Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
Logo
இனிய உதயம்
காலை நிலாவும் மாலைச் சூரியனும்...
 ................................................................
காதல் அடைவது உயிரியற்கை!
 ................................................................
போட்டியில் வென்ற மாணவர் வைரமுத்து!
 ................................................................
பெரியாரும் பெண் விடுதலையும்
 ................................................................
சொல்ல மறக்காத கதை
 ................................................................
கவிக்கோ வீட்டில் புதையல்!
 ................................................................
கிராமத்துக் கவிதைக்காரர்...
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வேடிக்கை பார்க்கிறோம்!
 ................................................................
01-09-2017""இதற்காகவே இத்தனை நாள் காத்திருந்தேன் என்பதைப்போல் காலம், ஒரு புயல் காற்றைப்போல் வந்து பெரிய அதிர்வுகளைச் செய்துவிட்டுப் போய்விடும்!'' பூவும், பிஞ்சுமாய், நின்ற செடிகளையும், இளம் மரங்களையும் சாய்த்து விட்டுப்போகும் அது, சில தருணங்களில் கிளைகள்தோறும் கனிகள் சிவந்து குலுங்க நின்றிருக்கும் விருட்சங்களையும் வேரோடு தள்ளி, அள்ளிக்கொண்டும் சென்று விடுவதுண்டு...!

இதைத்தான் அண்மையில் நிகழ்ந்த கவியரசு நா. காமராசன், கவிக்கோ அப்துல்ரகுமான் ஆகியோரின் இறப்புகள் எனக்கு நினைவூட்டுகின்றன. இவர்கள் இருவரையும் நான் ஓரளவுக்கு அறிவேன்! இதைப் போன்றே என்னையும் அவர்கள் அறிவார்கள்!

கவிதைத் துறையில் என்னுடைய முன்னோர்கள் என்று அடையாளப்படுத்தும் வரிசையில் முக்கியமாக இந்த இருவரின் பெயர்களையும் அழுத்தமாக நான் குறிப்பிடுவேன். இருவரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு பிறந்ததும், வளர்ந்ததும், தமிழ் இலக்கியம் பயின்றதும், திராவிட இயக்கத்தின்மீது தணியாத பற்றுக் கொண்டதும் எல்லாமே அந்த மண்ணில்தான்...! அதனால்தான் அடுத்தடுத்தே இவர்களின் அமரத்துவம்கூட அமைந்துபோனதோ என நினைத்து நெஞ்சம்  கலங்கத்தான் செய்கிறது.மரபுச் சமவெளிமீது விம்முகிற ஜீவநதிப் பிரவாகம்போல் பாய்ந்தவர்! சூர்யகாந்தி, கருப்பு மலர்கள் என்னும் இரு கவிதைத் தொகுதிகளின் மூலம் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உள்ளத்தில் இவர் ஏற்படுத்திய தாக்கம்  எண்ணியெண்ணி வியக்கத்தக்கது.

""ஆடியிலே விதைத்தாலும், அறுவடைகள் நடந்தாலும்... அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆளாளாய்ப் பறந்தபடி, தண்ணீர்க்குடம் சுமக்கும் எங்கள் தாய் மாமன் கிராமம்'' என்று குறித்த அந்தப் பாசமிகு வரிகளை உள்ளடக்கிய கவிதை, வாசகர்களின் உள்ளங்களில் தத்தமது சொந்தக் கிராமங்களைக் கொண்டுவந்து நிறுத்திற்று.

"தபால்காரனின் மரணம்' என்னும் கவிதை அவன் மறைந்த சேதியைச் சுமந்து வந்த அந்தச் சாயங்காலப் பொழுதை கண்முன்னால் அசைய வைத்தது.

இயற்கையின் மீதும், அதன் அழகின்மீதும் இயல்பாகவே மனதைப் பறிகொடுத்த இவர், தனது பூர்வீக கிராமத்தை அதன் சுற்றுப்புறத்தை அங்கே வாழும் மக்களை, அவர்களிலிருந்து தேர்வுசெய்த கதாபாத்திரங்களைக் கவித்துவ மணம் கமழ இயங்க வைத்த சிறப்பு, இவரது கவிதைகளுக்கு தனித்துவத்தை வாரி வழங்கியது.

மலையாளக் கவிஞர் வயலார் ராமவர்மா, ஆந்திரக்கவிஞர் ஆத்ரேயா போன்றவர்கள் திரைப்படப் பாடல்களில் செய்த சாதனைகளை, தகழியின் "செம்மீன்' நாயகியான கருத்தம்மாவின் சரிதத்தைப் பற்றிய சுவடுகளை தனது  கவிதைகளுக்கு கருப்பொருளாக்கிக் கொண்டதும் மறக்க வியலாதவை...!

"நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்! ஆடை வாங்குவதற்காக' என்று விலை மகளிரைப் பேசவைத்த பாங்கும், கறுப்பின மக்களை "கருப்பு மலர்'களாகப் பார்த்த கவின்மிகு எண்ணமும் இந்தக் கவிஞரை புதுக்கவிதைத் துறைக்குப் புதியதொரு பாய்ச்சலையும், அமோக விளைச்சலையும் தருபவர் இவர் என்று ஒருசேரப் பேசவும், எழுதவும் வைத்தது. நிறைய இளம் கவிஞர்களைப் போர்ப்படையைப் போல் உருவாக்கிற்று.

"சட்ட ரீதியான அரசியல் முடிவுகளை இந்த நாட்டின் நீதிமன்றங்கள் நிராகரித்தபோது எனது ரத்த ஓட்டத்தின் வெப்பநிலை உயர்ந்திருப்பதை மருத்துவக் குறிப்புகள் காட்டின' என்று சொன்ன நா. காமராசன் அவர்களிடம் "உங்கள் உடல் நலத்தைச் சற்று கூடுதல் கவனமெடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா' என்று நான் சொன்ன நினைவுகளை இப்போது எண்ணிப்பார்க்க நேரிடுகிறது.

உவமையாலும், உருவகத்தாலும், குறியீட்டாலும், படிமத்தாலும்... புதுக்கவிதையில் நிகழ்த்திய புதுமையைத் தனது பாடல்கள் வாயிலாகவும் நிறையவே செய்யவேண்டும் என்று விரும்பியவர்.

அதற்கேற்ப முயன்று அவற்றையும் தன்வசப்படுத்தினார்.

தனது அழகிய, அர்த்தம் ததும்பும் கருத்துக்களை திரையிசை வாகனத்தில் ஏற்றி அனுப்பியதில் நல்ல வெற்றிகளையும் கண்டார்! சில நூறு பாடல்களில், பளிச்சென்று மனங்களைக் கொள்ளை கொண்ட பாடல்களென நிறைய சொல்லலாம்.

"போய்வா நதியலையே! இவள் பூச்சூடும் நான் பார்த்துவா.' என்று துவங்கும் காதல் கீதம் அதில் முதன்மைச் சான்றாகும். "வா... வா நதியலையே! ஏழை பூமிக்கும் நீர் கொண்டு வா' என்னும் அடிகளில் வரும் "ஏழை' எனும் சொல்லைச்சேர்க்க சொன்னவர்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆவார்!

"கனவுகளே ஆயிரம் கனவுகளே! காதல் தேவனின் தூதர்களே' என்னும் பாடலும்; "இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்! விண்ணிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான் காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல் காற்றினிலே ஒன்றைத் தூதுவிட்டான்' என்னும் தாலாட்டுப் பாடலும் மறக்க இயலாத சிறப்பு கொண்டவை.

..."விளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான்' பாடலும் "சிட்டுக்குச் செல்லச் சிட்டுக்கு சிறகு முளைத்தது' பாடலும் "ஓ மானே... மானே மானே உன்னைத்தானே' பாடலும் "சுட்டும் விழிச் சுடரேவா...! பட்டு வண்ணத் தளிரேவா...'' என்று அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் இடம்பெற்ற பாடலும்... இவரின் கைவண்ணத்தில் மலர்ந்த ரோஜாக்கள் அன்றோ!

தனது கவிதைத் தொகுதிகளுக்கு வைத்த பெயர்களிலே கூட "தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும்' "சகாராவைத் தாண்டா ஒட்டகங்கள்', "பொம்மைப் பாடகி', "பட்டத்து யானை' என்று செம்மாந்த தமிழைச் சொக்கவைத்தவர். மேடைப் பேச்சிலும், கட்டுரைகளிலும் தனது சீரிய கருத்துக்களைத் துணிச்சலாக வெளியிட்டதன் மூலம் பல்வேறு விமர்சனக் கணைகளையும் எதிர்கொண்டவர். "சொர்க்க வசந்தத்தின் ஊமைக்குயில்' கட்டுரைத் தொகுதி அதில் குறிப்பிடத்தக்கது.

இளம் வயதிலேயே "நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன்' என்று எழுதியதும், தனது கல்லறை எப்படிப்பட்ட இடத்தில் எவ்விதமாக அமையவேண்டும் என்று நினைவூட்டியதும் அப்போதும், இப்போதும் கண்ணீரை வரவழைக்கிறது.

கண்ணதாசன், தாமரை, வானம்பாடி இதழ்கள் மூலம் எனக்கு அறிமுகமான நா. காமராசன், நான் பணியாற்றிய "தாய்' இதழில் எழுதிய சொற்சித்திரங்கள் மூலம் என்னோடு பழகவும் வாய்ப்புகள் அமைந்தன! எனது சிறுகதைகள், நாவல்கள் மூலம் அவரின் நெஞ்சில் இடம்பிடித்தேன்.

கடிதங்களை மிக அபூர்வமாகத்தான் எழுதுவார்! அப்படி அவர் 1983-ல் எனக்கு கோவை முகவரியிட்டு எழுதிய கடிதத்தை அவரது மறைவுச் செய்தியைக் கேட்ட துயரத்தோடு தேடியெடுத்துப் படித்தேன். ""கவிதா தேவி ஒரு அழகிய மலரை, தமிழ் இலக்கிய உலகிற்கு கொடுத்து அதன் நறுமணத்தை முழுவதும் நுகர்வதற்கு முன்பே...! நேரம் ஆகிவிட்டது. போதும்'' என்று அவளே வானுலகில் இருந்து வாங்கிக்கொண்டாள் என்றுதான் நெகிழ்வோடு எண்ணிக்கொண்டேன்.

"கறுப்பு மலர்கள்', "கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்' ஆகிய தொகுதிகள் பெற்ற வெற்றிகளை விஞ்ச வேண்டும் எனும் கவிதா வீச்சினை மு. மேத்தா அவர்களுக்குள் உண்டாக்கி "கண்ணீர்ப் பூக்களை' வழங்குமாறு செய்த பாதிப்பை நான் இந்த நேரத்தில் மறந்துவிட இயலாது!

நா. காமராசன் அவர்களையும், தமிழ்க்கவிதை உலகம் மறப்தென்பது இயலாது.

கவிதை மரபு கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு தந்தை வழியே இவருக்கு கிடைத்தது. அரபு, உருதுக் கவிதைகளை இளம் வயதிலேயே ஊன்றிப் படிக்கும் வாய்ப்பு, தீவிரமான உழைப்பு, தடுமாற்றமில்லாத நிதானம் என ஒன்றாய்ச் சங்கமித்து "பால் வீதி'யை இவரின் பர்ண சாலையாக்கியது. இலக்கிய இதழ்களில் மட்டுமன்றி, வெகுஜன இதழ்களில் இடையறாது இவர் எழுதிய கவிதைப் படையல்கள் எல்லாத் தொகுதிகளிலும் இவர் ஒருவரே நின்று பெரும் வெற்றி பெற்றவராக ஆக்கிக்காட்டியது.

""என்ன வெகுமானம் வேண்டுமென்று கேட்டால் ரகுமானைத் தாருங்கள் என்பேன்'' என்று, கூறும்படி கலைஞர் மு. கருணாநிதியை தனது கவிதைகளுக்கு சுவைஞர் ஆக்கினார் அப்துல் ரகுமான்!

இவர் அளவுக்கு கவியரங்கங்களை ஜொலிக்க வைத்தவர்கள் என்றால் ஈரோடு தமிழன்பன் போன்ற ஓரிருவரைத்தான் அந்த இடத்திற்குக் கட்டியம்கூற இயலும்...!

வாணியம்பாடி இசுலாமியக் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றிய காலங்களில், மாணவர்களைக் கவிஞர்களாக்கி, "முஷைரா' எனும் கவிராத்திரிகளில் அணையாத தீபங்களாக, கவிச்சுடர்களை ஏற்றி வைத்து ரசிகர்களைக் கவிஞர்களாக்கி இவர் செய்த வித்தகங்கள் ஏராளம்!

"குறியீடு, படிமம்' ஆகியவற்றை தனது கவிதைகளில் முன்னோடியாகப் பயன்படுத்தி அதன் நுட்பங்களை மாநில எல்லைகளைத் தாண்டி ஏந்திச் சென்றவர் இவரே எனலாம்! "கவிராத்திரியில் அப்துல் ரகுமான் மேடைக்கு அழைத்துச் செல்ல குழுமி நிற்கும் இளைஞர்களின் கூட்டத்தையும், மேடையில் இவரது குரலில் கவிதை ஒலிக்கும்போது அங்கே குவியும் மலர்ச் செண்டுகளையும் கவிஞர் மு. மேத்தா மூலம் கேள்விப்பட்டு நான் வியந்திருக்கிறேன்.

இவர் எழுதி கையில் வைத்திருக்கும் காகிதங்களில் இருந்து, மயக்கும் இந்த மந்திரச் சொற்கள் சரஞ்சரமாக புறப்பட்டு வருகையில், திறக்கப்படாத மனக் கதவுகள் திறப்பதையும், அவிழ்க்கப்படாமலிருந்த முடிச்சுகள் இயல்பாக இளகி அவிழ்வதையும், மொக்குகள் மலர்களாகிக் குவிந்து மகிழ்வதையும் நானும் அனுபவித்திருக்கிறேன்.

மனித நேயத்திலும், இயற்கை வனப்பிலும், சமுதாய மாற்றத்திலும் மனம் லயித்த இந்தக் கவிஞரோடு பழகும் வாய்ப்புப் பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியசாலிகளே ஆவர்.

"வானம்பாடி' இதழில் இவரின் மொழிபெயர்ப்பில் வந்த "அங்குமிங்கும் வசந்தம் இல்லை! சவத்தின் மீதொரு வண்ணத்துப் பூச்சி' எனும் கவிதை உள்பட உலகின் முக்கிய கவிஞர்கள் பலரின் கவிதைகளும் இவர் வழியே கவிதையுலகிற்குப் பரிச்சயமாயின.

"வேலிக்கு வெளியே தலையை நீட்டும் எனது கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே! பூமிக்கு அடியில் நழுவும் எனது வேர்களை என்ன செய்வாய்?' என்று கேட்ட இவரின் கவிதைக்குரல் மனித குலத்தின், உழைக்கும் இனத்தின் ஒப்பற்ற குறியீட்டுக் குரலாய் காலூன்றி நிற்கிறதல்லவா...!

பாரதி, பாரதிதாசன் ஆகியோரிடத்தில் கவிதை ஆளுமையைக் கற்றுக்கொண்ட இவரின் உள்ளம் சமகாலக் கவிஞர்கள் பலரது வெற்றிகளையும், சாதனைகளையும் மனமுவந்து போற்றி வரவேற்றது குறிப்பிடத்தக்கது. திரைப்படப் பாடல்களில் சாதனைகள் நிகழ்த்திய கவிஞர் கண்ணதாசன் அவர்களது கவித்திறமையை உரிய தருணங்களில் சிலாகித்துக் கூறியவர் இவர்!

அவர் ""மயக்கம் எனது தாயகம்! மௌனம் எனது தாய்மொழி'' போன்ற பாடல்களில் தன்னிகரற்ற தனது ஆற்றலை அழுந்தப் பதித்த விதத்தை இவர் ரசித்துச் சுவைத்தவர். 

மரபுக் கவிதையின் சிந்து, கண்ணி போன்றவற்றையும், "கஜல்கள்' போன்ற பிறமொழிப் புதுமைகளையும் சோதனை முயற்சிகளாக அல்லாமல் முன்மாதிரியாக நின்று எழுதிக்காட்டியவர். "மரபிலிருந்து புதுமைகள் பூக்கும்! புதுமைகள் பிறகு மரபுகளாகும்' என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

தான் கொண்ட கொள்கையில் சிறிதும் வழுவாமல், தெளிந்த சிந்தனையோடு, ஒழுக்கம் பிறழா வாழ்வோடு, திடமான தைரியத்தோடு எழுதுகோலை இந்தச் சமுதாயத்தைப் பயன்படுத்தும் ஒப்பற்ற கருவியாகவே இறுதிவரை ஏந்தி நின்றவர் அப்துல் ரகுமான் என்றால் அது மிகையில்லை!

விருதுகளால் கௌரவம் பெறாமல், அந்த விருதுகளுக்குத் தனது சாதனைகளால் கௌரவம் தந்தவர்! இவரின் ஒவ்வொரு நூலுமே, தமிழ் மொழிக்கு இவர் சூட்டி மகிழ்ந்த விருதுகள் என்றாயின.

ஞானம் பாடிய இந்தக் கவிதை வானம்பாடி தமிழ் இலக்கிய வானில் என்றென்றும் தனது ஒளி வீசும் சிறகுகளோடு பறந்து கொண்டேயிருக்கும்.

"எழுத்தும் தெய்வம்! எழுதுகோலும் தெய்வம்!' என்னும் மகாகவி பாரதியின் வாக்கும்; "எனது ஆறாவது விரல்' என எழுதுகோலைக் குறிப்பிட்ட அப்துல் ரகுமானின் நாக்கும் வான்வெளியிலிருந்து என்றென்றும் ஒலிக்கும் மணியோசைகள் ஆகியுள்ளன.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :