகள், விலைமகள், கடைகழிமகள், கொண்டி மகள், இருமணப்பெண்டு, பொருட்பெண்டு, கணிகையர், விறலியர், நடனக் கணிகை, கூத்தி, பதியிலாள், தேவரடியார், தளிச்சேரிப்பெண்டு, வேசையள், ஆடுமகள், முதுவைப் பெண்டிர், வரைவின் மகளிர், தாசி எனப் பல்வேறு பெயர்களால் அவர்கள் அழைக்கப்பட்டனர் என்பதை சங்கஇலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் மற்றும் தற்கால இலக்கியங்களின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

இவ்வகை மகளிர் பல்வேறு திறமைகளைத் தன்னகத்தே கொண்டவர்களாகவும் அழகையும் அறிவையும் ஒருங்கே பெற்று ஆளுமையுடைய வர்களாகவும்  விளங்கினர். பரத்தை பற்றி விளக்க முற்பட்ட இளம்பூரணர் “பரத்தையராவர் யாரெனின் அவர் ஆடலும் பாடலும் வல்லவராகிய அழகும் இளமையும் காட்டி, இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டு தங்காதவர்’’(தொல். பொருள்- கற்பியல் சிவலிங்கனார் பதிப்பு ப- 179) என்று குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி பல்வேறு திறமைகளைப் பெற்றிருந்தாள் என்பதையும், நாட்டியக் கலையில் சிறந்து விளங்கி அக்கலையின் உயர்ந்த பட்டமான தலைக்கோல் பட்டத்தினை கரிகாற்சோழனிடம் பெற்றாள் என்பதையும்  அறியமுடிகிறது. மேலும், ஆடல், பாடல் கலைகளில் வல்லவளாக, மொழித்திறம் மிக்கவளாக, கல்வி கேள்விகளில் சிறந்தவளாக தொண்டுள்ளம் உடையவளாகவும் விளங்கினாள் என்பதையும் அறியமுகிறது.

சங்க காலத்திலும், காப்பிய காலத்திலும் பொருட் பெண்டிராகவும் போகம் தருபவர்களாகவும் பார்க்கப் பட்ட இப்பெண்கள் பக்தி இலக்கியக் காலத்தில் கடவுளுடன் இணைத்துக் காணும் நிலைக்கு உயர்ந்தனர். அஃதாவது இறைத்தொண்டு செய்வதை மட்டுமே தன் தலையாய கடமையாக நினைத்து இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்தனர்.

பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் கோயில்களில் இறைப்பணியைத் தேவரடியார்கள் செய்துவந்தனர் என்பதை கல்வெட்டுக்களால் தெரிந்து கொள்ளமுடிகிறது. பல்லவர் காலத்தில் கோயில்களில் இசையும் நடனமும் போற்றி வளர்க்கப்பட்டன. இக்காலத்தில் கலைகளில் தேர்ச்சிபெற்ற தேவரடியார்கள் கோயில்களில் நடனம் நிகழ்த்தியதை இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் காலத்து காஞ்சிபுரம் கல்வெட்டு தெரிவிக்கின்றது

    இத்தளிக்குத் தட்டழிவு இவரைக் கொண்டு
    கொட்டுவான் அமுதராயன் நாற்றுக் கனி
    இவனுக்கும் மாடவர் மகன் மாத சர்ம்மனுக்
    கும் இருவருக்கும் உதகப் பூர்வ்வம் செய்து
    இரண்டு கொற்று குடுத்தோம் பெரு நங்கை
    பொன்னடி அதிமானி மாதேவி குமரடி
    மாணிக்க சுத்தி, சிந்தடி குமரடி நங்காடை
அணியா தித்தி முத்தி அவ்வடி விஞ்சடி பாதடி
குலக்கொடி அவ்வடி நங்கன் மூதியங்கன் சீதேவி                                                                                  (சி.எம்.முருகேசன், வரலாற்றில் தேவதாசிகள் ப -99)

சோழர்கள் காலத்தில் தேவதாசியர் கோவிலில் நடனமாவது உயர்நிலையைப் பெற்றது. ஒவ்வொரு கோயிலிலும் இறைப்பணி செய்வதற்காக எண்ணற்ற தேவதாசிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுடைய பொருளாதார மேம்பாட்டிற்காக கோயில் நிலங்கள் அனுபவபாத்தியமாக வழங்கப்பட்டன. அவர்களது வாழ்க்கை பொருளாதாரத்திலும் சமூகத்திலும் மேம்பட்டிருந்தது. சோழர் காலத்தில் பெரும் போர்கள் நடைபெற்றன.

அப்போரில் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் அரசுப் பணி செய்யவும், கோயில்பணி செய்யவும் பணிக்கப்பட்டனர்.

தேவரடியாராக இருந்த பெண்கள் அனைவரும் நாட்டிய மாடும் பெண்களாக மட்டும் இருந்தார்கள் என்று கூற முடியாது.

இத்தொழில் கைவராத அல்லது வயது சென்ற பெண்கள் கவரி வீசவும், திருப்பதிகம் பாடவும், கோயிலைத் தூய்மை செய்யவும், நெற்குற்றும் தொழிலுக்கும் பயன்படுத்தப்பட்டனர். (மேலது ப
-101) என்பதையும், “நெல் குற்றும் பணிக்காக செந்தாமரைக்கண்ணன் என்பவர் திருவெற்றியூரிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு பெரியநாயகி, மாலி, கவுத்தாழ்வி, திருவாண்டி, வடுகாழ்வி என்னும் ஐந்து பெண்களை தானமாக அளித்துள்ளார்’’ (மேலது ப-101) என்பதையும் அறியமுடிகிறது

இந்த பெண்கள் கோயிலைச் சார்ந்திருந்த இடங்களில் இருந்ததால் தளிச்சேரிப் பெண்கள் என்று அழைக்கப்பட்டனர். தளி- கோயில், சேரி -சேர்ந்து வாழுமிடம் என்பது பொருள். சோழர் காலத்தில் ஒவ்வொரு சிவன் கோயில்களிலும் பணியாற்றுவதற்கெனத் தளிச்சேரிப் பெண்கள்  தனித்தனியே நியமிக்கப்பட்டிருந்தனர்.

சோழர் காலத்தில் கோயிலில் பணிபுரிந்த தேவதாசிகள் அனைவரும் பரத்தையின் வழிவந்தவர்கள் என்றோ, போர்க் கைதிகளாக வந்தவர்கள் என்றோ கூறமுடியாது. ஏனெனில் இக்காலகட்டத்தில் குலமகளிரும் தாமே விருப்பத்துடன் இறைபணியாற்ற தேவதாசியாக வந்தனர்.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார் தம் மகள் நீலாதேவியை திருவரங்கக் கடவுளுக்குத் தேவதாசியாக அர்ப்பணித்ததையும், உறையூர் மன்னர் நந்தசோழன் மகள் சோழவல்லி இறைவனுக்குத் தன்னைத்
தானே அர்ப்பணித்துக்கொண்டதையும்’’ (மேலது. ப -115)
அறியமுடிகிறது.

பொதுவாக குடும்பத்தில் முதலில் பிறக்கும் பெண்ணை கோயிலுக்கு அர்ப்பணிக்கும் பழக்கம் சாதிவேறுபாடின்றி பெரும்பான்மை மக்களிடம் இருந்தது. நேர்த்திக்கடன் செய்ய பெண் பிள்ளைகள் இல்லாதபோது பெண்களை விலைக்கு வாங்கி கோயிலுக்குத் தேவரடியாராக அர்ப்பணித்துள்ளதையும், வறுமையின் காரணமாக ஆண்களும் பெண்களும் செல்வந்தர்களிடமும், கோயில்களிலும், மடங்களிலும் தம்மை விற்றுக்கொண்டனர் என்பதையும் அறியமுடிகிறது.

இராஜராஜன் காலத்தில் ஒருவன் நான்கு பெண்களை 700 காசுகளுக்கு வாங்கி திருவாலங்காட்டு இறைவனுக்குத் தேவரடியாராக அர்ப்பணித்ததை அவ்வூர் கல்வெட்டு தெரிவிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தின்போது வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்ட குடும்பங்கள் தம்மைத் தாமே கோயிலில் விற்றுக்கொண்டனர். பெண்கள் தேவதாசிகளாகவும் ஆடவர்கள் பிற பணிகளைச் செய்யவும் நியமிக்கப்பட்டார்கள்.

(மேலது ப-105)

கி.பி. 1002-இல் திருவிடந்தை பெருமாள் கோயில் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ வராக தேவர் கோயிலுக்கு 12 மீனவ குடும்பங்கள் தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டனர் என்பதையும் “தஞ்சையில் மேலப்பெரும் பள்ளத்தில் உள்ள திருக்கோயிலுக்கு நாங்கூர் அந்தணன் ஒருவன் பதிமூன்று காசுகளுக்கு ஆறுபேர்களை அடிமைகளாக விற்றான் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏழுபேரை முப்பது காசுகளுக்கும் வேறு பதினைந்து  நபர்களை முப்பதுகாசுகளுக்கும் விற்றுக்கொண்டு அவனையும் அவன் குடும்பத்தாரையும்கூட வழி வழி அடிமைகளாக அக்கோயிலுக்கு சாசனம் செய்து கொடுத்தான்’’ (மேலது ப-107)  என்பதையும் அறியமுடிகிறது.

சைவ, வைணவக் கோயில்களில் தேவதாசிகள் பணிசெய்ததால் அவர்களை இனங்காண இலச்சினை இடும் வழக்கமும் சோழர்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

சிவன் கோயில்களில் பணிபுரியும் தேவதாசிகளுக்கு சூல இலச்சினையும், திருமால் கோயில்களில் பணிபுரிந்த தேவதாசிகளுக்கு சக்கர இலச்சினையும் பொறிக்கப்பட்டன.

கோயில்களில் இறைப்பணி செய்து வந்த தேவதாசிகள் இசையையும் நாட்டியத்தையும் வளர்க்கக் கூடியவர்களாக இருந்தனர். இவர்கள் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உரிமை பெற்றிருந்தார்கள்;. விரும்பினால் திருமணம் செய்து கொள்ளவும் உரிமை பெற்றிருந்தனர் என்பதையும் அவதானிக்கமுடிகிறது. திருவாரூர் கோவிலில் இறைப்பணி செய்துவந்த தேவதாசி மரபைச் சார்ந்த பரவை நாச்சியாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் செய்து கொண்ட செய்தியை பெரியபுராணம் கூறுகிறது.

கி.பி.1225 ஆம் ஆண்டில் வேணாட்டை ஆண்ட மன்னன் ஒரு தளிச்சேரிப் பெண்ணை மணந்துகொண்டான் என்பதையும், விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயரின் மனைவி சின்னதேவி என்பவர் தேவதாசி மரபிலிருந்து வந்தவர் (மேலது ப-110) என்பதையும் அறியமுடிகிறது.

  தாசிகள் இராஜதாசிகள், தேவதாசிகள் என இருவகையினர். அரசவையில் ஆடும் தாசிகள் இராஜதாசிகள். ஆலயங்களில் ஆடும் தாசிகள் தேவதாசிகள். அரசவையில் ஆடும் தாசிகள் ஆலயங்களிலோ, ஆலயங்களில் ஆடும் தாசிகள் அரசவையிலோ ஆடமுடியாது. ஏதாவது ஓரிடத்தில் மட்டுமே ஆடும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். அதேபோல் ஒருவர் உரிமையில் பிறர் தலையிடமுடியாது என்பதும் இங்கு சுட்டத்தக்கது. தேவதாசிகள் காலை, உச்சிகால பூஜை மற்றும் இரவு பூஜையின்போது தேவாரம்பாடவும், நாட்டியம் ஆடவும் பணிக்கப்பட்டிருந்தனர்.

   சோழர் ஆட்சியில் இருந்த  சாதிகள் வலங்கை இடங்கை என இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. வலங்கை பிரிவினருக்கு பல்வேறு சலுகைகளும், இடங்கைப் பிரிவினருக்கு பல்வேறு வரிகளும் விதிக்கப்பட்டன. இவ்விரு பிரிவுகளுக்கும் தனித் தனியே கோயில்கள் இருந்ததோடு தேவதாசிகளும் தனித்தனியே நியமிக்கப்பட்டார்கள். வலங்கை இடங்கைப் பிரிவினிடையே இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய பூசல்கள் ஏற்பட்டன. கோயில்கள் இடிக்கப்பட்டன. இதனால் சோழராட்சியின் பிற்பகுதியிலேயே தேவதாசிகளின் வாழ்க்கை சரியத்தொடங்கியது எனலாம். 

பாண்டியர்காலத்தில் தேவதாசிகளின்  வாழ்வாதாரம் மேலும்  பாதிக்கப்பட்டு நிலைகுலைந்தது. வீர பாண்டியன் காலத்தில் நடந்த மாலிக்காபூர் படையெடுப்பால் தமிழகம் அமைதியிழந்தது. பெரும்பான்மையான அந்நியப் படையெடுப்புகள் பெரும்பாலும் கோயிலைக் குறிவைத்தே நடந்துள்ளன. மாலிக்காபூர் படையெடுப்பின்போது அப்படை வழியில் கண்ட கோயில்களையெல்லாம் சூறையாடியதோடு இடித்துத் தரைமட்டமாக்கியது. பாண்டியநாடே தீக்கிரையானது. இந்நிலையில் கோயில்களை நம்பி வாழ்ந்தவர்களின் நிலை கேள்விக்குறியானது. தேவதாசிகள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவித்தனர்.

பாண்டியர்காலத்தில் சிதிலமடைந்த கோயில்கள் சிற்றரசர்களாலும் நாயக்க மன்னர்களாலும் சீரமைக்கப் பட்டன. கோயில்களில் மீண்டும் தேவதாசிகள் நியமிக்கப்பட்டார்கள். இதனால் இவர்களது வாழ்க்கை ஓரளவிற்கு சீர்பெற்றது. சோழர் காலத்தைப் போலவே நாயக்கர் காலத்திலும் பெண்களைப் பொட்டுக்கட்டி கோயிலுக்கு விடும் பழக்கம் இருந்துள்ளது. இப்பெண்கள் திருவிழாக்காலங்களில சுவாமி புறப்பாடு நடைபெறும் பொழுது வீதிகளில் நடனமாடிச் சென்றுள்ளனர்.

      ஓரளவு சீர்பெற்றிருந்த இவர்களது வாழ்வு விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்தில் முடிவுக்கு வந்து ஐரோப்பியர் வருகையின் தொடக்கத்தில் தாழ்நிலை அடைந்தது.

இன்றைய ஆய்வாளர்களால்  விளிம்பு நிலை ஆய்வுகளின் கீழ் இடம்பெறும் தேவதாசிகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு நிகரான மனிதர்களாகக் கருதப்படவில்லை. அவர்களுக்கான வாழ்வு முறை மட்டும் கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றாகக் கருதப்பட்டது என்பதை சமூகவியல் ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரும் இப்பழக்கம் தொடர்ந்தது. “பெரும்பாலான இளம் தேவதாசிகள் எண்ணற்ற சடங்குகளின் மூலமாகக் கொண்டுவரப்பட்டனர். அவை பிராமணர்களின் திருமணச் சடங்குகளையொத்து இருந்துள்ளது. இந்தச் சடங்கு பிராமணர்களின் வீடுகளில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்களோடு ஒத்து இருந்தது. பருவம் அடைவதற்கு முன்பாக கடவுளுக்கு மணம் முடித்து வைக்கப்படும் இந்த இளம் தேவதாசிகளுக்குக் கோவில் பூசாரிகள் தாலி கட்டுவர். இதைத்தான் பொட்டுக்கட்டுதல் என்று முதன்முதலில் குறிப்பிடுகின்றனர். இவர்கள் பருவம் எய்திய பிறகு அப்பகுதி நில உரிமையாளர்கள் மற்றும் அறங்காவலர்கள் தலைமையில் சடங்கு என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தொடர்ந்து திருமணம் சார்ந்த சடங்கு நிறைவேற்றப்படுகிறது. இது அவர்கள் கடவுளுடன் இணைவதை குறிக்கும் வகையில் சில சம்பிரதாய நிகழ்ச்சியாக இச்சடங்கு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போதுதான்  அப்பெண்கள் ‘நித்திய சுமங்கலி’ என்ற தகுதியைப் பெறுகிறாள். அதிலிருந்து அந்த தேவதாசி அவளைத் திருமணம் செய்துகொள்ளாமலேயே உடலுறவு கொள்வதற்காகவும் அவளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும் வேண்டி பாதுகாப்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெறுகின்றாள். இத்தகைய பாதுகாவலர்கள் கோவில் வருமானத்தை கண்காணிப்பவர்களாக இருந்தனர். பிராமணர்களும் பிராமணரல்லாத உயர்சாதி நில உடைமையாளர்களும் இத்தகைய பாதுகாவலர்களாக இருப்பது ஒரு வழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. (அ. மார்க்ஸ், கொ. வேலுசாமி, விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதைகளும் தொகுதி ப-95)மன்னர்களாலும் சில நில உடைமையாளர்களாலும் பெருந்தனவந்தர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்ட தேவதேசிகளின் முறை வளர்ச்சிபெறுவதற்குக் காரணமாக இருந்தது. தேவதாசி குலம் உருவாகியது பற்றி க. திருநாவுக்கரசு கூறும்பொழுதுதமிழ்நாட்டுக் கோயில்களில் நடனமாடும் பெண்களே தாசிகள் அல்லது தேவதாசிகள் எனப்படுவோர் ஆவார். அவர்கள் நடனமாடியும் பாட்டுப்பாடியும் வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்களுடைய தொழில் உலகிலேயே மிகத்தொன்மையான தொழில் என்று கருதப்படுகிறது. தொடக்கத்தில் வேற்றுசாதிகளைச் சேர்ந்த ஆண்- பெண்களின் கூடாவொழுக்கத்தின் மூலம் பிறந்த பெண்களே கோயில்களில் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர் ஆனால்  நாளடைவில் மற்ற வகுப்பினர்கள் கோயில்களுக்குப் பெண்களைத் தானமாக வழங்கியதாலும் தேவதாசிகள் குலம் உருவாகியது. (க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க வேர்கள் ப-188) என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

தேவதாசி என்னும் இம்முறை தமிழகத்தில் மட்டுமல்லாது தென்னகத்தில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களுடன் இருந்துள்ளதை அறியமுடிகிறது. ஆந்திராவில் போகம்கள் மற்றும் சனிகள் என்றும் தென்கன்னடத்தில் மாய்வி என்றும் அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெற்ற சடங்குகளில் பொட்டுகட்டும் முறையில் வேறுபாடுகள் இருந்தன.

ஆந்திராவில் பெல்லாரி மாவட்டத்தில் மேற்குக் கன்னடத் தாலுக்காவில் ‘போயர்கள்’ என்ற வகுப்பினர் தங்கள் குலத்தில் ஆண்வாரிசு உருவாகவில்லையென்றால் அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களின் மணமாகாத பெண்ணை கடவுளுக்கு மணமுடித்துவிடுவார்கள்.

அதற்கு அடையாளமாக ஒரு தாலியும் காலில் மிஞ்சியும் மெட்டியும் அணிவிக்கப்பட்டிருக்கும். அன்று முதல்அவள் பொதுமகளாகிவிடுகிறாள். ஆனால் அவள்,அவள் சாதிக்குக் கீழுள்ள சாதியில் யாருடனும் உறவுகொள்ளக் கூடாது. அவள் கடவுளுக்கு மனைவியாக்கப்பட்டுவிட்டபடியால் அவள்ஒருபோதும் கைம்பெண்ணாகமாட்டாள். வீடுகளில் நடக்கும் மங்கள நிகழ்ச்சிகளில் அவள் அழைக்கப் படுவாள். அதுமட்டுமல்ல தாலியை அவள் கையால் எடுத்துக்கொடுப்பதைக் கூட புனிதமாகக் கருதினார்கள். (க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க வேர்கள் ப-188)

தேவதாசிகளின் வாழ்க்கை சீர்குலைந்ததற்கான காரணங்களைப் பற்றி ஆய்வாளர் நர்மதா குறிப்பிடுகையில் “ஆலய வழிபாட்டோடு சேர்க்கப்பட்டு புனிதமாகவும் சிறப்பாகவும் கருதப்பட்டு வந்த நாட்டியக்கலை அரசியல், சமூக, பொருளாதாரப் பண்பாட்டுச் சீர்குலைவுகளாலே தேங்கி மங்கத் தொடங்கியது. அதில் பல மாசுகள் படிந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை இது ‘சதிர்’, ‘சின்னமேளம், தேவதாசி நடனம்’, தேவரடியார் ஆட்டம்’ என்று அழைக்கப்பட்டுவந்தது’’ (நர்மதா தமிழகத்தில் தேவரடியார் மரபு பன்முக நோக்கு, ப-112) என்னு குறிப்பிட்டுள்ளர்.

சங்க காலம் தொட்டு பல்வேறு பெயர்களுடனும் பல்வேறு வாழ்வியல் திருப்பங்களுடனும் தேவதாசிகள் வாழ்க்கையை எதிர் கொண்டனர் என்பதையும் அவர்களுடைய வாழ்வியல் திருப்பங்களுக்கு பொருளாதாரமும், சமூகமும் மையமாக இருந்தன என்பதையும்  அவதானிக்கமுடிகிறது. சங்ககாலத்தில் இழிநிலையில் பார்க்கப்பட்டு,  பல்லவர்காலம் தொடங்கி சோழர்காலத்தின் இடைக்காலம் வரை இறைத்தொண்டையே முதன்மையாகக் கொண்டு செல்வாக்குடன் மிளிர்ந்த இவர்களது வாழ்க்கை பாண்டியர் காலத்தில் சரியத் தொடங்கி, நாயக்கர் காலத்தில் மீண்டும் புத்துயிர்பெற்று, விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் நிலைகுலைந்து, ஐரோப்பியர் காலத்தில் இழிநிலையை அடைந்தது எனலாம்.

 பார்வை நூல்கள்

1. வரலாற்றில் தேவதாசிகள், சி.எஸ்.முருகேசன் குறிஞ்சி வெளியீடு     2009

2. திராவிட இயக்கவேர்கள், க. திருநாவுக்கரசு, மணிவாசகர் பதிப்பகம்   1991

3. விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்(தொகு)   இ.மார்க்ஸ் வா.வேல்சாமி நிறப்பிரிகை வெளியீடு

4. தொல்காப்பியம், சிவலிங்கனார் பதிப்பு

5. அகப் பொருள்விளக்கம் எழில் பதிப்பகம்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :