Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
Logo
இனிய உதயம்
வசீகரப் பாடல் தந்த வல்லபன்!
 ................................................................
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே!
 ................................................................
மு.வ.வின் கடித இலக்கியம்
 ................................................................
சந்திரிகாவின் மாவீரர் நாள் சிறப்புக் கவிதை!
 ................................................................
அகராதி கவிதைகள்
 ................................................................
கருத்துச் சுதந்திரம் எங்கே?
 ................................................................
01-11-2017அது 1956-ஆம் ஆண்டின் தொடக்கம்.

மாணவர் ஒருவர் இரண்டாம் ஆண்டு தமிழ் ஆனர்ஸ் படித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை சீர் கெடுகிறது. என்ன காரணம்? அவர் இரவில் அஞ்சல் பிரிப்பகத்தில் வேலை செய்துகொண்டு பகலில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். மருத்துவர் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

ஒன்று இரவு நேரப் பணியை விட்டுவிட வேண்டும். இல்லையென்றால் படிப்பதை நிறுத்திவிடவேண்டும். மாணவர் தடுமாறிநிற்கிறார். இனி என்ன செய்வது? நேராக நம் அறிஞர் பெருந்தகை மு.வ.விடம் செல்கிறார். நிலைமையைச் சொல்கிறார்.

உடனே அந்தப் பெருமகனார்,

"உனக்கு வரும் மாதச் சம்பளம் இருநூறு ரூபாய்தானே? என்று கேட்டுவிட்டு அந்தத் தொகையை நான் உனக்குத் தருகிறேன்.  நீ படித்து முடித்துவிடு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு மாதமும் அவர் கேட்காமலேயே அவருடைய வகுப்புக்குத் தேடிச் சென்று பணத்தைக் கொடுத்தார். அந்த மாணவர் வீட்டிற்கும் அஞ்சலகப் பிரிப்பகத்துக்கும் கல்லூரிக்கும் பேருந்தில் தினமும் 15 மைல்கள் சென்று வரவேண்டியிருந்தது. காலம் வீணாயிற்று. சைக்கிள் வாங்குவதற்கு அந்த மாணவருக்கு வசதியில்லை. மாணவரின் நிலைமையை அறிகிறார் மு.வ. அடுத்தநாள் அந்த மாணவரை அழைத்து ரூ 200-க்கு காசோலையைத் தந்து,  "இந்தப் பணத்தில் உடனே ஒரு நல்ல சைக்கிள் வாங்கிவிடு. பணம் சற்றுக் கூடுதலானாலும்என்னிடம் கேள். தருகிறேன். டைனமோ உள்ள சைக்கிளாகப் பார்த்து வாங்கு. எண்ணெய் விளக்கு காற்றிற்கு நிற்காது. அணைந்துவிடும்.' என்கிறார். பின்னாளில் அந்த மாணவர் தென் அமெரிக்கா கயானா பல்கலைக்கழகத்தில் பணியேற்றார்.அவர் பெயர் டாக்டர். ஈ.ச.விசுவநாதன். இப்படி எத்தனையோ மாணவர்களுக்குத் தாயாய் தந்தையாய் இருந்தவர்தான் நம் மு.வ. அந்த மாணவருக்கு 14.10.1959-ல் எழுதிய கடிதத்தில் வாழ்க்கை மிகப் பெரிய கலை. அதில் தேர்தல் கடமை. வாழத் தெரிந்தவர்களாக விளங்குவதே சமுதாயத்திற்கு நாம் செய்யத் தக்க தொண்டு. எப்படி எனின், நம்மைப் பார்த்துப் பிறர் கற்குமாறு, நாம் ஒரு நூலாகப் பயன்படுவோம். என்று அழகாக வழிகாட்டுகிறார்.(மு.வ. நினைவலைகள் பக் 35)

அப்படி எழுதியதற்கு ஏற்ப வாழ்ந்தவர் அவர்.  நறுக்குத் தெறித்ததைப் போலச் சுருக்கமான நடை. எடுத்துக்கொண்ட பொருளைக் குறித்து நேரடியாகப் பேசும் கலை, எதுதேவையோ அதைமட்டுமே முன்னிலைப்படுத்துவது என்று அவர் எழுத்துகள் தனித்திறன் படைத்தவையாக விளங்கின. அன்றைய காலகட்டத்தில் மு.வ.வின் நூல்களைப் படிக்காத மாணவர்கள், குடும்பத்தலைவிகள் இருந்திருக்க மாட்டார்கள். திருமணப் பரிசு என்றாலும் அவருடைய நூல்கள்தான். மனதை மேம்படுத்தக்கூடிய எழுத்துகளாக அவை இருந்தன. அவருடைய நூலைக் கையில் வைத்திருப்பதையே மாணவர்கள் ஒரு பெருமையாக நினைத்த காலம் ஒன்றிருந்தது.

அறுபத்திரண்டு ஆண்டுகள்தான் வாழ்ந்தார். ஆனால் தன் 85 நூல்களில்  அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 1939-ல் வெளிவந்த அவரின் முதல்நூல் "குழந்தைப் பாட்டுகள்' இறுதியாக 1979-ல் வெளிவந்த நூல் "நல்வாழ்வு'. கவனித்துப் பாருங்கள் குழந்தைப் பாட்டுகளில் தொடங்கிய அவரின் எழுத்துப் பயணம் நல்வாழ்வை நோக்கி மக்களை நகர்த்திக் கொண்டேயிருக்கிறது. பல தளங்களில் அவர் முன்னோடியாக விளங்கியவர்.

தமிழில் கடித இலக்கியத்தின் முன்னோடி என்றால்அது மு.வ. தான். கற்பனையான கடிதங்களின் வழி நாட்டை, மொழியை, குடும்பத்தை, சமூகத்தைக் குறித்த தன் கருத்துக்களைத் துணிந்து முன்வைத்தவர் அவர்.  தன் மாணவர்களுக்கு எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்களையெல்லாம் படித்துப் பார்த்தால் அத்தனையும் கருத்துக் களஞ்சியங்கள். சுருக்கமான, செறிவான தமிழ்நடை. அஞ்சலட்டையில் எழுதப்பட்ட செய்திகள். பளிச்சென்று சொல்கிற உத்தி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

எனவே கடித இலக்கியத்தின் முன்னோடி அறிஞர் மு.வ. தான் என்கிறார் அவருடைய மாணவர் இரா. மோகன். இந்தக் கடிதங்கள் எல்லாம் கற்பனையான கடிதங்கள்தான். நண்பர்க்கு எழுதியவை மட்டும் ஒன்பது கடிதங்கள். மற்றவையெல்லாம் எட்டுக் கடிதங்கள். இந்த நான்கு நூல்களிலும் சேர்த்து மொத்தம் முப்பத்து மூன்று கடிதங்கள். இந்தக் கடிதங்களின் வழியே நாம் அன்றைய நாட்டு நிலையை மட்டுமல்ல, இன்று நம்முடைய நிலையையும் எண்ணிப் பார்க்க முடியும்.

"அன்னைக்கு' என்று எழுதிய கடித இலக்கியத்தில் மிகத் தெளிவாகதமிழர்கள் உணர்ச்சி அளவில் ஊக்கம் மிகுந்தவர்கள். வாய்ச்சொல் அளவில் வீரம் மிகுந்தவர்கள். இந்த இரண்டும் மட்டும் பெற்றவர்களால் ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது. கடமை ஒழுங்கு ஒன்று வேண்டும். இந்த ஒன்று மட்டும் இருந்து, மற்ற இரண்டும் இல்லாதிருந்தாலும் கவலையில்லாமல் தமிழ்நாடு  எப்போதோ தலையெடுத்திருக்கும் என்கிறார். (இரா.மோகன் - மு.வ. வாசகம் பக் 28) 

இந்தக் கருத்தை எப்போது எழுதியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும். 1948-ல் எழுதியிருக்கிறார். அதோடு அண்ணல் காந்தியடிகள் மறைவைப் பற்றிய செய்தியைஉலகம் கண்ணீர் விடுகின்றது. ஒரு வீடு, ஒரு நகரம், ஒரு நாடு கலங்கவில்லை. உலகம் கலங்கி உருகுகின்றது. வீடுதோறும் இழவு. நகரந்தோறும் சாக்காடு நேர்ந்ததுபோல் இருக்கின்றதே. ஒவ்வொருவர் முகமும் வாடிச் சுருங்கிவிட்டதே என்று பதிவு செய்கிறார்.

ஏதோ அன்றைக்குத் தமிழன் பொற்காலத்தில் இருந்ததைப் போலச் சிலர் பேசுகிறார்களே அதை இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். அதனால்தான் 1949-ல் தம்பிக்கு என்று எழுதிய நூலின் முன்னுரையில் தமிழர்க்கு நல்ல பண்புகள் பல உண்டு. ஆயினும் பொதுவாகத் தமிழரின் வாழ்வு நைலிந்துள்ளது என்று கூறலாம். காரணம் என்ன? தமிழரிடையே சில குறைகளும் இருத்தல் கூடும் அன்றோ? இந்த எண்ணமே இத்தகைய கடிதங்கள் எழுதத் தூண்டியது. தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காணல் திருவள்ளுவர் நெறி. நம் குற்றம் குறைகளை நாமே உணர்தல் நலம். குற்றம் உணர்வான் குணவான் என்பது நன்மொழி. (தம்பிக்கு முன்னுரை) நல்லவன் என்பதற்கு இன்றைய நாளில் என்ன பொருள்? இளிச்சவாயன் என்று பொருள். தந்திரங்கள் மகுடம் சூடிக்கொள்ளும் காலகட்டத்தில் நல்லவராக இருப்பது என்பது நகைப்பிற்கிடமானது. எனவே வல்லவராகவும் விளங்க வேண்டும். அதனால்தான் நம் பாரதி "வல்லமை தாராயோ- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே' என்று பாடினார் நல்லவராக மட்டும் இருந்தால் என்ன ஏதென்று எவருமே திரும்பிப் பார்க்க மாட்டார்கள். வல்லவர்களாக இருந்தால்தான் எங்கே நமக்கு வைத்து விடுவானோ ஆப்பு என்று கவனித்துப் பார்ப்பார்கள். அன்றைக்கே மு.வ. எழுதுகிறார்தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும் நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனிமேல் வல்லவர்களாகவும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல தன்மையோடு வல்லமையும் சேரப் பெற்று வாழவேண்டும், (தம்பிக்கு பக் 14) என்கிறார். நம்முடைய தாழ்வுக்கு என்ன காரணம்? அதையும் அவரே சொல்கிறார்.

நல்ல தன்மை தேடுகிறோம். வல்லமையைத் தேடவில்லை. அதனால்தான் தாழ்வுறுகிறோம். (தம்பிக்கு பக் 15) என்கிற மு.வ. பொதுமக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் சேர்த்து எண்ணித் தேவையை உணர இன்னும் தெரியவில்லை. அவர்கள் களிமண்ணாய்த் திரண்டு கிடக்கிறார்கள். யார் யாரோ நீர் சேர்த்துப் பிசைந்து தமக்கு வேண்டியவாறெல்லாம் உருவங்களைச் செய்துகொள்கிறார்கள் (தம்பிக்கு பக் 17) என்கிறார்.

இன்றைக்கும் அப்படித்தானே நடக்கிறது. யார் யாரே பிசைந்து கொண்டிருக்கிறார்கள். களிமண்ணாகத்தான் இன்னும் நாம் இருக்கிறோம்.

இதற்கு என்ன தீர்வு? அதை மிக நுட்பமாகவும் ஆழமாகவும் மு.வ. விளக்குகிறார்.

சொன்னவர் யார்? அவருடைய வாய்க்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது உறவு உண்டா என்பதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லையானால் தாழ்வான வாழ்க்கைதான் வாழ வேண்டும்.

இந்த ஏமாந்த தன்மையைப் பகைவர்கள் பயன்படுத்திக் கொண்டு ஒன்றில் நன்மை செய்து ஒன்றில் நஞ்சை ஊட்டிவிடுவார்கள்.(தம்பிக்கு பக் 21) கொள்கை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சொன்னவர் யார் என்ற ஆராய்ச்சியும் செய்ய வேண்டும் (பக் 22) என்கிறார்.

அதுமட்டுமல்ல இந்திய நாடோ பல மொழியார் வாழும் நாடு. ஒரு மொழி பேசும் மக்களை உடையது அன்று. ஆகவே இதை ஒரு குடும்பம் என்று சொல்வதை விடப் பல குடும்பங்களின் தொகுதி என்று சொல்ல வேண்டும். இதைப் புறக்கணிக்கவோ தடைசெய்யவோ முயல்வது நல்லதன்று என்று குறிப்பிட்டார்.

வீட்டில் நடைபெறும் எச்செயலுக்கும் பார்ப்பனர்களை அழைத்துச் சடங்குகளைச் செய்யக் கூடாது என்பது மு.வ.வின் கொள்கை. பார்ப்பனர்கள் நடத்திவைக்கும் திருமணங்களுக்கு மு.வ. செல்ல மாட்டார். அவ்வாறு சென்றாலும் பார்ப்பனர்கள் சொல்லும் மந்திர ஒலி வெளியில் கேட்டால் மண்டபத்திற்குள் நுழையாமல் வீட்டிற்குத் திரும்பிவிடுவார். கொள்கையிலே உறுதி உடையவர். எப்போதும் எதற்காகவும் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் என்று குறிப்பிடுகிறார் அவருடைய மாணவர் மாஸ்கோ சொக்கலிங்கம். 

மாநிலம் பிரிவினைக்கு ஏற்ற அளவில் மக்கள் தொகையிருந்தால், அது ஆட்சிமொழியாவதற்கு முற்றிலும் தகுதியுடையதாகும். அதைத் தடுப்பது எந்த அரசாயினும் அதை வல்லரசு என்று கூறலாமே தவிர நல்லரசு என்று கூற முடியாது (தம்பிக்கு பக் 35) என்று எழுதினார் மு.வ.பக்கத்தில் கேரளத்தில் தாய்மொழியைக் கட்டாயப்பாடமாக்கியிருக்கிறது அந்த அரசு. வங்கத்தில், மகராஷ்டிரத்தில், கர்நாடகத்தில் என்று எங்கும் அவரவர் தாய்மொழியைக் கட்டாயப் பாடமாகப் படித்துத்தான் தீர வேண்டும். இங்கே அந்த நிலை இருக்கிறதா? நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்குத்தான் என்னவழி என்பதையும் கடிதத்தில் சொல்கிறார்சிறுபான்மையர் எந்த முயற்சி செய்தாலும் ஒற்றுமையும் கட்டுப்பாடும் கட்டாயம் தேவை. இந்த இரண்டும் இருந்திருந்தால் தமிழர் வல்லமையான இனம் என்ற எண்ணம் டில்லிக்கு ஏற்பட்டிருக்கும். அதற்கு மாறாகவே இப்போது உள்ளது. இப்போது தமிழரைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கின்றார்கள்? மூளையர் சிலரும் முரடர் சிலரும் ஏமாளிகள் பலரும் உள்ள கூட்டம் தமிழர் என்றுதான் நினைக்கின்றார்கள். தமிழரில் மூளையரை விலைகொடுத்து வாங்கிவிடுவது, முரடரை நயத்தாலும், பயத்தாலும் அடக்கிவிடுவது- இந்த இரண்டும் செய்தால் போதும் மற்ற தமிழர்கள் பேசாமல் கிடப்பார்கள். இப்படித்தான் வெளியார் நம்மைப் பற்றிக் கருதுகிறார்கள்

1949-ல் எழுதிய கடிதம். இன்றைய நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது என்கிறீர்களா? உண்மைதான். என்ன காரணம்? ஏன் இந்த நிலைமை? அதையும் அவரே சொல்கிறார்தமிழன் முதலில் தன்னை நினைக்கிறான். தன்னையே நினைக்கிறான். பிறகுதான் சில வேளைகளில் மேற்போக்காக மொழியையும் நாட்டையும் நினைக்கிறான். இவ்வளவு தன்னலம் முதிர்ந்திருப்பதால்தான், மிகப் பழங்காலத்திலிருந்தே பண்பாடு மிக்க இனமாக விளங்கியிருந்தும் இன்று தாழ்வான நிலையில் இருக்கின்றது (தம்பிக்கு பக் 39) என்கிறார்.

அதனால் தமிழர் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய்த் திரண்டு தொகை வண்மையைப் புலப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும். (பக் 54) என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.

தமிழின், தமிழரின் நலம்நாடிச் சிந்தித்துக் கொண்டேயிருந்தவர் மு.வ. தன் மாணவர்களோடு தனிப்பட்ட பேச்சில் கூட அதைப்பற்றிப் பேசியவர் அவர். ஒருமுறை குறிப்பிட்டார் அகில இந்தியக் கட்சிகளின் தமிழகத் தலைவர்கள், மேலிடத்தார் ஆணைப்படி நடக்க வேண்டி இருப்பதால், அவர்களில் பலரும் தமிழகத்துக்குச் சேரவேண்டிய உரிமையான பங்குகளைக் கூடக் கேட்டு வாங்கத் தவறிவிடுகிறார்கள்.

இதனாலும் தமிழ்நாட்டின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன என்றார். (ஈ.ச.விசுவநாதன் மு.வ.நினைவு அலைகள் பக் 102) இந்த உரையாடல் நடந்தது 10.12.1954-ல். இன்றைக்கும் இதுதானே நிலை?

 எண்ணிப் பாருங்கள் ஒன்றுதிரண்டு நின்றால் அது காவிரிப் பிரச்சனையாக இருக்கட்டும், பொது நுழைவுத் தேர்வாக இருக்கட்டும், சமூகநீதியைக் காப்பதற்காக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் எவர் நமக்கு எதிராக நிற்க முடியும்? ஆனால் என்ன நேர்கிறது?

தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும். நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலை
யாதே. நீ தேட வேண்டியது தொண்டு..தொண்டுக்கு முந்தி, தலைமைக்குப் பிந்தி என்பது உன் நெறியாக இருக்கட்டும் என்கிறார் மு.வ. (தம்பிக்கு பக் 64).

ஆனால் நிலைமை என்ன? தலைமைக்கு அவரவர் ஓடிக் கொண்டிருப்பதால் தான் நாதியற்றுப் போய் நிற்கிறான் தமிழன். யார் யாரோ நம் முதுகில் சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்க்கு எழுதிய கடிதத்தில் செய்தித்தாள் குறித்து மு.வ. எழுதுவது அத்தனையையும் இன்றைய காட்சி ஊடகங்களுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

தமிழ்மொழிக்கும் தமிழநாட்டுக்கும் துரோகம் செய்யாமல் எழுதினால்தான் இங்கே செய்தித்தாள் பரவ முடியும் என்ற நிலையை மக்கள் ஏற்படுத்த வேண்டும். காசு கொடுத்து வாங்குவோரின் கைக்கு இந்த ஆற்றல் இருப்பதைக் காட்டிவிட்டால் போதும். அந்தச் செய்தித்தாள்கள் மறுவாரமே திருந்திவிடும். உடனே அவை நாட்டுக்கும் மொழிக்கும் பயன்படும் கருவிகளாக மாறி அமைந்துவிடும் (நண்பர்க்கு பக். 85) என்கிறார்.

இந்தக் கருத்தை நாம் காட்சி ஊடகங்களுக்கும் எதிராகக் கைக்கொள்ள வேண்டிய காலகட்டமாக இருக்கிறது. எல்லா மூட நம்பிக்கைகளையும் காட்சி ஊடகங்கள் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அளவற்ற ஆசை, அகங்காரம், குறுக்கு வழிகள், குடும்பச் சிதைவுகள் என்று ஒவ்வொரு வீட்டையும் நரகமாக்கிக் கொண்டிருக்கின்றன. விவாதங்கள் எல்லாம் வேண்டாத வாதங்களாக இருக்கின்றன.

மு.வ.வின் வழிபாடு எப்படிப்பட்டது என்பது தெரியுமா? அவரே சொல்கிறார்.

உருவ வழிபாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் கோயிலுக்கும் அவ்வளவாகப் போவதில்லை. ஆனால் சில உருவங்களில் எனக்கு நிறைய ஈடுபாடு உண்டு. புத்தர் உருவம், நடராஜர் உருவம், தட்சிணாமூர்த்தி உருவம் இவற்றில் தனி ஈடுபாடு உண்டு. எப்போதாவது கோயிலுக்குப் போய் தட்சிணாமூர்த்தி உருவத்தைப் பார்த்தால், அங்கேயே சில நிமிடம் கண்மூடி இருந்து ஏதாவது ஒரு நல்ல பாட்டை மனதுள் எண்ணிப் பார்ப்பேன். இதுதான் என் வழிபாடு.(இரா.மோகன்- அறிஞர் மு.வ. பக்212)

ஆக, எப்படி உளமார வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறார்.

  1950-ல் எழுதிய தங்கைக்கு நூலில் குடும்ப வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான எளிய வழிகளைச் சொல்லிச் செல்கிறார்.

இந்தக் காலத்தில் ஒரு துன்பத்தையோ ஒரு குறையையோ எண்ணித் தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டால் யாரும் முன்னேற முடியாது. அவர்களை நம்பியவர்களும் கடைத்தேற முடியாது. நிறை குறை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, எதற்கும் தயங்கி நிற்காமல் ஓடுகின்ற கடிகாரம் போல் கடமைகளை அஞ்சாமல் செய்கின்றவர்கள்தான் இந்தக் காலத்தில் தலைமைப் பதவிக்குத் தக்கவர்கள். குடும்பத்தலைவியும் இப்படி இருந்தால்தான் வாழ்வு நன்றாக நடக்கும் (தங்கைக்கு பக் 63) என்கிறார்.

தன் மாணாக்கர்களுக்கு எழுதிய கடிதங்கள் எல்லாம் அவரவர்க்குத் தனித்தனியே வழிகாட்டியவை. எவருக்கும் வழிகாட்டக் கூடியவை. மாணவர்களுக்கு அவர் எப்படி வழிகாட்டினார் அவர்களையெல்லாம் எப்படி மேலேற்றினார் என்பதே வியக்க வைக்கிறது.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு என் வாழ்க்கையின் வளம்தான் தெரியும். ஆனால் இந்த வாழ்வைப் பெற நான் அடைந்த துன்பங்களை, விட்ட கண்ணீரை, உழைத்த உழைப்பை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இரவைப் பகலாக்கி உழைத்த என் உழைப்பை, நான் வாழ்வில் கடைப்பிடித்த கட்டுப்பாட்டை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு வளமான வாழ்வுக்குப் பின்னால் ஒரு சோகக்கதை உண்டு. பொறாமைப்படுபவர்கள் இதனை எண்ணிப் பார்ப்பதில்லை என்பார் மு.வ. (ஈ.ச.விசுவநாதன் மு.வ.நினைவலைகள் பக் 104).

இப்படி மாணவர்களுக்கு மட்டுமல்ல. நண்பர்களின் துயரங்களுக்கும் தன் எழுத்தால் மருந்திட்டார். இலங்கை எழுத்தாளர் செ.கணேசலிங்கன் 1960-ம் ஆண்டு வாக்கில் மிகுந்த துயரத்துக்கு உள்ளானார். இரவில் உறங்க முடியவில்லை. ஆறுதல் சொல்லக் கூட இலங்கையில் நண்பர்கள் யாரும் இல்லை. நம் மு.வ. வுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார். உடனடி யாக அஞ்சலட்டையில் பதில் கடிதத்தை எழுதி அனுப்புகிறார் மு.வ.குழந்தைகளுடன் விளையாடுங்கள். பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு ஓரிரு வாரங்களைக் கழியுங்கள். மனநோய் ஆறிவிடும் (மு.வ.நினைவுகள் பக்48- செ. கணேசலிங்கன்) கடிதம் தாங்கிச் சென்ற செய்தி இதுதான்.  குழந்தைகளோடு விளையாடுங்கள் என்கிற ஒரு வரியிலேயே செ.கணேசலிங்கன் அமைதியானார்.

இப்படி அறிஞர் மு.வ.வின் கடித இலக்கியம் பற்றி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். ஒவ்வொரு கடிதத்திலும் அவர் வாழ்ந்த வாழ்வின் அனுபவம் தெறித்து விழுந்தது. படிப்போர்க்கு வழிகாட்டியது. வாழ்க்கையில் ஒளியேற்றியது. தன் மாணவர்களிடம் (10.12.1954) அவர் சொன்னார்நாம் வாழ்ந்தால், சமுதாயம் நம்மைத் தேடிவரும். நாம் வீழ்ந்தால் நம்மைப் பற்றிச் சமுதாயம் கவலைப்படாது. ஆதலால் முதலில் உங்களுக்காக வாழ்ந்து, உங்கள் வாழ்வை முதலில் செப்பனிடுங்கள். நீங்கள் கட்டுப்பாட்டோடும் உறுதியோடும் உழையுங்கள். பெரிய வெற்றி கிட்டாவிட்டாலும், நீங்கள் உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிட்டாமல் போகாது. (ஈ.ச.விசுவநாதன்- மு.வ.நினைவலைகள் பக் 105)

இது அவருடைய அனுபவமொழி. முயற்சி மெய்வருத்தக் கூலிதரும் என்பதற்கேற்ப வாழ்ந்து காட்டியவர், புகழோடும் பொருளோடும் தலை நிமிர்ந்து நின்றவர் மு.வ. அவர் படைப்புகளை இன்றைய தலைமுறை படித்துப் பார்க்க வேண்டும். ஒளிவீசும் வாழ்க்கை அவர்களுக்காக இருப்பதைக் கண்டுகொள்வார்கள்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : N.Muthukumar Date & Time : 11/25/2017 10:57:26 AM
-----------------------------------------------------------------------------------------------------
மிகவும் அற்புதமான பதிவு
-----------------------------------------------------------------------------------------------------