Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
இனிய உதயம்
இருளிலும் பிரகாசிக்கும் ஒளி!
 ................................................................
ஞாபக வெளிச்சத்தில் -முனைவர் ஜவாஹிருல்லா
 ................................................................
அவரது ஆறாவது விரல் - கவிஞர் புவியரசு
 ................................................................
சுகந்தம் மறைந்ததே...
 ................................................................
எங்கள் வாப்பா... -கவிக்கோ மகள் திருமதி வஹீதா
 ................................................................
மரணம் எனும் மர்ம அழகி!
 ................................................................
என் நினைவுகளின் சாளரத்திலிருந்து...
 ................................................................
மரண இமைகளில் கண்ணீர்த் துளி!
 ................................................................
கவிக்கோவின் கடைசி வரிகள்!
 ................................................................
காலம் பறித்துக் கொண்ட கவிதைப் போராளி!
 ................................................................
01-07-2017
மிழ் இலக்கிய உலகம் ஒரு மகாகவியை இழந்திருக்கிறது. உலகத் தத்துவ ஞானிகளின் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மாகவிஞரைத் தமிழுலகம் பறிகொடுத்திருக்கிறது.

தமிழர்கள் தங்கள் மதிப்பு வாய்ந்த இலக்கியப் பெட்டகத்தைத் தொலைத்திருக்கிறார்கள்.

அந்த இழப்பின் வலி, பலருக்கும் தெரியவில்லை என்பதுதான் கூடுதல் வலி தரக்கூடியதாக இருக்கிறது.

உலகக் கவிஞர்களில் ஒருவராய் நம்மிடையே வாழ்ந்து மறைந்திருக்கிறார் கவிக்கோ. அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் துக்கம் கடைப்பிடித்திருக்க வேண்டும். கண்ணீர் மழையில் தமிழகம் நனைந்திருக்கவேண்டும்.  ஏனெனில் தமிழின் உயரத்தை சில அங்குலங்கள் உயர்த்திய தகுதி இவரது எழுத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கும் உண்டு.என் மாணவப் பருவத்திலேயே என்னைத் தன் உயரங்களாலும் ஆழங்களாலும் ஆட்கொண்டவர் கவிக்கோ. அவரது "லைலா மஜ்னு' கவிதை என் புத்தியைப் பித்தாக்கிப் புலம்ப வைத்திருக்கிறது. 1985- வாக்கில் திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில், அவர் தலைமையில் கவிதை பாடினேன். அப்போது அவர் பாடிய தலைமைக் கவிதை, என் அகமனக் கதவுகளை அகலமாகத் திறந்துவைத்தது. தூர தூரங்களில்  இருந்தபடியே அவரது எழுத்துகளில் கிறங்கிக் கிடந்த நான், அவரது இறுதிக் காலத்தில், அவருக்கு மிக நெருக்கமானவனாக மாறியது காலம் நிகழ்த்திய மாயம்.

’"இனிய உதய'த்தில் கவிக்கோ அவர்களின் தொடர் இடம்பெறவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அன்பு இளவல் பேராசிரியர் ஹாஜாகனி, என்னை கவிக்கோவின் திருவான்மியூர் கடற்கரைச் சாலை இல்லத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.  முதல் பார்வையிலேயே என்னைத் தனது அன்பிற்குப் பொருத்தமானவனாக அடையாளம் கண்டுகொண்டார் கவிக்கோ.

அதன்பின் என் நாட்கள் மகிழ்ச்சிக்குரிய மழை நாட்கள் ஆகிவிட்டன. மழையென்றால் இலக்கிய மழை. அன்பென்னும் மாமழை.

"இனிய உதய'த்தின்’ நெறியாளராக இருந்து கவிக்கோ வழிகாட்டினார்.  "அழகின் ஆராதனை'’ என்ற தலைப்பில், மாபெரும் கவிதை வேள்வியையே அதில் நிகழ்த்தினார். அதன் மூலம் ஏராளமான இதயங்களைத் தன்வசம் கட்டியிழுத்தார். நக்கீரன் குடும்பத்தோடும் ஒன்றிப்போன கவிக்கோ, தோன்றியபோதெல்லாம் சமூகச் சமருக்கான ஆயுதக் கவிதைகளையும் நக்கீரனுக்குப் படைத்தளித்தார். அரசியல் மற்றும் சமூக அவலங்களைச் சாடி, துணிச்சலோடு அவர் எழுதிய எழுத்துக்கள், காலத்தால் அழியாதவை.அவரோடு சென்று இரண்டுமுறை கலைஞரைச் சந்தித்திருக்கிறேன். அவரோடு சேர்ந்து "இனிய உதய'த்திற்காகக் கலைஞரிடம் பேட்டி எடுக்கும் வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன். "இனிய உதய'த்தின் புகழ் வெளிச்சத்திற்குக் கவிக்கோவின் சுயவெளிச்சம் பேருதவி புரிந்தது.

அவரோடு நகர்ந்த என் பொழுதுகள் மறக்கமுடியாதவை. அவருடன் நிகழ்த்தும் உரையாடல்கள், அறிவின் உயரத்தை உயர்த்தக் கூடியவை. அந்த நேரத்தில் உடம்பே காதாகிவிடும். உலகக் கவிதைகளைப் பற்றி விழிகள் விரிய விரிய விவரிப்பார்.

அப்போது மனம் ஆகாயமாய் அகலம் தரித்துவிடும்.  உலக இசை குறித்து உயிர்கரையப் பேசுவார். அப்போது மனம் மலைக்குன்றுகளாய்  மாறி அவரையே எதிரொலிக்கத் தொடங்கிவிடும்.  உலக உணவு வகைகள் குறித்தும் மணக்க மணக்கப் பேசிப் பசிக்கச் செய்வார். மனமும் தன் வயிறை நிறைத்துக்கொள்ளும். 

எந்தத் திசையிலும் நின்று பேசும், ஆச்சரியம்மிக்க ஆளுமை அவர். அவரே தமிழின் ஆரோக்கியம். அவரை நோய் வருத்தியது என்பது, வாழ்வில் வரக்கூடாத முரண்.  

அண்மைக் காலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் எழுதுவதையும் படிப்பதையும் நிறுத்தியதில்லை. கூட்டங்களையும் புறக்கணித்ததில்லை.

மாணவர்களின் மெரினாப் போராட்டத்தின்போது அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருந்தது. இருந்தும், "அதில் பங்கேற்க முடியுமா?' என்று நான் கேட்டதும், ஆர்வமாக மெரினாவுக்குக் கிளம்பினார்.கண்ணியமாகப் போராடிய மாணவர்களையும் இளைஞர்களையும் மனமுவந்து வாழ்த்திப்பேசினார்.

 கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்தான், அவரது சிறுநீர்ப் பையில் பெரிய அளவிலான கட்டி  இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காது என்ற நிலையில், தேனாம்பேட்டை  காமராஜர் அரங்கம் அருகே இருக்கும் பி.சி.ராய் நினைவு மருத்துவமனைக்கு தினமும் சென்று கதிரியக்க சிகிச்சையை எடுத்துக்கொண்டார். இருந்தும், அந்தக் கட்டி உடைந்து, அதன் சிதிலங்கள் சிறுநீர்ப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி அவரை வலியில் துடிக்கச் செய்தன.

சமாளித்தபடியே சிகிச்சையைத் தொடர்ந்தார். கவலையோடு அவரை, அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்தேன்.

அப்போதெல்லாம்’"நான் மரணத்துக்கு அஞ்சவில்லை. மரணமென்பது நிம்மதி என்பது எனக்குத் தெரியும். ஆனால் இன்னும் கொஞ்சம் எழுத்துவேலைகள் பாக்கி இருக்கின்றன. அதையெல்லாம் முடிக்கவேண்டுமே'’ என்பார் சலனமில்லாமல்.

எந்த நிலையிலும் அவர் தனக்கே உரிய  தன்னம்பிக்கை யையும் நகைச்சுவை உணர்வையும் இழந்ததில்லை.கவிக்கோவை சந்திக்கும் நேரங்களில், "உங்கள் முகநூலில் போடுங்கள்' என்றபடி, சின்னச் சின்ன கவிதைகளை என்னிடம் எழுதிக்கொடுப்பார். அதற்கான பின்னூட்டங்களையும்  என் கைபேசியில் பார்த்து ரசிப்பார்.

அவர் உடல்நலம் குறித்த என் பதிவுகளைப் பார்த்து, எண்ணற்றோர்  வாழ்த்தியதையும் படித்துப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார். அவரது இரவு நெருங்கிவிட்டது என்பதை நான் அறியாமல் போய்விட்டேன்.  அவரது அந்திமக் கால சந்திப்பு குறித்த எனது முகநூல் பதிவுகள் சில....    

*

ஆரூர் தமிழ்நாடன் ஹக்க்ங்க் 3 # with Jalaludeen Hanifa and Haja Gani.

மார்ச் 9

மருத்துவமனை சிகிச்சைக்குப் பின், ஓய்விலிருக்கும் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களைச் சந்திக்க, நானும் கவிஞர் ஜலாலுதீனும் மதியம் பனையூர் புறப்பட்டோம். வழியில் நண்பர் கவிஞர் ஜெயபாஸ்கரன் எங்களோடு இணைந்துகொண்டார்.

கவிக்கோவைப் பார்த்த பிறகே மனக்கவலை நீங்கியது. களைப்பிலும் முகம்மலர்ந்தார். உடற்பிணியால், அந்தக் கவிதைச் சிங்கத்தின் கம்பீரத்தைக் குறைக்க முடியவில்லை. உற்சாகம் தரித்துக்கொண்டு, இரண்டுமணி நேரத்துக்கு மேல், இலக்கிய விருந்தளித்தார்.

உணர்ச்சி மிகும்போது இலக்கணக் கரைகூட உடையும் என்பதற்கு, அதியமான் இறந்தபோது, ’"சிறியகட் பெறினே எமக்கு ஈயும் மன்னே... பெரியகட் பெறினே யாம் பாட தான் மகிழ்ந்துண்ணும் மன்னே...' என்று, ஔவை பாடிய ஒப்பாரியைப் பாடிக்காட்டி வியக்கவைத்தார்.

தாயை, மரணத்திடம் பறிகொடுத்த பட்டினத்தார், ’"முன்னையிட்ட தீ' பாடலின் ஈற்றடியில், உணர்வு மிகுதியில், எதுகை, மோனை என எல்லாவற்றையும் கைவிட்டுக் கதறியதையும், அதற்கு உபரிச் சான்றாக்கினார்.

விடைபெற மனமில்லாமல் விடைபெற்ற தருணம், சந்திப்பின் நினைவாக, ஏதேனும் எழுதிக்கொடுங்கள் என்றேன். காதலைக் காதலாய் எழுதிக்கொடுத்தார். சொத்தையே எழுதி வாங்கியது போன்ற பூரிப்பு உள்ளுக்குள் மலர்ந்தது. விடைபெற்றுக் கிளம்பினோம்.

தமிழுக்கு மேலும் நலம் சேர்க்க, கவிக்கோ நலமுற்று வருகிறார். அவரது அன்பர்கள் கவலையைக் கைவிடலாம்.

(இந்த சந்திப்பின்போதுதான் கவிக்கோ, "என்னை சந்திக்க வராதே, நீ பிரிந்து செல்லும் வலியை என்னால் தாங்க முடியவில்லை' என்று எழுதி, கையெழுத்திட்டுக் கொடுத்தார்)

ஏப்ரல் 16

குடந்தையிலிருந்து கவிஞர் கோ.பாரதி மோகன் வந்திருந்தார். முகநூல்வாசி. நக்கீரனில் ஏற்கனவே பணியாற்றியவர். கவிக்கோவிடம் தனது தொகுப்பிற்கு வாழ்த்துரை வாங்கவேண்டும் என்று ஆசை தெரிவித்தார். கவிக்கோவின் உடல்நிலை குறித்து அவரிடம் சொன்னேன்.

எனினும் கவிக்கோவைத் தொடர்புகொண்டு, "உங்களைப் பார்க்க வரலாமா?' என்றேன். "எப்போ?' என்றார். "இப்பவே' என்றேன். "வாங்க' என்றார். வறுத்தெடுத்த வெய்யிலில், மனதைக் குளிர்வித்துக் கொள்ள, அவரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் அவரது பனையூர் வீட்டில் மதியம் 1.15-க்கு பாரதியோடு சந்தித்தேன். முகத்தில் மெல்லிய வீக்கமும் களைப்பும் தெரிந்தது. மருத்துவமனையிலிலிருந்து நேற்று இரவு டிஸ்சார்ஜ் ஆனதாகச் சொன்னவர், "உங்களுக்காக வீட்டுக்கு வந்ததும் நான் எழுதிய கவிதை' என்று சில காகிதங்களைக் கொடுத்தார். அதில் காதலும் காலத்தின் நிழலும் படிந்திருந்தது.

அவர் ஓய்வெடுக்கட்டும் என்று 30 நிமிடத்தில் கிளம்பிவிட்டோம். கவிக்கோவின் உடல்நிலை கவலை தருகிறது. அவர் விரைந்து நலம் பெறவேண்டும். அவருக்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கிறது.

*

ஏப்ரல் 11

அந்த தனியார் மருத்துவமனைக்கு (தேனாம் பேட்டை ராய் நினைவு மருத்துவமனை ) தினமும் வந்து செல்லும் கவிக்கோவை சந்தித்தேன். தொடர் சிகிச்சையில் விரைந்து நலம்பெற்றுவருகிறார்.

முகநூல் வெளியில் சுடர்விடும் கவிஞர்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இயன்றவரை அவர்களை வெளிப்படுத்துவோம் என்றார்.

அப்போது, "இனிய உதயம்' பார்த்தேன் என்றபடி லைனில் வந்த கவிஞர் இன்ஃபோ அம்பிகாவிடமும் இரண்டு வார்த்தை பேசி வாழ்த்தினார். கவிப் பேரரசு வைரமுத்துவையும் தொடர்புகொண்டு தேசியவிருதுக்காக வாழ்த்துச் சொன்னார்.

அவரது நெஞ்சத்தில் கலைஞரின் உடல்நலம் பற்றிய கவலைதான் அதிகம் இருந்தது. ’நினைவாற்றலுக்கும் உழைப்பிற்கும் பெயர்பெற்றவர் கலைஞர். அந்த இரண்டும் கலைஞரிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டதே’ என்று மனம் கசிந்தார்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு செவிமடுக்காத அதிகார வர்க்கம் பற்றிய தனது கவலையைத் தெரிவித்தவர், ’"நாட்டைச் சுடுகாடாக்கி விட்டார்கள் அகோரிகள்' என்றார். உண்மைதான்.

ஏப்ரல் 23

கவிக்கோ அவர்களை என் மகள் ஓவியா, துணைவியார் அமுதா, கவிஞர் ஜலாலுதீன் ஆகியோரோடு சந்தித்து நலம் விசாரித்தேன்.

உற்சாகமாக இருந்தார். மதியம், அன்போடு அசைவ விருந்தளித்தார். (எங்களுக்கு கடைசி கடைசியாய் அளித்த விருந்து). எங்களோடு உணவு மேஜைக்கும் வந்து பத்திய உணவெடுத்துக்கொண்டார். அவரது இலக்கிய விருந்திலும் திளைத்தோம்.

மே 23

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கவிக்கோ அப்துல்ரகுமான். அவரை சந்திக்க, அன்பு நண்பர் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களோடு மாலையில் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே கவிஞர் ஜலாலும் காத்திருந்தார். சந்திக்கும் நேரம் முடிந்துவிட்டது என்றனர். பின்னர் எங்கள் மீது பரிவுகொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் அனுப்பினர்.

மாஸ்க் அணிவிக்கப்பட்டிருந்த கவிக்கோ எங்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார். மாஸ்க்கை எடுத்துவிட்டுப் பேசினார். 10 நிமிடங்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் உற்சாகம் பிறந்தது.

அவர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வாழ்த்து வோம்.

*

அதுதான் கடைசிச் சந்திப்பாகிவிட்டது.

மருத்துவமனையில் இருந்து 29-ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆன கவிக்கோ, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் இருக்கும் தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம் என்று, அவரைத் தொடர்புகொள்ளவில்லை. வழக்கம்போல் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். லேசான மூச்சுத்திணறல் மட்டும் இருந்தது. அமைதியாக நகர்ந்துகொண்டிருந்த கவிக்கோவின் பொழுதுகளுக்கு நடுவில்... அவருக்கான அந்த நேரம் 1-ஆம் தேதி நள்ளிரவு கடந்தபோது, வந்த சேர்ந்தது. நோன்பு மாதம் என்பதால், வீட்டில் எல்லோரும் விழித்திருந்தனர்.

கவிக்கோவிற்கு திடீரென கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. கூடவே இடுப்பில் வலி. அது, நெஞ்சுவரை பரவ, துடித்திருக்கிறார். உடனடியாக அவரை,

அருகில் இருக்கும் கே.எல். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வழியிலேயே அந்த மாகவிஞரின் உயிர் பிரிந்துவிட்டது. ஒரு கவிதைச் சகாப்தம் நிறைவு பெற்றுவிட்டது.

கலைஞர் மீது தீராக் காதல் கொண்ட கவிக்கோவின் உடல், கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி பகல் 12 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு, திருவான்மியூர் கொட்டிவாக்கம் இருக்கும் மஸ்ஜிதுன் நூர்  பள்ளிவாசலில், இரங்கல் நிகழ்வுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அந்த சூரியக்கவிஞர் விதையாய் விதைக்கப்பட்டு விட்டார்.

இந்தக் கட்டுரைக்குத் துணை செய்த என் முகநூல் பதிவு மூலமே, இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

ஜூன் 18, 12-48

காலையில் அன்பு இளவல் பேராசிரியர் ஹாஜாகனி அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, கவிக்கோ அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டோம். அவர்தான் என்னைக் கவிக்கோவிடம் அறிமுகப் படுத்திவைத்தவர். அடுத்து லைனில் வந்த கவிஞர் ஜலாலும் கவிக்கோவை நினைவுபடுத்தினார்.

கவிக்கோ அப்துல்ரகுமானின் கடைசிக் காலத்தில், அவரோடு மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற ஒருசிலரில் நானும் ஒருவன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது 94438 13213, 95660 66011 என்கிற அவரது ஏதேனும் ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்துவிடும். இருபது நாட்களுக்கும் மேலாய் அவை மௌனம் சாதிக்கின்றன.

அவர் எனக்கு வரத்தையும் சாபத்தையும் தந்திருக்கிறார். வரமெனில், அவரோடு பழகிய பொன்பொழுதுகள். சாபம், அவர் தந்துவிட்டுப் போயிருக்கும் பிரிவு.

2014 நவம்பரில், பில்ராத் மருத்துவமனையில் மரணத்தின் வாசலில் நான் நின்றிருந்தேன்.

12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின்போது, மருத்துவமனையை விட்டு அகலாமல் கவலை யோடு காத்திருந்து, நம்பிக்கை தளர்ந்திருந்த மருத்துவர்களுக்கும் நம்பிக்கையூட்டி, சிகிச்சையை வெற்றிகரமாக ஆக்கி, என்னை உயிர்த்தெழச் செய்தவர் எங்கள் ஆசிரியர் நக்கீரன் கோபால்.

என் நிலைகேட்டுப் பதறிய கவிக்கோ அவர்கள், கவிஞர் ஜலாலை அழைத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு வந்துவிட்டார். காத்திருந்து அனுமதி பெற்று ஐ.சி.யூ.விற்கு வந்தார். வந்தவர் என் கைபற்றி "பயப்பட வேண்டாம்' என்றபடி, தலையில் தன் கைக்குட்டையைப் போட்டுக்கொண்டு துவா செய்தார். துவாவிற்குப் பின் என் முகத்தில் அவர் ஊதிய மூச்சுக் காற்று, என் சுவாசத்தோடு இப்போதும் கலந்திருக்கிறது. என் காதோரம் வந்து "தியானம் செய்யுங்கள்' என்றார். "எப்படி?' என்றேன். அவரோ, ’

"எனக்கு மரணமில்லை. நான் நன்றாக இருக்கிறேன் என்று மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருங்கள். அதுதான் தியானம்' ’ என்றார். அவர் சொன்னதையே, டிஸ்சார்ஜ் ஆகிற நாள்வரை நான் அப்படி சொல்லிக்கொண்டே இருந்தேன்.

அவர் சொல்லிக் கொடுத்த தியானம் பலித்தது.

இதேபோல், அண்மையில் கடந்த 23-ஆம் தேதி அவர் நந்தனம் வெங்கடேஷ்வரா மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் இருந்தபோது நண்பர்கள் ஜெயபாஸ்கரன், ஜலால் ஆகியோரோடு சென்று பார்த்தேன். உற்சாகமாகப் புன்னகைத்தார். பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தார். ஜூன் 24-ல் ஜெயபாஸ்கரனின் நூல் வெளியீட்டுக்கு விழாவிற்கு நீங்கள்தான் தலைமை ஏற்கவேண்டும் என்றேன். பதில் சொல்லாமல் சிரித்தார். அதன்பொருள் அப்போது புரியவில்லை. அவர் எனக்கு சொன்னதுபோலவே, "பயம்வேண்டாம். நீங்கள் நலம்பெற்று வந்துவிடுவீர்கள்' என்று அவருக்குச் சொன்னேன். சிரித்தார்.

அவர் வாக்குபலித்து நான் நலம் பெற்றதுபோல், என் வாக்கு அவருக்குப் பலிக்கவில்லை. நான் அவரிடம் சொல்லிக்கொண்டுதான் விடைபெற்றேன். அவர் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டார்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : sundararaj Date & Time : 7/11/2017 12:17:34 PM
-----------------------------------------------------------------------------------------------------
கவிக்கோ ஒரு சகாப்தம். அவர் கவிதைகளின்மூலம் எப்போதும் நம்மோடு பேசிக்கொண்டே இருப்பார்.
-----------------------------------------------------------------------------------------------------