Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
Logo
இனிய உதயம்
நான் இயல்பிலேயே நாடோடி மனம் கொண்டவன்!
 ................................................................
ஒரு கிராமத்தின் ஈரக்குரல்
 ................................................................
சிற்பியே! உனக்கு அம்மி கொத்தத் தெரியாதா?
 ................................................................
உழவன் தோற்றல் உலகம் தோற்கும்!
 ................................................................
01-05-2017

ரு அழகிய இலக்கியத் திருவிழாவாய் அரங்கேறியது, கவிக்கோ அப்துல் ரகுமானின் நூல்கள் வெளியீட்டு விழா. 28-ஆம் தேதி மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடந்த இந்த விழாவில், இவ்வாண்டுக்கான கவிக்கோ விருது வழங்கும் வைபவமும் நடந்தது.

விழாவிற்குத் தலைமை ஏற்ற இசைஞானி இளையராஜா, கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய  ‘"உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்', ’"ராப்பிச்சை' ஆகிய நூல்களை வெளியிட, அதனை ஆசிரியர் நக்கீரன் கோபால் பெற்றுக்கொண்டார். அடுத்து கவிக்கோ அறக்கட்டளையின் ஒரு லட்ச ரூபாயுடன் கூடிய கவிக்கோ விருதை, பாடலாசிரியர் முத்துலிங்கத்துக்கு இசைஞானி இளையராஜா வழங்கிச் சிறப்பித்தார்.

கவிஞர் ஜலாலுதீன் தயாரிப்பில்  கவிக்கோவின் உரைகள் அடங்கிய மூன்று குறுந்தகடுகளையும் இசைஞானி இளையராஜா வெளியிட, அதனை இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் பிருந்தாசாரதி, கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பாராட்டுரை வழங்கிய கவிமாமணி தி.மு.அப்துல்காதர், ""ஆங்கிலத்தில் சூட் என்றாலும் வழக்கு. கேஸ் என்றாலும் வழக்கு. அதனால்தானோ என்னவோ, பல வழக்குகளை சூட்கேஸை வைத்தே முடித்துவிடுகிறார்கள். கிராமத்தில் அய்யனார் சாமிக்கு, அவருக்குப் பிடித்த பீடி, சுருட்டை வைத்துப் படைப்பார்கள்.அதேபோல் இங்கு சிலரின் சமாதியில் அவர்களுக்குப் பிடித்த சூட்கேஸை வைத்துப் படைத்து, தியானம் செய்கிறார்கள்''’ என்றெல்லாம் அதிரடி கிளப்பி, அரங்கைக் கைத்தட்டலால் அதிரவைத்தவர், ‘""கவிதை என்பது முழுமையடையாதது. முழுமையை நோக்கி நகர்த்திச் செல்வது. அதனால்தான் இன்னும் எழுதிக்கொண்டே இருக்கிறோம். கவிக்கோவும் இன்னும் எழுதிக் குவிக்கவேண்டும்'' என்றார் உற்சாகமாக.கவிக்கோவின் நூல்களைப் பற்றிப் பேச வந்த கவிஞர் ஜெயபாஸ்கரன், ""இசைஞானிக்கு ஒரு வேண்டுகோள். நான் அண்மையில் ஒரு வங்கியில் கடன் கேட்டேன். மேனேஜர் உங்கள் அதிதீவிர ரசிகர். நான் ராஜாவை ஒருமுறை 10 அடி தூரத்திலாவது பார்க்கவேண்டும் என்று தன் ஆசையைச்  சொன்னார்.  "நான் அதற்கு  ஏற்பாடு செய்கிறேன்' என்றேன். இதனால் நான் கேட்ட கடன் எனக்குக் கிடைத்துவிட்டது. ஆகவே, அன்புகூர்ந்து எனக்காக இளையராஜா வங்கி மேனேஜருக்கு ஒருமுறை தரிசனம் கொடுக்கவேண்டும்'' என்ற வேண்டுகோளோடு தன் பேச்சைத் தொடங்க, அவையில்  வெடிச்சிரிப்பு எழுந்தது. இடைமறித்த இளையராஜா, ""என்னை ஸ்யூரிட்டியாக்கி விட்டீர்களா?''’என்றார் சிரிப்போடு. பின்னர் கவிக்கோவின் கவிதைகளை மேற்கோள் காட்டிய ஜெய பாஸ்கரன் ’""கவிக்கோவின் கவிதைகள் மானுடத்தை உய்விக்க வந்த கவிதை. அது படிக்கிறவர்களை எல்லாம் மேம்படுத்துகிறது. இந்தக் கவிதைப் பணியை அவர் தொடர்ந்து செய்யவேண்டும்''’ என்று அவையை உற்சாகத்தில் மிதக்கவிட்டார். விழாவில் உரையாற்றிய ஆசிரியர் நக்கீரன் கோபால், ""இன்று தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எப்போது யார் முதல்வராக இருக்கிறார் என்றும் புரிய வில்லை. அரசு விழாக்கள்கூட கேலிக்கூத்தாக நடத்தப்படுகிறது.  இதையெல்லாம் தட்டிக் கேட்கக்கூடிய தைரியம் பெற்றவர் கவிக்கோ.  இந்த வயதிலும் கடுமையாக உழைக்கிறார். உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையிலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதவேண்டியதை எழுதுகிறார். சமூக அநீதிக்கு எதிராக இந்த நிலையிலும் குரல்கொடுக்கிறார். உடல்நலம் சரியில்லாதபோதே இந்த போடுபோடுகிறார் என்றால்... அவரது  சமூக அநீதிக்கு எதிரான கோபம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம்''’என்றபடி, கவிக்கோவின் கவிதைகள் சிலவற்றை மேற்கோள்காட்ட, கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

விருந்தாளர் முத்துலிங்கத்தின் பாடல்களை  மேற்கோள் காட்டிப் பாராட்டிய கவிக்கோ அப்துல்ரகுமான், ’""இளையராஜாவின் பார்வை பட்டபிறகு, புகழின் உச்சிக்கு வந்துவிட்டார் முத்துலிங்கம். நான் வேறு ஓர் இயக்கத்தின் அனுதாபி. அவர் வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவர். கவிதை, நாடு, மொழி, இனம், கட்சிக்கு அப்பாற்பட்டது. அந்த வகையில் எதிர்முகாமைச் சேர்ந்த முத்துலிங்கத்தை அழைத்து விருதளித்திருக்கிறோம்'' என்று பாராட்டியதோடு, ""விழாவிற்கு வந்த இளையராஜாவுக்கு நன்றி.

அவரை அழைக்கச் சென்றபோது வெகுநேரம் அபூர்வமாக உரையாடினார். அந்த அனுபவம் இனிய உதயம் மே இதழில் வெளிவரும்.

அவர் இசைமேதை. இசையில் மூழ்குவது ஞானம். இறைவனை நெருங்க இசை மிக உன்னதமான ஊடகம். அது ஆரோகணம்போல் மேலேயும், அவரோகணம்போல் கீழேயும் எல்லையின்றிப் பயணிப்பது. அடிமுடி காணமுடியாதது. அதில் கரைகண்டு ஞானம் பெற்றவர் இளையராஜா. அவர்  நத்திங் பட் வின்ட்ஸ், திருவாசகம் போன்ற ஞானப் பாடல்களை மேலும் மேலும் எங்களுக்குத் தரவேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

ஏற்புரையாற்றிய கவிஞர் முத்துலிங்கம் கவிக்கோ உடனான தனது அனுபவங்களை அசைபோட்டதோடு, ‘""நான் எல்லா மொழி இசையமைப்பாளர்களிடமும் பாட்டெழுதிவிட்டேன். நம் இளையராஜாவைப் போல் மொழிப்புலமையும் இலக்கண அறிவும் கொண்ட ஒரு இசையமைப்பாளர் உலகில் எங்கும் இல்லை''’ என்று நெகிழ்ந்தார்.

நிறைவுரையாற்றிய இசைஞானி இளையராஜா, ""அப்துல்ரகுமான் என்றால் எனக்கு உயிர். இவரைப்போன்ற கவிஞர்கள் யாரும் சினிமாவில் இல்லை. ரகுமானின் கவிதை என் மனதுக்கு அவ்வளவு நெருக்கம். அதேசமயம் திரைப்பாடல் என்றால் அம்மி கொத்துவதுபோல் என்று அவர் சொல்லலாமா? அம்மி குடிசையிலும் இருக்கும் அரண்மனையிலும் இருக்கும். அதனால் நாம் அம்மியாக இருப்பதும் சிறப்புதான். சிற்பம் செதுக்கும் ரகுமானால் அம்மி கொத்தமுடியாதா? அம்மியை மட்டுமா திரை தந்திருக்கிறது? எத்தனையோ சிற்பங்களையும் தந்திருக்கிறது. அப்துல்ரகுமானைப் போன்றவர்கள் பாட்டெழுத வரவேண்டும். வருவதும் வராததும் அவர் விருப்பம். நான் என் விருப்பத்தைச் சொல்லிவிட்டேன்'' என கவிக்கோ மீதான காதலை உணர்த்தி, பாட்டெழுத அழைத்தார். உடனே கவிக்கோ எழுந்து, ""ஏற்றுக்கொள்கிறேன். எனக்கும் இளையராஜாவின் இசையில் பாட்டெழுதவேண்டும் என்ற ஆசையிருந்தது. இப்போது எழுதத் தயார். ஆனால் நான் திரைப்படத்திற்கு எழுதமாட்டேன். ஆல்பங்களுக்கு என்றால் எழுதுவேன். ஞானப் பாடல்களை எழுதத் தயார்''’என்று சொல்ல, இளையராஜா மீண்டும் எழுந்து, ‘""என் இசையில் அப்துல்ரகுமான் ஆல்பம் வரும்''’ என்று கைத்தட்டலுக்கு மத்தியில் அறிவித்தார். ஜாம்பவான்களின் இந்த இதமான தழுவல் ரக உரசலில், கவித்துவமாய் எழுந்த வெளிச்சத்தை அவையே ரசித்து கைத்தட்டலால் ஆராதித்தது. சோலைநாதன் வரவேற்க, தஞ்சை இனியன் சரவெடிக் கவிதைகளோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நேஷனல் பப்ளிஷர்ஸ்
எஸ்.எஸ்.ஷாஜகான் நன்றியுரை நல்கினார். அண்மைக் காலத்தில் சென்னை இப்படியொரு சில்லிப்பான இலக்கிய மழையில் நனைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

-சூர்யா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :