Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
பொது அறிவு உலகம்
64-வது தேசிய திரைப்பட விருதுகள்
 ................................................................
சம்பாரன் சத்தியாகிரகம் நூற்றாண்டு
 ................................................................
வங்கி சேவையும் வரி விதிப்பும்
 ................................................................
அனைத்தும் ஆதார் மயம்
 ................................................................
01-05-17

    இந்தியாவில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் (Aadhaar Indentity Number) கொடுக்கப் பட்டு, அவர்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்யும் திட்டம்தான் ஆதார் அடையாள அட்டைத் திட்டம்.

    120 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட, உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியான எண்கொடுத்து, அவர்களுக்கான அடையாளத்தை உருவாக்கி அவர்களின் முகவரி, வயது, அவர்கள் பெற்று வரும் அரசு உதவிகள் இன்னபிற விவரங்களையும் மின்னணு முறையில் தொகுத்து, அடிப்படை ஆதாரங்களைக் கொண்ட  மாபெரும் தகவல் களஞ்சியத்தை உருவாக்குவதுதான் ஆதார் திட்டத்தின் நோக்கம் என்கிறது மத்திய அரசு.

    இந்திய அரசின்(Unique Identification Authority of India (UIDAI) என்ற அமைப்பின் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஆதார் திட்டத்தின் தலைவர் நந்தன் நீலேகனி. இவர் தனியார் கணினி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸின் இணைத் தலைவராக இருந்தவர்.

    ஆதார் அடையாள அட்டைக்கான அவசியம் என்ன என்று அரசுத் தரப்பு விளக்கும்போது, ""இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், அரசுத் திட்டங்களுக்கான பயனாளிகள் அட்டை, கடல் எல்லையில் மீன் பிடிப்போருக்கான உரிம அட்டை எனப் பலவித அடையாளச் சீட்டுகள் உள்ளன. இவையனைத்தும் எல்லோரிடமும் இருப்பதில்லை.

அப்படியே இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தகவல் தொகுப்பைக் கையாள வேண்டியிருக்கிறது. ஒரே நபருக்கு வழங்கக்கூடிய அரசு சார்பிலான அட்டைகளுக்கு ஒரே எண்ணை ஆதாரமாகக் கொண்ட தகவல் களஞ்சியத்தை பயன்படுத்தினால், இன்றுள்ள தகவல் தொழில்நுட்ப வசதியின் காரணமாக அவற்றை எளிதாகக் கையாளமுடியும். பயனாளிகளை எளிதாக அடையாளம் கண்டு அவர்களுக்கு அரசு உதவிகள் சென்று சேரும்படி செய்யமுடியும். அரசின் உதவிகளை முறைகேடாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து தடுத்து நிறுத்த முடியும்'' என்று தெரிவிக்கிறது.    5 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் ஆண், பெண், திருநங்கை என எந்தப் பாலினமான இருந்தாலும் அவர்கள் ஆதார் அட்டை பெற வேண்டியது கட்டாயம் என்கிறது அரசு.

    வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்படமும் முகவரியும் அடங்கிய அரசாங்கம் வழங்கியுள்ள அடை யாளத்தைக் காட்டி ஆதார் அட்டைக்குப் பதிவு செய்யமுடியும். இந்த ஆவணங்கள் எதுவுமே இல்லை என்றால் வட்டாட்சியர் போன்ற அதிகாரிகள் வழங்கும் இருப்பிடச் சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆதார் அட்டைக்கானத் தகவல்கள் பதிவு செய்யப்படும்.

    குடிமக்கள் தரும் ஆவணங்களைப் பரிசீலித்து ஏற்றுக்கொண்ட பிறகு, ஆதார் அட்டைக்கானப் பதிவுகள் தொடங்கும். சம்பந்தப்பட்டவரின் புகைப்படம், அவரது கண்ணின் விழித்திரை இரண்டு கைகளின் ரேகை போன்ற உயிரியளவுகளும் (Bio metric)  கணினி மூலமாக பதிவு செய்யப்படும். இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுயகுறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக ஆதார் அட்டை வடிவமைக்கப்படுகிறது. தேவையான பதிவுகள் அனைத்தும்முடிந்தபின், பதிவு செய்வதற்கான சீட்டு கொடுக்கப்படும். இந்தத் தகவல் களெல்லாம் கொடுக்கப்பட்ட பின், ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும்.

அந்த எண் தயாரானதும் குடிமக்களுக்கு தகவல் அளிக்கப்படும். அந்த எண்ணைக் கொண்டு ஆன்லைன் மூலமாகத் தங்களின் ஆதார் அட்டை பற்றிய விவரங்களை குடிமக்கள் அறிந்து கொள்ள முடியும். ஆதார் அட்டையை தொடர்புடைய அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளமுடியம். அந்த அட்டையிலுள்ள விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால், உரிய ஆவணங்களுடன் 48 மணி நேரத்திற்குள் நிரந்தர மையத்திற்குச் சென்று சரி செய்யும் வாய்ப்பும் உண்டு.

    ஆதார் அட்டையில் இடம்பெறும் 12 இலக்க எண்ணே அந்தக் குடிமகனின் ஆதாரமாக அமையும்.  இதன்மூலம் அரசு நிறுவனங்கள் சார்ந்த எந்த அடையாள அட்டை பெறுவதற்கும் இந்த எண்ணைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவரே வெவ்வேறு பெயர்களில் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமச் சீட்டு போன்றவற்றை மோசடியாகப் பெறுவதும் இதன்மூலம் தடுக்கப்படுகிறது. ஒரு வங்கியில் கடன்வாங்கி மோசடி செய்துவிட்டு, வெவ்வேறு பெயர்களில் இதுபோல கடன்பெறும் நபர்களின் மோசடித்தனத்தையும் ஆதார் அட்டை மூலம் தடுக்க முடியும்.

    சம்பந்தப்பட்ட குடிமகனின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியியல் அளவைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர் வேறு பெயரில் மோசடி செய்ய நினைத்தால், கணினியில் உள்ள தகவல்கள் காட்டிக் கொடுத்துவிடும்.

    இது போன்ற நல்ல அம்சங்கள் பல இருந்தாலும் ஆதார் அட்டை குறித்த அச்சமும் சந்தேகமும் பொது மக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் உள்ளது.

    கணினியில் தகவல்களை தொகுக்கும் பொறுப்பு, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எந்தளவு கவனமாக இதனை தொகுப்பார்கள் என்ற கேள்வியுடன், தனிப்பட்ட மனிதர்கள் தொடர்பான தகவல்களை அவர்கள் எந்தளவு பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. உண்மை யிலேயே, மக்கள் நலனுக்காக ஆதார் அட்டை வழங்கப்படுகிறதா, ஒவ்வொரு குடிமக்களையும் எளிதாக உளவு பார்ப்ப தற்காக தகவல் சேர்க்கப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறார்கள்.

    கடந்த சில மாதங்களில் ஆதார் குறித்து ஒவ்வொரு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. 30-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. விரைவில் 50 திட்டங்களுக்கான அறிவிப்புகள் வர உள்ளன. குறிப்பாக நேரடி மானியத் திட்டத்தின் கீழ் உள்ள சுமார் 84 திட்டங் களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை நடைமுறைக்கு கொண்டுவருவதுதான் இதன் நோக்கம்.

    எல்.பிஜி. (எரிவாயு உருளை கேஸ் சிலிண்டர்) இணைப்பு, தேசிய சமூக உதவித்திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனாவின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது நடைமுறை யில் உள்ளது.

    அரசின் அறிவிப்புகள்

    சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் மதிய உணவு உண்ணும் பிள்ளைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்  என கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக, ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது.

    மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ், சாக்ஷர் பாரத் திட்டத்தில் வயதுவந்தோருக் கான பயிற்சிகள் மற்றும் சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கி யுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி இதற்கான கடைசி நாள்.

    குழந்தைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் களுக்கான ஊக்கத்தொகைக்கு மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் அளிக்க வேண்டும்.

    சமூக நீதி அமைச்சகத்தின் பலன்களை பெறுவதற்கும், கலப்பு மணம் புரிந்தவர் களுக்கான சமூக உதவி நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியம் என கோரப்பட்டுள்ளது.

    ஊனமுற்றோர் தங்களுக்கான மத்திய அரசின் சலுகைகளை தொடர்ந்து பெற மே 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண் அளிக்க வேண்டும்.

    குடும்ப நலத்துறை

    தேசிய மருத்துவ அமைச்சகமும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது. தேசிய அளவிலான மருத்துவ திட்டங்களின் கீழ் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி தொகையை பெறவும் ஆதார் அவசிய மாக்கியுள்ளது.

    உரம் மற்றும் ரசாயன துறை

    தேசிய அளவிலான புத்தாக்க முயற்சி களுக்கு விருது பெறும் தனிநபர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை அறிவித்துள்ளது.

    வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்று கூறியுள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்கிற இந்த திட்டத்தில் மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

    ஊரக வளர்ச்சி துறை

    ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மகளிர் சுய உதவி குழு பெண்கள் உதவிகளைப் பெற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண் அளிக்க வேண்டும்.

    மகளிர் மற்றும் குழந்தை நலம்

    பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான இரண்டு திட்டங்களில் உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம்.

    ஸ்வதார் கிரே திட்டத்தில், பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மறு நிவாரணமளிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பெண்கள் திறன் மேம்பாட்டு (STEP)  திட்டங்களில் பலனை பெறவும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண் அளிக்க வேண்டும்.

    வங்கி கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

    அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மட்டுமல்ல, ஒரு நபர் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் பலனை நோக்கி செல்ல வேண்டும் என்றாலும் ஆதார் வேண்டும் என்பது அரசின் நோக்கம்.

    ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் உச்சநீதிமன்றம் 2015 அக்டோபரில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்கின்றனர் அரசின் ஆதார் முறைகளை எதிர்ப்பவர்கள். அரசின் திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக, மத்திய அரசு சட்ட விரோதமாக நடந்து கொள்கிறது என்கின்றனர். அரசின் ஐந்து திட்டங்களுக்கு மட்டும் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியது. குறிப்பாக பொது விநியோக திட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், தேசிய சமூக நல திட்டம், எல்பிஜி மானியத்துக்கான ஜன் தன் யோஜனா கணக்கு உள்ளிட்ட ஐந்து திட்டங்களின் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என கூறியது.

    சமீபத்தில் வெளியான இந்த அறிவிப்பு களும் இதற்கு முன்பான பட்டியலில் இல்லை.

    ஆதார் ஆவணத்தை அடையாளமாக பயன்படுத்தலாம் என்கிற நிலைமாறி சமீபத்திய அறிவிப்புகளில் ஆதார் எண் இல்லையென்றால் குறிப்பிட்ட பயன்களை பெற முடியாது என்று வலியுறுத்துகிறது.  குறிப்பிட்ட திட்டங்களின் பலன்களை பெற வேண்டும் என்றால் ஆதார் எண் அவசியம் என்கிறது.

    ஆதார் எண் பரிவர்த்தனை

    பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியிலிருந்து அனைத்து வகையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் அதிகரித்து வருகின்றன. யுபிஐ பரிவர்த்தனை, பேடிஎம் போன்ற மொபைல் வாலெட்டுகள் எல்லா நிலைகளிலும் புழக்கத்துக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் அளித்த நெருக்கடிகள் அல்லது பணமற்ற பொருளாதாரத்தை நோக்கி நகர்தல் போன்றவை இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்த வகையில் மின்னணு பரிவத்தனையின் அடுத்த கட்டமாக வர்த்தகர்களுக்கு உதவ உள்ளது ஐடிஎப்சி வங்கியின் ஐடிஎப்சி ஆதார் பே. நாட்டின் முதன் முதலில் ஆதார் எண்ணுடன் இணைக்கபட்ட பரிவர்த்தனை முறை இது.

    ஐடிஎப்சி ஆதார் பே யின் முக்கிய நோக்கமே சிறு வர்த்தகர்கள் பணமற்ற வர்த்தகத்துக்கு மாறுவதற்காக உதவுவது தான். ஐடிஎப்சி வங்கியின் "கரண்ட் அக்கவுண்ட்' வங்கிக் கணக்கும் ஸ்மார்ட் போனும் போதும், வங்கி வர்த்தகர்களை நேரடியாக சந்தித்து "ஸீரோபேலன்ஸ் கரண்ட் அக்கவுண்'டை தொடங்க வைக்கிறது. இதன் மூலம் கேஒய்சி விவரங்களையும் நேரடியாகவோ தெரிந்து கொள்கிறது. இந்த புதிய வங்கி கணக்கு  ஆதார் பே செயலியுடன் இணைக்கப் படுகிறது இந்த செயலி ஐடிஎப்சி இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும்.  இதர செயலிகளை தரவிறக்கம் செய்வது போல கூகுள் பிளேஸ்டோரிலிருந்து எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வேலைகள் முடிந்ததும், வர்த்தகர்களுக்கு ஸ்மார்ட்போனில் இணைத்துக்கொள்வது போல பயோ மெட்ரிக் கருவி ஒன்று அளிக்கப்படுகிறது. இந்த கருவிதான் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து வர்த்தகருக்கு பணத்தை மாற்றும் விதமாகச் செயல்படுகிறது. வர்த்தகர்கள் இந்தக் கருவியை விலை கொடுத்து வாங்க வேண்டும். இது ரூ. 1,800 முதல் ரூ. 2,500 வரையில் விற்கப்படுகிறது.

    ஆதார் எண் இப்போது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எங்கும் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். வர்த்தகரின் ஸ்மார்போனுடன் இந்த கருவி இணைக்கப்பட்டிக்கும். ஆதார் பே செயலியில் வாடிக்கையாளர் தனது ஆதார் எண்ணையும், வங்கி பெயரையும் குறிப்பிட்டு எவ்வளவு தொகை என்பதை யும் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு அந்தக் கருவியில் தனது விரல் ரேகையை அழுத்தினால் பரிவர்த்தனை நொடியில் முடிந்துவிடும். வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய பணம் வர்த்தகருக்குச் சென்றுவிடும்.

    முழுமையான பாதுகாப்பானது, மொபைல் வாலெட், டெபிட், கிரெடிட் கார்டைவிட அதிக பாதுகாப்பான பரிவர்த்தனை முறை என்று துறை சார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். வாலெட் பயன்படுத்து பவர்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால் மொபைல் தொலைந்து விட்டால் அதில் உள்ள உங்கள் பணத்திற்கு பாதுகாப்பில்லை. கைரேகை பாதுகாப்பு அப்படியில்லை, நீங்கள் நினைத்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    உங்கள் கார்டையோ, மொபைலையோ தொலைத்துவிட்டு அதற்காக நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்து பேசிக் கொண்டிருப்பதை விட கைவிரல் ரேகை அதிக பாதுகாப்பு நிறைந்தது.

    இரண்டாவது முக்கியமான விஷயம் ஆதார் வழி பரிமாற்ற முறையில் பரிவர்த்தனைக்கான கட்டணம் கிடையாது. ஆனால் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரம் வழியாக டெபிட் கார்டையோ, கிரெடிட் கார்டையோ பயன்படுத்தும் பட்சத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சேவை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

பொதுவாக கார்டுமுறை ஊக்குவிப்பது வங்கிகளுக்கு அதிக செலவு வைக்கிறது. கார்டுகளை மறுவிநியோகம் செய்வதை வங்கிகள் ஊக்குவிப்பதில்லை. ஆனால் சில வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப விநியோகிக்கிறது.

    ஆக இனி இந்தியாவில் ஆதார் எண் அனைத்து திட்டங்களுக்கும், சேவைகளுக்கும் மிக அவசியம் என்ற காலம் வெகு விரைவில் வரஉள்ளது.            


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :