Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
இனிய உதயம்
என் நினைவுகளில் இன்குலாப்!
 ................................................................
சொல்லமறக்காத கதை
 ................................................................
சித்தர்கள் பாட்டில்
 ................................................................
ஒரு மழை வந்து...
 ................................................................
புரட்சிக் கவிஞரின் தோட்டத்துப் பூ
 ................................................................
கைம்பெண் ஓர் அட்சதைச் சொல்!
 ................................................................
பரிதாப பாவனா! -அதிர வைக்கும் ஆபத்துக்கள்!
 ................................................................
உலகை அதிரவைத்த தற்கொலைப் பாடலும்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
குற்றத்தை அங்கீகரிப்பதும் குற்றம்!
 ................................................................
01-03-2017யாப்புக் கோப்பைக்குள் நிரப்பிவைக்கப்பட்ட திராட்சைச் சாறாய் கவிதை இருந்த காலகட்டம். வேடிக்கை விளையாட்டுகள், துணுக்குத் தோரணங்கள், நமுத்துப்போன சொற்கள், வெற்றுப் பாராட்டுரைகள், உலாக்கள், கலம்பகங்கள், தூதுகள் என்று கவிதை தடுமாறிக் கொண்டிருந்த நாளில் அதைக் கந்தகக்கிடங்காக்கியவர் மகாகவி பாரதி. அவரின் தோள்தொட்டு எழுந்த புரட்சிக்கவிஞரோ சமூகத்தின் அத்தனை அழுக்குகளையும் எரித்துப் பொசுக்க கந்தகக்கிடங்கை எரிமலையாக்கினார்.

தந்தை பெரியாரின் சிந்தனைக் கங்குகளைக் கவிதையில் தெளித்த கவிஞர் இயற்கையையும் மானுடத்தையும் முன்னெடுத்து வைத்து முரசறைந் தார். அவர்வழியில் புறப்பட்ட ஆயிரமாயிரம் கவிஞர்களில் முன்னணி வீரராய் முகம்காட்டி நின்றவர்தான் கவிஞரேறு வாணிதாசன்.

புரட்சிக்கவிஞரை அடியொற்றித் தமிழ், தமிழன், தமிழ்நாடு, தமிழர் மேன்மை, இழந்த பெருமையை மீட்டெடுப்பது, இயற்கையின் செழுமையை விதந்துரைப்பது என்று தன் பாடுபொருள்களை வரையறுத்துக்கொண்டார் வாணிதாசன். 22-7-1915-ல் புதுவை வில்லியனூரில் பிறந்த கவிஞருக்கு பெற்றோர் இட்டபெயர் ரங்கசாமி. கவிஞரின் முதல் பாடல் சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட "தமிழன்' திங்களிதழில் "பாரதிநாள் இன்றடா' என்ற தலைப்பில் 1938ல் வெளிவந்தது. தன் இயற்பெயரைச் சுருக்கி ரமி என்ற பெயரில் எழுதினார். ஆதித்தனாருக்கு இப்பெயர் உடன்பாடில்லாததால் வாணிதாசன் என்ற பெயரில் எழுதப் பணித்தார். அதுவே பின்னாளில் நிலைத்துவிட்டது. திராவிட இயக்க இதழ்களில் கவிதைகளை வெளியிட்ட கவிஞர் 7.8.1974-ல் காலவெளியில் கலக்கும்வரை தான் கொண்ட கொள்கைகளிலிருந்து விலகிடாமல் வீறார்ந்த நடைபோட்டார்.

கவிஞர் நான்காம் வகுப்புப் படிக்கும்போதே புரட்சிக்கவிஞரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பைப் பெற்றார். அவர் நடத்திய இரவுப்பள்ளியிலும் படித்து புரட்சிக்கவிஞரின் கொள்கைவழி வாழ்வில் நடைபோடப் புள்ளியிட்டார். தமிழிலும் பிரெஞ்சிலும் புலமைபெற்ற கவிஞர் விக்டர் யுகோவால் எழுதப்பட்ட ஆன்ஜெலோ என்ற நாடகத்தை காதல் உள்ளம் என்று மொழிபெயர்த்தார். இந்த நாடகம் முழுமையாக கலைமன்றம் இதழில் வெளியிடப்பட்டது. மாப்பசானின் கதைகளையும் எமிலிஜோலா, பால்சாக் போன்றோரின் படைப்புகளையும் மொழிபெயர்த்தார். இயற்கை அழகில் மனம் தோய்ந்து மணக்க மணக்கக் கவிதை வடித்த கவிஞர் சமுதாய மாற்றத்திற்கான கருவியாக கவிதையை மாற்றமுனைந்தார். தமிழகத்தின் வொர்ட்ஸ்வர்த் என்று பாராட்டத்தக்க வகையில் இயற்கை யைப் பாடிக்களித்த கவிஞரின் கவிதைகளில் மானுடத்தை முன்னெடுக்கும் துடிப்பு துடித்துக் கொண்டிருந்தது. புரட்சிக்கவிஞரைப் பற்றிப் பெருமிதத்தோடு,

வானெழுந்த ஞாயிறவர்! அவரொளியைப் பெற்று
மறிகடல்சூழ் உலகத்தில் தொடுவானில் தோன்றும்
கூனெழுந்த நிலவுநான்! எனதாசான் நீண்ட
குமரிமுனைத் தமிழ்க்கடலே! கடலோரம் நானே!

என்று பாடுகிறார்.

இயற்கையின் அழகில் மனம் முழுமையாகத் தோய்ந்துவிடுகிறபொழுது கவிதை தானாகத் தளிர்விடுவதைத் தவிர்க்கமுடியாது. ஒருநாளைப் போல் மற்றொருநாள் விடிவதில்லை. விடியலில் கண்விழிப்பவர்கள் வானம் வரைந்துவைக்கும் புதுப்புதுக் கோலங்களைக் கண்டால் ஒவ்வொரு காலைப்பொழுதிலும் எத்தனை அழகு கொட்டிக் கிடக்கிறது என்பதைக் காணமுடியும். கவிஞர் இதையே,

தாமரை மொட்டுக்குள்ளே-அழகு
தங்கிக் கிடக்குதடி! கதிர்
சாமரை வீச்சினிலே-விரிந்து
சஞ்சலம் போக்குதடி!
வீடு துலக்கும்பெண்கள்-குளிர்முகம்
வீசும் ஒளியழகில்-வான்
நாடு விட்டு நகரும்-முழுமதி
நாணி முகம்வெளுத்தே!

என்று பாடுகிறார். காலைக் கதிரவன் கண்திறக் கும்பொழுது என்ன நடக்கிறது வானில்?

பொன்னிறப் பரிதி யுண்டை
போர்வையை விலக்கி மெல்ல
நன்னிலை எட்டிப் பார்க்கும்!
நகர்ந்தெழும் விரைந்து வானில்!
தென்னைமேல் புதர்மேல் குட்டை
தேங்கிய நீரின் மீது
பொன்மழை.. அடடா! அந்தப்
புதுமையே புதுமை யாமே

என்கிறார். இந்த அழகையெல்லாம் ரசித்துக் கொண்டே வருகிற மனம்,

வான முகட்டெல்லாம்-அழகு
வளர்த்திடு தீயழகில்-உயர்
ஞானம் பிறக்குதடி!-மனத்தில்
நானற்றுப் போகுதடி!

என்று  பாடுகிறது. தீயின் அழகை, அதன் இனிமையைக் கவிமனமே உணர முடியும்.

அதனால்தான் தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா
 
என்று மகாகவி பாரதி பாடினார்போலும். காலைக்கதிரவனை இன்னும் அழகுபடுத்தி,

தொடுவான மதிலுக் கப்பால்
தோன்றிடும் அழகைக் காண
நடுவினில் துளைத்த சந்தோ,
அகண்டமோ, நடுவி ளக்கோ,
கடலிடை எழுந்த காலைக்
கதிரவன்? கதிரின் வீச்சுப்
படுமிட மெல்லாம் பொன்!பொன்!
பார் எழிலோவியத்தை

என்று மயங்குகிறார். பகலில்தான் அழகின் ஆட்சியா? இரவில் இல்லையா? இதோ.. இரவைப் பார்க்கிறார். விண்மீன்கள் பூத்துக் கிடக்கின்றன. உருவகங்களாகச் சொற்கள் வந்து உதிர்கின்றன..

தைத்திங்கள் குலம்பூத்த பூவோ விண்மீன்?
தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்னக் காசோ?
மைத்தடங்கண் மடமாதர் உதிர்த்துப் பின்னர்
மாலைக்குத் தேர்ந்தெடுக்கும் முல்லைப் பூவோ?
தைத்திட்ட பட்டாடை முத்தோ, தீட்டித்
தரப்பட்ட ஒளிக்கல்லோ, சரிகைச் சேலை
உய்த்திட்ட பொடிப்பூவோ, தொலைவில் தோன்றும்
ஊரிட்ட மின்விளக்கோ விண்மீன் கூட்டம்?

என்று விரித்துக்கொண்டே போகின்றார்.

அச்சடித்த காசை அடிநாளிலேயே வெளியிட்டவன் தமிழ்மன்னன் என்பதைப் பதிகிற கவிஞர் பழம் பெருமையைப் பேசுவதாக நினைக்கக்கூடாது. இருட்டடிப்புச் செய்யப்படுகிற தமிழினத்தின் மேன்மையை மீட்டெடுக்கும் அவாவைப் பதிவு செய்வதாகவே கருதவேண்டும். ஏனென்றால்,

நாலுபேர் கூடிச் சொன்னால்
கெட்டதை நல்ல தென்பார்.
மூலத்தை ஆய்ந்து பாரார்..
முச்சிமேல் தூக்கி ஆர்ப்பார்

என்கிறார். இன்றைக்கு அதுதானே நடக்கிறது?

வாழ்ந்தவர்நாம்..இந்நாளில் வகையற்றுப் போனோம்
மனமார என்றேனும் நீர்நினைத்த துண்டோ?
என்று வினாத்தொடுக்கிற கவிஞர்
எழுத்தாலே தாய்நாட்டைத் தான்பிறந்த நாட்டை
ஈடேற்ற முனைவதுதான் படித்தவனின் செய்கை!
என்கிறார். ஏனென்றால்
நன்செய் விளைந்தென்?
புன்செய் விளைந்தென்?
நட்டவன் அறுப்பதில்லை-உழுது
நட்டவன் அறுப்பதில்லை
என்பதை நன்கறிந்த கவிஞர்
துருப்பி டித்த ஆயுத மெல்லாம்
துடைத்து நீறு குங்குமஞ் சாத்தி
அருங்கொலு வாகக் கூடம் நிரப்பி
அன்னை பூசை செய்யும் வழக்கால்
கருவழிந்தோம்
என்பதைச் சுட்டிக்காட்டி
புத்த கத்தை அடுக்கி அதன்முன்
பூநி ரப்பி மணப்பொடி தூவிக்
கத்திக் கத்தி அர்ச்சனை செய்தென்?
கலைவ ளருமோ நாட்டினிற் சொல்வாய்?

என்று கேட்கிறார். மூடத்தனங்களில் மூழ்கிக்கிடந்தால் என்ன நடக்கும். சமுதாயம் சீரழியும். பொய்யும் புரட்டும் புகழ்மாலை சூடும். அதனால்தான்,

பெண்டுபிள்ளை நோய்வறுமை அடிமை கோதப்
பேச்சுரிமை யற்றிங்கே தமிழர் கூட்டம்
அண்டையிலே வாழ்வதைநான் கண்டேன்..கண்டேன்
ஆண்மையற்று வாழ்வதனால் வந்த கேடு!
என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பாடுபடுகிறவன் படுகிற பாட்டைக் கண்டு கொதிக்கிற கவிஞர்,
வளமாக்க உழைத்திட்ட தொழிலாளிக் கீடு
வழங்கிற்று வறுமையும் தாழ்மையும் நாடு
உளம்உடல் துடிக்குதே அவர்படும் பாடு
உறங்கும் புலிவிழித்தால் நரிகளுக்கே கேடு!

என்று குமுறுகிறார். சமதர்மச் சமுதாயத்தை நாடுகிற கவிமனம் எதைத் துணைக்கழைக்கிறது என்று பாருங்கள். மொழியை அழித்தால் இனத்தை அழித்துவிடலாம் என்பது வரலாறு. எனவே ஒரு சமுதாயம் தன் வாழ்வின் வரலாற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் எப்பொழுதும் மொழியை முன்னெடுத்து நிற்க வேண்டும். இதைத்தான் கவிஞர்

கந்தையன்றிக் கையைப் போர்த்திக்
கடுங்குளிரில் மிகுபனியில் மழையிலே-புயல்
கடுங்குளிரில் மிகுபனியில் மழையிலே
இந்தநாட்டு மக்கள் வாழ
ஏக்கம் தோன்றும் நெஞ்சிலே..
வந்து மோதும் புரட்சி எண்ணம்
மறக்கவென்னால் ஆகுமோ?-சற்று
பொறுக்கவென்னால் ஆகுமோ?
செந்தமிழே! உன்னையன்றித்
தீமைசாய்க்கப் போகுமோ?-இந்தத்
தீமைசாய்க்கப் போகுமோ?

என்று பாடுகிறார். மொழியின் பற்று இனத்தை மீட்டெடுக்கும் என்பதை நன்கறிந்த கவிஞர்,

தமிழ்நாட்டிற்(கு) ஊறுசெய நினைத்தாற் போதும்
தலையுருளும் எவராக இருந்திட் டாலும்
என்ற எச்சரிக்கையை எழுப்புகிறார். ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை எண்ணிக் கவிவடித்த கவிஞர் தான் எதற்காக எழுதுகிறேன் என்பதை,
பழுத்திருக்கும் மரத்தைநோக்கிப்
பறந்துசெல்லும் புட்கள்போல்-நாளும்
பறந்துசெல்லும் புட்கள்போல்
கொழுத்திருக்கும் செல்வர்இல்லம்
குறுகியோடப் பாடுவேன்-பகிர்ந்து
கொடுத்துதவப் பாடுவேன்.
தேக்கிவைத்த பொருட்களெல்லாம்
தெருக்கொருநாள் வந்திடும்-ஆம்
தெருக்கொருநாள் வந்திடும்.

என்கிறார். இயற்கை நமக்கு ஒவ்வொன்றையும் கொடுக்கிறது. மனிதராகப் பிறந்தநாம் மற்றவர்க்கு எதையாவது கொடுத்துச் செல்ல வேண்டாமா? அதுவன்றோ நிறைவாழ்வு? தனக்குத் தனக்கு என்று பதுக்கிவைத்து வாழ்கிற வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? மரணத்தில்கூட அவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்பது வரலாறு காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நாட்டைத் திருடி நலிவைப் பெருக்கி
உயர்வு தாழ்வை உண்டாக்கித் திரியும்
நாட்டைலி யல்லவோ நாம்கொல்ல வேண்டும்?
என்கிற கவிஞர்,

வான்கொடுக்க மழையுண்டு! மழையைத் தேக்கி
வயல்கொடுக்கக் காலுண்டு! பசிநோய் போக்க
மீன்கொடுக்க ஆறுண்டு! நன்செய் உண்டு!
மணங்கொடுக்க விரிவண்ணப் பூக்கள் உண்டு!
தேன்கொடுக்க மலையுண்டு! மலையின் பாங்கில்
தினைகொடுக்கப் புனமுண்டு! மக்கட் கென்றும்
நான்கொடுக்க என்வாழ்வாம் உயிரின் மேலாம்
நல்லதமிழ்ப் பாட்டுண்டே! அதுவே போதும்!

என்கிறார். கவிஞனுக்குத் தெளிந்த பார்வை வேண்டும். இல்லையெனில் உளறுவதையெல்லாம் கவிதையென்று நினைத்துக்கொண்டு திரிகிற

அவலம் நேர்ந்துவிடும். அதனால்தான்
வண்டினம் போலத் தத்தம்
மகிழ்வொன்றே கருதும் மக்கள்
சண்டைக்கு வந்திட் டாலும்
தயங்கிடேன், எழுது வேன்நான்.

என்று முழங்குகிறார்.

இயற்கையைப் பாடுகிற பொழுதும் கவிஞர் சமுதாய நிலைமையை, மொழியின் பெருமையைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை என்பதை அவருடைய பல கவிதைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. எழிலோவியத்தைத் தீட்டிக்காட்டுகிற கவிஞர்,

ஆடிய கொடிகள் தோறும்
அழகிய பூக்கள்! பூவைத்
தேடிய வண்டின் பாட்டோ
செய்தமிழ்!

 என்கிறார். திரண்டுவரும் முகிலினமோ சமமாகத்தான் மழைபொழிகிறது. இதைத் தன் முகில் பாட்டில் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்

வழங்குவோர் பொதுவா னாலும்
வாங்குவோர் சமமாய் வாங்கக்
கிழக்கதை பேசி ஏய்ப்போர்
கெடுக்கின்றார்..இந்த நாட்டில்
பழக்கத்தால் உயர்வு தாழ்வு
படைப்பினால் அல்ல தம்பி!
முழக்குவோம் வளத்தை எங்கும்
முடக்குவோர் முடக்கி நாமே!
என்று சொல்லி,

உழைப்பினைப் பொதுமை ஆக்கி
உருப்பெறும் விளைவை எல்லாம்
பிழைப்பவர்  பகிர்ந்து துய்க்கப்
பேணுதல் பொதுமை!
 என்று தெளிவுபடுத்தி
விளைவினை மக்க ளெல்லாம்
பொதுவாகத் துய்க்கும் மேன்மை
முளைத்திடில் தமிழர் நாட்டில்
முளைத்திடும் இன்ப வாழ்வே!

என்கிறார். நமக்குள் நாம் பேதமுற்றுக் கிடந்தால் என்னாகும் என்பதைத் தன் காடு கவிதையில்,

காக்கைகள் தத்தம் கூண்டில்
கால்வைத்த குயிலைச் சேர்ந்து
தாக்கின! இனப்போர் கண்டேன்!
தமிழக முன்னாள் கண்டேன்!

என்று பாடுகிறார். இயற்கையின் நிகழ்வுகளில் இருந்து இனத்தின் பெருமையை மீட்டெடுக்க முனைகிற கவிஞரின் உள்ளம் இரவைப் பற்றி எழுதுகிற பொழுது,

தீந்தமிழின் இடைவந்த கலப்புமொழி போலச்
செவ்வானை மிகவிரைவாய் விழுங்கவரும் கங்குல்

என்று ஒப்பிட்டு உண்மையைச் சுட்டிக்காட்டு கிறார்.

தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கவிஞர் சாதிஒழிப்பு, பெண்உரிமை, பெண்கல்வி, பொதுவுடைமை என்று பல தளங்களில் தன் படைப்புகளைத் தந்தவர். தமிழச்சி, கொடிமுல்லை என்று அவர் எழுதிய சிறுகாவியங்கள் பெண்ணுரிமையை, காதலை, சாதிஒழிப்பை முன்னிறுத்துகின்றன. இசைப்பாடல்களின் தொகுப்பாய் மலர்ந்த தொடுவானம் அற்புதமான இசைப்பாடல்கள் கொண்டது.

தாழ்ந்தவர் உயர்ந்தவர் பேசுதல் வீழ்ச்சி
தமிழனின் நல்வாழ்வைக் குலைத்ததிந்தச் சூழ்ச்சி

 என்கிற கவிஞர்

தாழ்வும் உயர்வு மின்றிச் சரியாக வாழ்ந்தவர்
சாதி சமயமேற்றுத் தடந்தோளை இழந்தனர்

 என்பதைச் சொல்லி,

ஆண்டு களித்த இனம் அடிமையில் வாழ்வதோ?
அண்டிப் பிழைக்க வந்தோர் அரசாள விடுவதோ?

என்கிறார்.

தமிழ்நாட்டைத் தமிழ்த்தலைவர் ஆளக் கண்டு
தோளெல்லாம் பூரிக்கும் தமிழ்க்கூட் டம்பார்

என்கிற கவிஞர்

வடக்கிருந்து வருமெதுவும்
தமிழுக்குப் பகையென்றால்
பகைந மக்காம்
அடக்கத்திற் கெல்லையுண்டே!
அன்னைக்கும் அருந்தமிழ்க்கும்
தொல்லை யென்றால்
கிடக்கட்டும் என்றிருக்கும்
கீழ்ச்செயலோ தமிழர்செயல்?
கிடையா தென்றும்!

என்றும் கொதிக்கிறார். தாலாட்டுப் பாட்டிலும் தன் கருத்தைப் பதியனிடுகிறார்.

வளமிகுந்த இந்தத் திருநாட்டில் வாழ்வோர்
உளம்விரிந்தோர் இல்லை! உரைத்தாலும் கேளார்.
அதற்காக அஞ்சாதே! அஞ்சாதே! முத்தே!
அதைமாற்ற வாழ்வதுவே இன்பமடா இன்பம்!
என்றும்
இல்லார்கள் இல்லாத இன்பத் திருநாட்டை
கல்லார்கள் இல்லாத் கன்னித் தமிழ்நாட்டைச்
சாதிச் சனியும் தமிழ்ப்பகையும் இல்லாத
ஆதித் தமிழ்நாட்டை அடைவோம்.!

என்று தன் வாழ்வின் நோக்கத்தையே வடித்து வைக்கிறார்.

சாதி வெறியர்களைச் சாட்டையால் அடிப்பதுபோல்
ஓடும் ஆற்றுத் தண்ணீரில்
ஓயா தடித்துத் துணிவெளுப்போர்
ஆடும் குடுமிசெய் அம்பட்டர்
அச்சுக் காணி செய்திடுவோர்
காடு மேடு சுற்றிடநம்
காலுக் குதவும் சக்கிலியர்
ஏடீ! இவர்கள் இல்லையெனில்
நம்மால் வாழ இயன்றிடுமோ?
என்று கேட்கிற கவிஞர்
பூமியை உழுமே ழைக்குப்
புதுப்புது வரிகள் வேறு
சாமியார் கூட்டம் வேறு
தாங்கொணா வறுமை வேறு
மாமியார் போல வாய்த்த
செல்வரின் கூட்டம் வேறாம்.
ஊமைபோல் எத்த னைநாள்
ஊரினில் வாழ்வார் மக்கள்?
என்று மனங்கசிந்து
உழுபவன்,நாட்டில் உள்ள
உழைப்பாளி நிலையைக் கண்டே
அழுகின்றேன்! இந்த நாட்டின்
ஆட்சியை மாற்ற வேண்டும்!

என்று சூளுரைக்கிறார். அவர் எழுதி எத்தனை காலமாயிற்று. இன்னும் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது.

கவிஞர் படைத்த புதிய ஆத்திசூடியும் புதிய கொன்றைவேனும் அவருடைய ஆழ்ந்த சிந்தனைகளின், அவர் கொண்ட கொள்கைகளின் சாட்சியங்களாக ஒளிர்கின்றன.

உடைமை பொதுசெய், கொடுங்கோல் எதிர்த்துநில், தாய்மொழி வளர்த்திடு, தீண்டாமை ஒழி, நூறுபேர் தனித்தெதிர், பகுத்தறிவோடுவாழ், பார்ப்பன சடங்கு தள், முப்பால் கைவிடேல், மூடப்பழக்கம் தள், மொழிபல கற்றுணர், வௌவாலாய் வாழேல்,

சோற்றைப் பகிர்ந்தால் வேற்றுமை இல்லை,  தனித்தமிழ் போல இனிப்பு வேறில்லை, துடியிடையாரை அடிமையாக்காதே, நாட்டிற் குரியவர் நாடாள வேண்டும், நொடிப்பொழுதேனும் அடிமை விரும்பேல், பேதைமை பலநூல் ஓத ஒழியும், போர்வையைப் பார்த்து யாரையும் மதியேல், மைவிழியாரை வையும் நூல் கொளுத்து, மோடியைப் பலநாள் நீடிக்க விடாதே. இப்படிச் சுருக்கமாய் வந்து விழும் நெருப்பு வரிகளிலும் இயற்கை அழகில் மனம்தோய்ந்து அவர் எழுதிய கவிதைகளிலும் வாணிதாசன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார். எனினும் தனக்கென்று ஒரு தனிவழியில் அவர் பறக்கத் தவறிவிட்டாரோ என்னும் எண்ணம் எழுவதையும் தடுக்க முடியவில்லை.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :