Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
இனிய உதயம்
இருளிலும் பிரகாசிக்கும் ஒளி!
 ................................................................
ஞாபக வெளிச்சத்தில் -முனைவர் ஜவாஹிருல்லா
 ................................................................
அவரது ஆறாவது விரல் - கவிஞர் புவியரசு
 ................................................................
சுகந்தம் மறைந்ததே...
 ................................................................
எங்கள் வாப்பா... -கவிக்கோ மகள் திருமதி வஹீதா
 ................................................................
மரணம் எனும் மர்ம அழகி!
 ................................................................
என் நினைவுகளின் சாளரத்திலிருந்து...
 ................................................................
மரண இமைகளில் கண்ணீர்த் துளி!
 ................................................................
கவிக்கோவின் கடைசி வரிகள்!
 ................................................................
காலம் பறித்துக் கொண்ட கவிதைப் போராளி!
 ................................................................
01-07-2017மிழ்க் கவிதைக்கு அண்மைக் காலம் இலையுதிர்காலம் போலும். இன்குலாப், நா.முத்துக்குமார், நா. காமராசன்... இதோ இப்போது கவிக்கோ அப்துல் ரகுமான்.

சென்ற நூற்றாண்டுகளின் அறுபதுகளின் கடைசியில் ஒரு புதுப்பரிதி முளைத்தாற்போல் வெளிச்ச விதைகளோடு வந்த கவிஞன் நா. காமராசன். நாணல்களை நாட்டியமாட வைத்த நதியின் வெள்ளப் பெருக்குப் போல் அந்தக் கவிஞனின் வருகை புல்லிதழ்களையும் பூக்க வைத்தது. பூர்ணிமையின் மதுக்குடித்த போதையில் மூழ்கினர் கவிதைக் கலைஞர்கள்.

கண்ணதாசன் இதழில் வெளிவந்த கறுப்பு மலர்களும், நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன் கவிதையும் ஒரு கிறக்கத்தையும் மயக்கத்தையும் எல்லையற்ற எதிர்பார்ப்பையும் புதுக்கவிதையில் இப்படி யோர் புதுத் தரிசனமா என்ற வியப்பையும் உண்டுபண்ணின.

""கற்பனையை பாத்தியில் சத்திய வேர் விடும்
காவியப் பூச்செடி நான்''
என்ற அறிமுகம் இலக்கிய உலகில் கிளர்ச்சியை மீட்டியது.

 சொற்களின் மாய அழகு ஒரு "தேவவேளை'யின் வருகைபோல் சிலிர்ப்புகளை உருவாக்கியது.

"முன் முன்னே', "மோகலயம்', "சூரியன் தூங்கிய துருவம்' "நடையிலொரு தாளவேகம்- நயனத்தில் பூத்த நிழல்' "மகாகவிகளின் தாய்ப்பால்', "மின்மினி இரவு', எனப் பளிங்கில் வார்த்த சிற்பச் சொற்கள் தமிழ்க் கவிதையில் ஒரு பாரசீக அழகை, ஜிப்ரானியச் சாயலை வடித்தன.

பொருண்மையும் புதுமையில் தகத்தகாயமாய்ப் பொலிந்தது முதன் முறையாக "அலிகள்' கவிதையில் இடம்பெற்றனர்.

""கால மழைத் தூறவிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாய்ப் பாலின் சரித்திரத்தில்
சதுராடும் புதிரானோம்''

என்பது திருநங்கையரின் புதுக்குரலான துயர்க்குரலாய் ஒலித்தது.

"மன்மத அச்சகத்தின் மலிவுப் பதிப்பு'களான விலைமகளிர், "பௌராணிகரின்' பழங்கதைகளை விட்டெறிந்த ஹிப்பிகள், "நாக்கின் மயான பூமி' யான ஊமைகள், "ஓட்டைக் குடிசைகளில் உயிர்வாழும் பிணங்க'ளான மலைவாசிகள் முதன்முதலாகக் கவிதைகளுக்குள் வினாக்களாக வெடித்தனர்.

"அவர்கள் நீதிமன்றத்தை விசாரணை செய்கிறார்கள்' எனப் பிச்சைக்காரியும், குடிகாரனும் நீதிபதிகளான காட்சியையும் நா.காமராசன் தன் எழுத்தால் முதலிடத்துக்கு கொண்டுவந்தார். ஒரு புரட்சி மழையாகப் பொழிந்துதள்ளினார் காமராசன்.

அதன் பிறகு? உத்தமபாளையத்தைவிட்டு வெளியேறிப் பெருநகரப் பாய்ச்சலை, அரசியல் அதிகார தாகத்தை நா.காமராசனின் வாழ்க்கை நாடியது. திரைப்படத்தில் எழுத வேண்டுமென்ற தீராத பேராசை தமிழ்க் கவிஞர்களுக்கு உண்டே.

அங்கும் தன் அழகிய முத்திரை பதித்தாரென்றாலும் தொடரவில்லை.

"எங்கும் தங்காத நீரைப்போல்' ஓடிய நா.காமராசன் சில காலத்துக்குப் பிறகு எழுத்தை விட்டு விலகினார்.

ஒருவகையில் வங்கக்கவி நஸ்ருள் இஸ்லாம் போல் உடல் நலிந்து வாழ்ந்தார்; மறைந்தார். கர்ச்சனையும் கவினார்ந்த கோலமும் கொண்டு வந்த பெருமழை ஓய்ந்து போனது.அவரைப் பின்பற்றி ஒரு கவிதைப் பட்டாளம் எழுதத் தொடங்கியதென்றாலும் அசலின் மர்ம அழகை எவராலும் தொடமுடியவில்லை.

துண்டு நிலாவும் துளி விண்மீன் கூட்டமும் உள்ள வரை புதுக்கவிதையில் தீவிரப் புனைவியலின் சொப்பனங்களை மிதக்க வைத்த நா.கா.வின் காவிய அழகைக் கவிதை வரலாறு மறக்காது. வளமான வயல்வெளியில் பூத்த கரும்புக்காரு போல் பசுமை மாறாமல் நா.கா. காலமெல்லாம் திகழ்வார்.

மதுரையின் மணித்தென்றலாய் உலவி வாணியம்பாடியின் வசீகர நதியாய் வலம்வந்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் காவியச் சிகரமாய் ஓங்கி நிலைத்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். நானும் மீராவும் ரகுமானும் ஆன்ம நட்பில் கலந்து கரைந்து போனவர்கள். சிற்பி இலக்கிய விருதைத் தோற்றுவித்த முதல் ஆண்டில் கவிக்கோவுக்கே விருதளித்து மகிழ்ந்தபோது, இன்றைய தமிழ்க்கவிதையின் அகரமும் சிகரமும் அவரே என்று நான் மொழிந்தது நினைவுக்கு வருகிறது.

1969-இல் மதுரையில் மகாத்மா நூற்றாண்டுக் கவியரங்கில் சந்தித்தபோது சித்திரச் சிலேடை வித்தகம் கண்டு ரகுமானை வியந்தேன்; அவர் கவித்துவம் கண்டு பயந்தேன். அதற்கு முன்னரே சென்னை இராமலிங்கா பணிமன்றக் கவியரங்குகளில் பழகியிருந்தாலும் மதுரைக் கவிரயங்கம் நெருக்கத்தை வளர்த்தது. பழகப்பழக நம் காலக் கம்பர் இவர் என்று கணித்தும் மதித்தும் மகிழ்ந்தேன்.

எனக்குத் தெரிந்து தமிழ்க் கவிஞர்களில் இத்தனை விசாலமான படிப்பும் பேரறிவும் படைத்தவர்கள் எவரும் இல்லை. உருது, அரபி, இந்தி மொழி இலக்கியங்கள், ஆங்கிலக் கவிதைகளில் ஆழ்ந்தவர் ரகுமான். தொல்காப்பியத்தில் முக்குளித்த இலக்கண ஞானி. சங்க இலக்கியங்களை விதை நெல்லாகத் தேர்ந்தவர். கம்பனையும் காளிதாசனையும் போலவே, சிலம்பையும் ஷெல்லியையும் கற்றுத் துறை போகியவர். செய்குத் தம்பிப் பாவலரும் ஜலாலுதீன் ரூமியும் அவருக்கு அண்டை வீட்டுக்காரர்கள் என்றால் மிகையாகாது. "அவளுக்கு நிலா என்று பெயர்' நூலில் தொடங்கி "பூக்காலம்' வரை அவர் நெசவு செய்தளித்த உரைநடைக் களஞ்சியங்களில் காஞ்சியும் இருக்கும்; டாக்கா மஸ்லினும் இருக்கும்; காஷ்மீரப் பட்டும் இருக்கும்; பாரசீகக் கம்பளங்களும் இருக்கும். உலகத்தின் உயிர்ப்பு மிக்க எழுத்துக்களை எல்லாம் "கலைச்செல்வங்களாகக் கொணர்ந்திங்கு சேர்த்த' தமிழ் மாலுமி ரகுமான்.

இதிகாசங்கள், வேதங்கள், உபநிஷத்துக்கள், இந்திய சமய தத்துவ நூல்கள் ஆகியவற்றை இழை இழையாய் ஆய்ந்து கற்றவர். குறை கண்டுபிடிக்க அல்ல- நிறைகளை அறிந்துகொள்வதற்காக. அதனால் தான் ஒருமுறை அ.ச.ஞா. என்னிடம் சொன்னார்; ""சைவ சித்தாந்தக் கருத்தைச் சேக்கிழார் வழியே அருமையாகச் சொன்ன ரகுமானின் அற்புதச் சிந்தனை என்னை ஆச்சரியப்பட வைத்தது. இந்த இஸ்லாமியனுக்கு தெரிந்தது பழுத்த சைவனுக்குக் கூடத் தெரியவில்லையே.''

ஆனால் அதேசமயம் இந்துத்துவத்தில் ஊறிய ஒரு பெரும்புலவர் ரகுமானின் இஸ்லாமியச் சார்பை வைத்துக் குறைகாண முற்பட்டார். அதனை அறிந்து அதற்கு நயமாகப் பதில் சொல்லத்தான்.

""ரகுமானுக்கும் இராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறார்கள். ரகு மானைத் தேடியது தானே இராமாயணம்''  என்று அற்புதமாகச் சொன்னார் கவிக்கோ.

கலைஞரிடம் இன்னதென விவரிக்க முடியாத அன்பும் நேசமும் ரகுமானுக்கு இருந்தன. அவர் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இந்த அன்பில் ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை. ஆட்சியில் கலைஞர் இருக்கும்போது, ஒரு பாரத ரத்தினமாக ஒளிர வேண்டிய ரகுமான் ஒரு பத்ம ஸ்ரீ விருதுக்காகக்கூட வேண்டி நின்றதில்லை. அரியாசனத்துக்குச் சரியாசனமாகப் பேசுகிற உரிமை கவிக்கோவிடம் இருந்தது.

அவருடைய பாசத்துக்குடைய கலைஞர் ஆட்சியை இழந்தபோதும் ரகுமானின் அன்பு குறைந்ததில்லை. அதனால் தான் "பித்தன்' கவிதையில் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த அவன் கூறுவான்:

""அரியாசனத்தில்
ஏறுகிறவனுக்கல்ல
இறங்குகிறவனுக்கே
இதிகாசம் கிடைக்கிறது.''

ஒரு அர்த்தத்தில் இது இராமனைக் குறித்தாலும் அதன் அர்த்தம் ஆட்சியிழந்த கலைஞரையே குறித்தது.

அதிகாரங்களை அதற்குரிய இடத்தில் வைத்து மதிப்பதே அவர் வழக்கம். ஒரு சமயம் மூத்த அமைச்சர் ஒருவரைக் காண நானும் ரகுமானும் சென்றோம். வீட்டுக்குள் நுழையுமுன் ரகுமான் என்னிடம் சொன்னார், ""யாரையும் நிற்க வைத்துப் பேசுவது இவர் பழக்கம். நாமென்ன குறைந்தவர்களா? உள்ளே போனதும் நாற்காலியில் உட்கார்ந்து விடுங்கள்'' என்றார். அன்புக்குத் தலைவணங்கும் ரகுமான் அதிகாரத்துக்குப் பணிந்ததும் இல்லை; அஞ்சியதும் இல்லை.

வாணியம்பாடியில் கால்நூற்றாண்டுக் காலம் பணியாற்றியபோது அந்தச் சிற்றூரைத் தமிழ்க் கவிதைக்குத் தலைநகரம் ஆக்கியவர் ரகுமான். அங்கே அழைக்கப்படாத அறிஞர்களோ, கவிஞர்களோ தமிழகத்தில் இல்லை. இன்று இலக்கிய விழாக்களால் அந்த வணிக நகரம் அணிநடை பயில அவரே காரணம். "ஏதேன்' என்ற அமைப்பை நிறுவி இளைஞர்களைக் கவிதைகள் படைக்கவும் சுவைக்கவும் வைத்தார். அந்திவானம் சிவந்தது ஏன்? மயானத்தில் ஒரு தொட்டில், இலவசத்துக்கு விலை என்று கிளர்ச்சியூட்டும் தலைப்புகள் தந்து மாணவர்களின் கவிமனதில் சிலிர்ப்புகளையும் சிந்தனைகளையும் தூண்டினார்.

""வானத்துச் சுவரில்
சூரிய மூட்டைப் பூச்சியை
நசுக்கியது யார்?''

என்று மாணவர் ஒருவர் அந்திவானத்தைக் குறித்து எழுதியபோது ரகுமான் "அடடே' என்றார். இந்தத் தலையசைப்புக்காக எத்தனை இளங்கவிகள் காத்துக்கிடந்தார்கள்.

விக்ரமாதித்யன் அவையிலும் கிருஷ்ண தேவராயர் சபையிலும் மாணிக்கங்களாய்க் கவிஞர்கள் சுடர்விட்டார்கள் என்பது சரித்திரம் வாணியம்பாடி கவிக்கோ அவையில் அப்துல் காதர், இக்பால், ஆரிது என்று ஒளிபொழிந்த மாணிக்கங்கள் எத்தனை எத்தனை?

புதுக்கவிதையின் தொடக்க நாட்களில் எழுத்து, கசடதபற ஜாம்பவான்கள், "அது தெரியுமா. இது தெரியுமா' என்று இசங்களில் கும்மாளமிட்டபோது எந்தவித ஆரவாரமும் இன்றி ரகுமானின் சர்ரியலிசக் கவிதைகள் நிரம்பிய "பால்வீதி' வெளிவந்தது.

அதன் இருண்மை அவர்களையும் பொறி கலக்கியது.

சுவரில் மாட்டப்பட்ட புகைப்படம் பற்றிய "நார்சிஸ்ஸஸ்' கவிதை திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்டதுபோல் முதலில் திகைக்க வைத்தது.

""கண்ணாடிச் சமாதியிலிருந்து
என்னை வெறிக்கும் இது
என் பிணம் தான்...
என்னிலிருந்து கிழிக்கப்பட்ட
ஒரு தேதித் தாள்
இங்கே... சுவரில்
சிலுவை அறையப்பட்டிருக்கிறது.''

என்று தொடங்கும் கவிதை புரியத் தொடங்கிய போது, இறந்தகாலமும் நிகழ்காலமும் நிகழ்த்திய மோதல் புலனாகலாயிற்று. இன்று வரை மீமெய்மையியல் கவிதைக்கு இதனைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு இல்லை.

சமுதாய விமர்சனத்தைக் கவித்துவத்தோடு மொழிந்தவர் ரகுமான் "பாருக்குள்ளே நல்ல நாடு' கவிதையில் அந்த விமர்சனம் கேலிச் சுவையோடு வெளிப்படுகிறது.

""என் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன்
"பிரிவினை வாதி' என்று
பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அதிகாரி லஞ்சம் வாங்கினான்
தடுத்தேன்
அரசுப்பணியாளரை
அவருடைய கடமையைச் செய்யவிடாமல்
தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்...''

ரகுமான் தொடாத பொருள்கள் இல்லை. அனைத்திலும் நட்சத்திரப் புன்சிரிப்பு வைர முகங்களாய் வெளிப்படத் தவறியதே இல்லை. பால்வீதி முதல் கண்ணீர்த் துளிகள் வரை படித்து முடிப்பவன் அருமொழியின் பூரணமான அழகிலும் அறிவிலும் தன்னை மறந்து லயித்துவிடுவான். ரகுமான் தமிழுக்கு வாய்த்த நெற்களஞ்சியம்.

கவிக்கோவின் இலக்கியப் பயணத்தில் தேவகானம் ஓர் எல்லை என்று மதிப்பிடலாம். கற்பனைகள், உருவகங்கள், படிமங்கள் எல்லாம் ஓய்வெடுத்துக் கொள்ள ஒரு "ஞானக்குளியல்' தேவகானத்தில் உள்ளத்தையும் உடலையும் உணர்வையும் குளிர வைக்கிறது. இதற்காகத் தான் இந்த நெடும் பயணமோ என்று நமக்குள் ஒரு வினா ஈரத்துளிகளோடு மேலேழுகிறது.

""அறிந்திடாத போது 'நான்
நான்' என நினைத்தனன்
அறிந்தனன்.. இப்போது "நான்
நீ' யென அறிந்தனன்''

இப்படியொரு ரசவாதம் ரகுமான் கவிதையில், சிந்தனையில் உருவாகிறது. மானுடம் முதிர்ந்து கனிந்த நிலை போலும் இது. மேலும் தேவகானத்துள் நுழைகிறோம்... எல்லையற்ற அமைதியின் நிழல் கவிகிறது.

""காலையில் இருந்தவர்கள்
மாலையில்.... இல்லையே
மாலையில் இருந்தவர்கள்
காலையில்... இல்லையே
சாலையில் புறப்பட்டார்
தடயம் ஏதும் இல்லையே
சோலையில் மலர்ந்த பூவில்
சுகந்தம் போல் மறைந்ததே...''

ஒரு கணம் நமக்குள் காணாமல் போன பூவின் நறுமணம் கமழ்கிறது.

அன்பான தோழனே ரகுமான்... உன் வாழ்வில் சுகந்தம், உன் கவிதையின் ஆழ்ந்த நறுமணம் தமிழ் மண்ணில் எங்கெங்கும்... என்றென்றும்...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :