Add1
logo
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் || காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்! || முன் நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை? - அமெரிக்கா அறிவிப்பு || கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா! || ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு! || வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி! || சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி || முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள் || மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தோனி ‘லைக்’ செய்த ட்வீட்டால் சர்ச்சை! || ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ||
Logo
இனிய உதயம்
காலை நிலாவும் மாலைச் சூரியனும்...
 ................................................................
காதல் அடைவது உயிரியற்கை!
 ................................................................
போட்டியில் வென்ற மாணவர் வைரமுத்து!
 ................................................................
பெரியாரும் பெண் விடுதலையும்
 ................................................................
சொல்ல மறக்காத கதை
 ................................................................
கவிக்கோ வீட்டில் புதையல்!
 ................................................................
கிராமத்துக் கவிதைக்காரர்...
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வேடிக்கை பார்க்கிறோம்!
 ................................................................
01-09-2017விளையும் பயிர் முளையிலே தெரியுமென்பார்கள். அதற்கேற்ப கவிப்பேரரசு வைரமுத்துவின் வெளிச்சம் நாற்பது வருடங்களுக்கு முன்பே, அவர் மாணவராக இருந்தபோதே அவரது எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

ஆலந்தூரில் கவிதை வட்டத்தின் அமைப்பாளர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் 14-11-1971-ல் பரிசுக் கவியரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தார்.

கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் "கேள்விக்குறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற பரிசுக் கவியரங்கில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் கவிஞர்கள் வந்து பங்குபெற்றனர்.

அவர்களுள் அன்று பச்சையப்பர் கல்லூரி மாணவராக இருந்த இன்றைய கவியரசு இரா.வைரமுத்து அவர்களும் இருந்தார். அன்று பாடியவர்களில் அவரே முதல் பரிசு பெற்றார்.அவர் பாடிய கவிதை இணைக்கப்பட்டுள்ளது.

கேள்விக்குறி
(தமிழ் வாழ்த்து)

பொன்னிடத்தில் எழில் பூவிடத்தில் மணம் கண்ணிடத்தில் ஒளி வாங்கி,
பண்ணிடத்தில் இசை பாகிடத்தில் சுவை விண்ணிடத்தில் புகழ் வாங்கி,
தன்னிடத்தில் உள தண்டமிழ் அமுதை மண்ணிடத்தில் தரு வாயே!
உன்னிடத்தில் மகன் ஓங்கிவளர்ந்திட எண்ணுளத்தில் வளர் தாயே!
(வேறு)

கருத்துப்பா சொல்லிக் கரும்பைப் போலினிக்கும்
விருத்தப்பா பாடி விருந்தென்று நான்சொல்ல,
நிறுத்தப்பா என்று நீவிர் சொலும்முன்னம்
கிறுக்குப்பா முடித்துக் கிளம்பிடுவேன்; பொறுத்தருள்வீர்.
கேள்விக் குறிபோலக் கீழே பணிந்திங்கே
கேள்விக் குறிபற்றிக் கிண்ணென்று பாடுகிறேன்.

கருவுக்குள், அன்னை கருப்பப் பைக்குள்ளே
உருவாகும் போதே ஒரு கேள்விக் குறிபோலச்
சுருண்டு கிடந்து தொல்லுலகில் பிறந்தபினும்
இருண்டு கிடப்போர் இவ்வுலகில் எப்போதும்
புரியாத வாழ்வில் புதுக்கேள்விக் குறியாவார்

சரியான விடையின்றிச் சருகாய்ப் பறந்திடுவார்.
சரியா? தவறோ? தாம்வாழ்ந்த வாழ்வென்னும்
புரியாத கேள்விப் புதிருக்குச் சரியான
விடைகண்டே இந்த வியனுலகில் வாழ்ந்தவர்கள்
படைகொண்ட  மன்னர்போல் பாரில் புகழுற்றார்.

சுட்டாலும் விடைகள் தோன்றா கேள்விபல,
தொட்டாலே விடைகட்டும் சுகக்கேள்விக் குறியுமெது?
பட்டுப்பூங் கட்டில் பருவக் கதைபேச
மொட்டுப்பூங் கன்னிசொலும் மோகக் கவிகேட்க
முதலிரவில் தொட்டு, முத்தமிட்டுச் சுவைபார்க்க
மதகரிபோல் வந்தமகன் மங்கை அவள்நாணிக்
கேள்விக் குறிபோலக் கீழே குனிந்திருந்தால்
தோல்விப் புயலாலே தூரச் செலமாட்டான்.
பட்டுத் தளிர்முகத்தைப் பக்குவமாய் அவன் கொஞ்சம்
தொட்டுப் பார்த்தாலே சுகமான விடைகிட்டும்.
கிண்ணென்று தழுவக் கேள்விக் குறிமாறும்
அண்ணாந்து பார்ப்பாள்: ஆச்சரியக் குறியாவாள்.

துப்பாக்கி யாவேண்டும் தும்பைப் பூமலர?
எப்போதும் விடைகிட்டும் எளிதான கேள்வியிது.
உடைந்திட்ட மண்பாண்ட உருவம்போல், நல்லவிடை
கிடைக்காத நாட்டைக் கேள்விக் குறியென்றே
கச்சிதமாய்ச் சொன்னார் கடைசியடி வெண்பாவில்
முச்சீர்தான் என்றால் முழுதும் மெய்தானே?
கேட்டில் விழுந்துவொரு கேள்விக் குறியான
நாட்டில் அறிவு நடுவானில் பயிராகும்.
கழுத்து வளைந்தங்கே கருத்து குனிந்திருக்கும்
கழுத்து நிமிர்ந்தாலே கருத்தும் நிமிர்ந்திருக்கும்

பால்வெண்மை என்று பகருதலும் அந்நாட்டைக்
கேள்விக் குறியென்றே கிளற்றுதலும் சரிதானே?

வெடித்துவிட்ட எரிமலையே விழியில் விழுந்துவிட
வடித்துவிட்ட கண்ணீரும் வைகை நதியாக
வாழ்கின்ற ஏழைக்கு வருங்காலம் விடையில்லாக்
கேள்விக் குறிதானே? கிடைக்குமா நல்லவிடை?
விழுந்துவிட்ட பொழுதுசொல வெங்கதிரோன் வந்தாலும்
மடிந்துவிட்ட தாமரைப்பூ மண்ணில் மலராது.
கேள்விக் குறிபோலக் கீழ்வளைந்தே உழைத்துமவன்
நாள்விடிந்தி டாது நரகம் மறையாது.

வாக்கியத்தின் முடிவில் வகையோடு அக்குறியை
ஆக்கியவன் சொன்ன அந்தரங்கத் தானென்ன?
புரையோடிப் போன புரியாத வாழ்க்கையிலே
சிறைப்பட்ட மனிதனின் சிந்தைத் தத்துவத்தை
ஆட்ட முடிவில்தான் அளவிட்டுச் சொலமுடியும்
கேட்டுத் தெளிவடையக் கேள்விக் குறியுதவும்.
உறுதியாய் முடிவில்தான் உண்மை தெளிவாகும்
இறுதியில் அக்குறியை இட்டது பொருத்தந்தான்.

கற்றாழை முளைத்த கரையோரந் தானே
நற்றாழை மரமும் நகைத்தே நிற்கிறது?
ஒப்பாத கேள்விபல உலகில் இருந்தாலும்
எப்போதும் சில கேள்வி இனிய பயனளிக்கும்.
கேள்விக் குறிபோலக் கீழே குனிந்துலகை
வாழ்விக்கும் பயிரின்றி வையம் நிலைபெறுமா?

அசையின்றிச் சீரில்லை அதுபோல நற்கேள்விப்
பசையின்றி வாழ்வில் பயணம் எங்குமிலை.
ஒரேஒரு சொல்லில் உலகின் விழிதிறக்கக்
கிரேக்கப் பெருமண்ணில் கேள்விக் குறியிட்டான்.
தேனென்ற தத்துவம் தினஞ்சொல்லி வந்தமகன்
ஏனென்று கேட்டே இடுவென்றான் இக்குறியை.
கூன்நின்ற இந்தக் குறியை இட்டதனால்
வான்சென்ற போதும் வையப் புகழ்கொண்டான்.

இதய நிலத்திற்கே எண்ணத்தால் நீரிட்(டு)
உதயக் கதிர்போல் உள்ளெழுந்த சிந்தனையாம்
பயிரை வளர்த்து, பக்குவமாய் நீரிட்டு
உயிரான தத்துவத்தை உற்பத்தி செய்வதெலாம்
தேள்கொடுக்குப் போன்று சிறுவளைவு கொண்டிருக்கும்
கேள்விக் குறியென்றால் கிஞ்சித்தும் தவறில்லை.

வாழை ஈன்றெடுத்த வண்ணப்பூ நிலம்பார்த்துக்
கீழே குனிந்திருக்கும் கேள்விக் குறிபோல.
உருவில் பெரிதாக உள்ளேன் எனைவிட்டுச்
சிறுமுல்லைப் பூவைத்தான் சேலாடும் விழிமாதர்
அணிகின்றார் ஏனென்றே அடங்கிக் கேட்டதற்கே
குனிந்தே ஒருகேள்விக் குறிபோல நிற்குமது.
ஏனென்று கேளென்றே இயல்பாய் அதுநின்றே
தானின்ற தத்துவத்தைத் தரணிக்குச் சொல்லிநிற்கும்.

நாணில்லை என்றால் நாமதனை வில்லென்று
பேணி மகிழ்வோமா? பெருமை கொள்வோமா?
இறுதியில் இக்குறியை இடவில்லை என்றால்
பொருளும் மாறிவிடும் புதிர்போல் ஆகிவிடும்.
உருவில் வளைந்தே உட்கார்ந்த நிலைகொண்ட
"கிருதா' போலிருக்கும் கேள்விக் குறிவாழ்க!

அரைப்புள்ளி போன்றவன்நான் அறிந்தோர்
            அவையினிலே
குறைப்பாட்டுப் பாடும் குறைமதியோன் நானுங்கள்
கால்புள்ளி ஆனேன்; கரும்போடே தேன்சேர்த்துக்
கேள்விக் குறிபற்றிக் கிண்ணென்று பாடி
ஆச்சர்யக் குறியானேன்; அன்பர்களே! நான்பாடி
மூச்சடங்கு முன்னே முற்றுப் புள்ளிவைத்தேன்.

நன்றி: கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :