Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17கு கீழிருந்து திருமலையைப் பார்த்ததும் மனம் உருகிற்று. "அய்யா... அய்யா...' என்ற கெஞ்சல் வந்தது. கீழிருந்தபடியே மலைநோக்கி கைகூப்பினான். "யார் நீ. எனக்குத் தெரியவில்லை. நீ கடவுளா? அந்தக் கேள்வியெல் லாம் எனக்கில்லை. ஆனால் உன்னைத் தொடுகிறபோது, உன்னைப் பார்க்கிறபோது, உன்னை நினைக்கிறபோது, உன்னை நெருங்குகிறபோது நான் பரமானந்தம் அடைகிறேன். ஆயிரத்து நூற்று எண்பத்து ஏழு. அய்யா. ஜெயித்துவிட்டேன். எண்பத்தெட்டு முதல் மார்க். மூன்று பேர். எண்பத்து ஏழு இரண்டாம் மார்க். நாலு பேர். அதனால் என்ன. இது போதும்.'

எல்லா பத்திரிகையிலும் முகம் வந்தது. தாயார் லட்டு ஊட்டுவதாக அபத்தமான ஒரு படம் ஒரு தினசரியில் வந்தது. இவன் லட்டு ஊட்டுவதும் படம் எடுக்கச் சொன்னார்கள். மறுத்துவிட்டான்.

""அப்பா, நீங்க இறுக்கிக் கொள்வீங்களே, அந்த மாதிரி பண்ணுங்க. அந்தப் படம் வந்தா நல்லா இருக்கும்.''

அவன் அப்பா, அம்மா வலப்பக்கம் இருக்க, இவனை இடப்பக்கம் இறுக்கிக் கொண்டார். கிட்டத்தட்ட உதடு குவித்து அவன் நெற்றிக்கு வந்தார்.

ஒரு வாரப் பத்திரிகையில் அட்டைப்படமாக வந்தது. முதல் மார்க் எடுத்தவன் முகத்தை மட்டும்
போட்டார்கள். மலையப்ப ஸ்வாமி அந்த குடும்பத்தின் தவத்தை அட்டைப் படமாகக் கொண்டு வந்துவிட்டார்.

பத்திரிகை என்பது இவ்வளவு பெரிய வீச்சா. இவ்வளவு பெரிய பட்டாக் கத்தியா. காய்கறி விற்பவரிலிருந்து கல்லூரி முதல்வர் வரை, "ஆமாம். உங்க படம் பார்த்தேன். அந்த பத்திரிகை உங்களுக்கு வேண்டியவங்களா. பெரிசா அட்டைப்படம் போட்டான்' என்றனர்.

நான்குபேரில் எல்லாரையும்விட தங்கை அழகாக இருந்தாள். "சிற்பி செதுக்காத பொற்சிலையே' என்று முகநூலில் அவளைப் பற்றிய விமர்சனம் வந்தது.

எது எடுத்துக்கொண்டு போகிறது வாழ்க்கையை. யார் தூக்கிக்கொண்டு போகிறார்கள். இத்தனை உயரம் கொண்டுபோய் யார் வைத்தார்கள். இது சரியா, தவறா. நல்ல உள்ளங்கள் அல்லவா. மிரண்டார்கள். இம்மாதிரியான வெளிச்சத்திற்குப் பழக்கமில்லை அல்லவா. கூசினார்கள்.

""ஒண்ணு தெரியுமாடா.''

""என்னம்மா.''

""ராத்திரி உங்கப்பா முகத்தைப் பொத்திக்கிட்டு ஓன்னு அழுதாருடா.''

""ஏம்மா, என்னாச்சு.'' அவன் பதறினான்.

""ஒண்ணுமில்ல. எம்மேல அவருக்கு ரொம்ப சந்தோஷம். "அவன் நல்ல மார்க் வாங்கினதுக்குக் காரணம் நீதான். உன் உழைப்புதான். உன் பிரார்த்தனைதான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம மாடு மாதிரி நீ வேலை செய்யற. நான் அவனை கவனிக்கலை. நீதான் கவனிச்ச. இந்த நல்லது மாதிரியே பொண்ணு கல்யாணமும் முடிஞ்சுட்டா போதும். நான் உனக்கு எதாவது செய்யணுமா. சொல்லு செய்யறேன்' அப்படின்னு அழுவுறாரு.''

""என்னம்மா. என்னம்மா இது.'' அவனுக்கும் அழுகை வந்தது.

"அன்பு என்றொரு வேத மந்திரம் ஆணுள் வந்தது பெண்ணினால். இன்பம் என்றொரு யாகம் வந்தது அன்பு செய்திடும் ஆணினால்.' இது நான் எழுதிய பாட்டு. ஆனால் பழைய தமிழ்ப்பாட்டு வேறுவிதமாக முடியும். "ஆசை ஏதுபடும். நாணம் ஏதுபடும். அந்தி மாலைப்படும் நேரமே' செக்கச் செவேல் என்ற அந்திவானம் போல பாராட்டுகளில் நனைந்து மனம் குழம்பித் தவித்தது. அப்பாவின் அழுகையும் அந்த குழப்பத்தில் ஒருவகை.ஆனால் இதெல்லாம் விமர்சனம்தான். இப்பொழுது என்னசெய்யவேண்டும் என்பதுதான் கேள்வி. மலையப்ப ஸ்வாமி கோவிலுக்கு மறுபடியும் தனியாகப் போகிறபொழுது, தனியேபோய் நன்றி சொல்லவேண்டும் என்று பரபரக்கிறபொழுது முன்னைக் காட்டிலும் மனம் இறுகி நின்றது. யாரையாவது பார்த்துப் புன்முறுவல் பூப்பது உண்டே, அதுவும் நின்று போனது. வரிசையில் நிற்கவேண்டுமென்பதால் ஒரு காபிகூட குடிக்கவில்லை. ஒட்டஒட்ட பட்டினி. குழாய் திறந்து முகம் அலம்பி, வேண்டும் மட்டும் தண்ணீர் குடித்தபிறகு வயிறு காலிசெய்து வரிசைக்கு வந்து உட்கார்ந்தபோது மிகப்பெரிய களைப்பாக இருந்தது. மனம் தூங்கியது. உடம்பு அசந்தது.

""தூங்குங்க. பன்னிரண்டு மணிநேரம் ஆகுமாம். வெளியே சொல்றாங்க. ஏகப்பட்ட கூட்டமாம். நாலு ஸ்பெஷல் தரிசனமாம்'' என்று யாரோ சொன்னார் கள். ஆனால் இதையெல்லாம் யார் தீர்மானிப்பது. அரை மணி நேரம் தூங்கியிருப்பான். சட்டென்று எழுப்பினார்கள். "நகரு நகரு நகரு நகரு' என்றார் கள். வேகமாக நகர்ந்து கோவில் வாசலுக்கு முக்கால் மணி நேரத்தில் வந்துவிட்டான்.

""இது முடிஞ்ச பிறகுதான் வி.ஐ.பி.யாம். வி.ஐ.பி.க்கு இப்போ இல்லையாம்.'' முன்னே சொன்னவரே இப்போது மாற்றிச் சொன்னார். பன்னிரண்டு மணி நேரமல்ல. மூன்று மணி நேரத்திலேயே முடிந்தது.

உள்ளே உத்வேகம் கூடியது. ஒரு இருப்பு அழுத்தமாய் இருந்தது. என்ன மதிப்பெண்கள் என்று தவித்துக்கொண்டு வந்தான் அல்லவா.

அது இல்லை. என்ன எதிர்காலம் என்று யோசிக்க வேண்டுமா. மலையப்ப ஸ்வாமி பார்த்துக் கொள்வார். அவன் சுத்தமாக மனதைத் துடைத்து வைத்தான். ஒரு புள்ளிகூட இல்லாத கரும்பலகையாக, ஒரு கோடுகூட இழுக்காத கரும்பலகையாக மனம் இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எந்த வேண்டுதலும் இல்லை.

ஒரு அம்மாள் மலையப்ப ஸ்வாமி பற்றி பாட்டுப் பாடினாள். சற்று நேரம் கேட்டான். பிறகு இது தேவையில்லை என்று உணர்ந்தான். "பஜகோவிந்தம் பஜகோவிந்தம்' என்று வேறொருவர் பஜனைப் பாடல்கள் குழுவாகப் பாடினார். அதுவும் காதுக்கு குத்தலாக இருந்தது. அந்த இடத்தைவிட்டு இன்னும் பதினைந்து அடி தள்ளிப்போனான். இப்பொழுது சத்தம் அர்த்தமில்லாமல் வந்துகொண்டிருந்தது. அர்த்தமில்லாத சத்தத்தை மனம் ஸ்வீகரிக்கவில்லை.

கூண்டுக்குள் அடைத்து வைத்த மிருகங்கள்போல நூற்றுக்கணக்கான மனிதர்கள் கம்பி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யாருக்கும் ஒழுக்கம் இல்லை. அதனால்தான் ஒழுக்கத்திற்காக கம்பி வலை போட்டிருக்கிறார்கள். கதவு அடைத்து தாழ்ப்பாள் போட்டிருக்கிறார்கள். இது மட்டுமா கூண்டு. இந்த தமிழ்நாடு பெரிய கூண்டு. இந்தியா இன்னொரு கூண்டு.

அதைவிட பெரிய கூண்டு உலகம். எல்லாரும் எப்போதும் கூண்டுக்குள் இருக்கிற மிருகங்கள்தான். இந்த கூண்டிலேயே மௌனமாய் இருப்பது நல்லது.

என்ன இது. நாம் சிந்திப்பதில் கெட்டிக் காரனாகி விட்டோமா. பெரிய தத்துவவாதி ஆகிவிட்டோமா. அருகே ஒரு குடும்பத்தின் ஆறேழு ஆந்திர தேசத்துப் பெண்கள் சளசளத்துக் கொண்டு வந்தார்கள்.

""நூவு மெட்ராஸா.''

""ஆமாம்.''

சொல்லிவிட்டு முகம் திருப்பிக் கொண்டான். தங்கள்பால் ஈர்க்கப்படுவான் என்று அவர்கள் நினைக்க, அந்த க்ஷணமே அறுத்தான். இதுவல்லவே இடம் என்று தெளிவாக இருந்தான். முன் மண்டபம் ஏறி கருடாழ்வாரைத் தொழுது கண்குளிரப் பார்த்து, "என் ஐயனுக்கு சேவை  செய்கின்ற உங்களுக்கு நான் சேவை செய்யவேண்டும்' என்று வேண்டிக்கொண்டு, பலகை ஏறி உயரே பார்த்து, மறுபடியும் தொலைதூரத்தில் நின்று அவரை கைகூப்பி வணங்கி, "மிக்க நன்றி. மிக்க நன்றி' என்று அருகே போகும் வரை சொல்லி, அருகே போய் நின்று அவரைப் பார்க்கையில் வெடித்து அழுகை வந்தது.

"அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்றும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.' எச்சுவை. இப்படி தரிசனம் செய்கின்ற சுவை. இவர் நினைப்பாகவே இருக்கின்ற சுவை. இந்தச் சுவையைவிட இந்திர லோகம் ஆளும் மிக சந்தோஷமான, சௌகரியமான, குதூகலமான இடங்கள் கிடைத்தாலும் அது வேண்டாம். உன்னோடு இருப்பதே போதும்.

எத்தனையோமுறை சொன்னது இப்போது முழு அர்த்தத்தோடு விளங்கிற்று. அவன் கைகூப்பி குனிந்து தரைதொட்டு நிமிர்ந்து, கண்ணில் ஒற்றிக் கொண்டு, "இதற்குமேல் சகலமும் நீ. எனக்கு எந்த முயற்சியும் இல்லை' என்று அமைதியாக வெளியே வந்தான். திரும்பத் திரும்ப அவரைப் பார்த்தான். "நான் என்ன நகர்ந்தாலும், என்ன செய்தாலும் அது நீ செய்வதே' என்று உறுதிபடக் கூறினான். வெளியே வந்தான். உணவு எடுத்துக்கொண்டான். கேட்டுக்கேட்டு சாப்பிட்டான். மறுபடியும் பஸ் ஏறி இரவு நேரம் வீட்டிற்கு வந்தான்.

""எங்கடா போயிட்ட, பயந்தே போயிட் டோம்.''

இவன் டாக்டரா. இன்ஜினியரா. நல்ல பதவியா. சுமாரான இடமா. அழகான மனைவியா. இரண்டும் கெட்டானா. இதெல்லாம் இனி முக்கியமில்லை. அவன் மனம் மலர்ந்துவிட்டது. அவனுக்கு தெளிவு பிறந்துவிட்டது. இதுதான் வயது. அந்த பதினெட்டு, பத்தொன்பது வயதில் பளிச்சென்று உலகம் புரிபட, என்ன செய்கிறோம் என்ற தெளிவு வர, வாழ்க்கையில் வெற்றி என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம், என்ன விவாதிக்கிறோம், என்ன உழைக்கிறோம் என்று தெரியவில்லையெனில் அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்கும். இந்த தெளிவு இந்த வயதில் வந்துவிட வேண்டும். தன்னைப் பற்றி, தன் உணர்வுகள் பற்றி ஒரு காவல்காரனைப்போல கவனிக்கின்ற திறன் வந்துவிட வேண்டும்.

இதற்குப் பெயர் அலர்ட்னெஸ். தன்னைப் பற்றிய தெளிவு.

ஆனால் நிஜ விழிப்பு வேறு. எது நான் என்ற மிகப்பெரும் கேள்வி இதைத்தொடர்ந்து உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும். அடுத்தபடி வேலையில் ஈடுபட, தொடர்ந்து செய்ய உள்ளிருப்பது என்னவென்று தெரிந்துவிடும்.

அதை நோக்கியே மனம் போகும்.

லௌகீக வாழ்க்கையின் வெற்றியும், தன்னை அறியும் நிதானமும், தன் கையில் இருக்கின்ற வேலையைத் திறன்பட செய்கின்ற அழகுணர்ச்சி யும் வந்துவிடும். தெளியும் நேரம், லௌகீக வாழ்க்கையின் வெற்றி களுக்கு அல்லது படிப்புகளுக்கு, பதவிகளுக்கு பெரிய ஈர்ப்பு ஒன்றும் வந்துவிடாது.

மலையப்ப ஸ்வாமியின் கருணை என்றுதானே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்.

அந்த அடக்கம் உன்னை அறிந்து கொள்வதற்கு இன்னும் உதவி செய்யும். "நான் யார் தெரியுமா. எப்பேர்ப்பட்ட ஆள் தெரியுமா. என்னை என்னான்னு நினைச்சிருக்கே' என்றிருந்தால் உன் அறிவு, உன் தெளிவு மொண்ணையாகிப்போகும். இதுதான் ஆரம்பகட்ட பலம். இதுதான் முதன்மைப் பயிற்சி.

இது சொல்லிக் கொடுத்து வருவதில்லை. உனக்காகத் தெரியவேண்டும். நீயாக அறிந்து கொள்ளவேண்டும். சொல்லிக்கொடுத்தால் வெகு நிச்சயம் தவறாகத்தான் புரிந்து கொள்வாய். "இந்த ஆள் என்ன பெரிய இவனா, என்னமோ வாத்யார் மாதிரி கை ஆட்டிப் பேசறான். இவன் சொல்லிட்டா அது சரியாயிடுமா. இவனைவிட எவ்வளவு பெரிய கொம்பன்லாம் இருக்கான்.' தேவையே இல்லாது சொல்லிக்கொடுப்பவனை இகழ ஆரம்பித்துவிடுவாய்.

எவனொருவன் சொல்லிக்கொடுக்க முற்படுகிறவனை புறங்கூறிப் பேசுகிறானோ அவனால் கடைசிவரை எங்கும், எதுவும் கற்றுக்கொள்ள முடியாது.

கற்றுக்கொள்ள பணிவு வேண்டும். பணிவென்பது ஒரு அமைதி. பணிவென்பது ஒரு நம்பிக்கை. எதிரே இருப்பவருக்கு சொல்லித் தரும் வலிவு இருக்கும் என்ற நம்பிக்கை.

உன்னுடைய தலையெழுத்து, எதிரே இருப்பவன் குப்பைத் தொட்டியாகவும் இருக்கலாம். என்ன அதனால். ஒரு குப்பைத் தொட்டியை குப்பைத் தொட்டி என்று புரிந்துகொள்ள ஒரு கால அவகாசமும், சில சம்பவங்களும் வேண்டுமல்லவா. இப்பொழுது புரிந்துகொண்டாய். இவன் குப்பைத் தொட்டி. குருவல்ல. இவனுக்கு சொல்லித்தர இயலாது. இவன் வெறும் வாய் சவடால்காரன். இவன்  பொய்யன், புனைசுருட்டு என்று தெரிந்துகொள்ள உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்கூட மிக நல்லவையே. உத்தமமானவையே. உங்களுக்கு உதவுபவையே.

யாரும் சொல்லித்தராமல் உங்களுக்கு எதுவும் வந்துவிடாது. அதனால்தான் பரமாத்மாவும், இந்த பிரபஞ்சத்தின் சக்தியுமான ஸ்ரீகிருஷ்ணர்கூட குருகுலவாசம் செய்து கைகட்டி, குரு சொன்னதைத் திருப்பிச் சொல்லுகின்ற சாதாரண மாணவனாக இருந்தார். இதற்கு அர்த்தம், இந்த ஒரு நிலையை, இந்த ஒரு ஸ்திதியை ஒருவர் கடந்து வர வேண்டும். எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று ஒரு ஆசிரியரிடம் கேட்க வேண்டும். அவரை குரு என்றும் அழைக்கலாம்.

இப்படி குரு என்பவரோடு பழக நேரிடின் உங்களுடைய பக்குவம் மேலும் உயரும். இன்னும் தெளிவாகும். "அட அட, என்ன இது' என்று திறமையான குரு கிடைத்தால் பல்வேறு ஜன்னல்கள் திறக்கப்படும். இந்த ஜன்னல் வழியே ஏரிக்கரை. அந்த ஜன்னல் வழியே மலை முகடு. இந்த ஜன்னல் வழியே புல்வெளி. அந்த ஜன்னல் வழியே கிராமத்துத் தெரு என்று விதம்விதமான காட்சிகள் உங்களுக்கு குருவால் காட்டப்படும்.

சரி. சுகமாகவே போய்க் கொண்டிருக்கிறதே.

வாழ்க்கையில் ஒரு மனிதருக்கு என்ன இடைஞ்சலெல்லாம் வரும். நோய் வரும். என்ன அது. கர்மா. பூர்வஜென்ம விஷயம். என்ன செய்வது. அனுபவித்தே கழிக்க வேண்டும். திடுமென்று ஏற்படுவது மரணம். அல்லது பொருள் நஷ்டம். உறவுகளோடு பெண் சண்டை ஏற்பட்டு அங்கு நடந்த பேச்சுவார்த்தைகள், கோர்ட் வழக்குகள் வேலையைக் கவிழ்க்கக்கூடும். முதுகில் கத்தியால் குத்தியதுபோல யாராவது நடந்துகொள்ளக்கூடும். இது அத்தனையும் எதிர்கொள்ள இந்தத் தெளிவு மிகவும் உதவும். நான் இயங்கவில்லை. நான் இயக்கப்படுகிறேன். நான் என்னால் நிற்கவில்லை. வேறு யாராலோ நிற்கிறேன்.

ஒரு நண்பர் மிக அற்புதமான கேள்வியைக் கேட்டார்.

ஒன்பது ஓட்டைகள் உள்ள ஒரு பாத்திரத்தில் அந்த உயிர் எப்படி தங்கியிருக்கிறது. ஏன் ஏதோ ஒரு ஓட்டை வழியாக அந்த உயிர் நழுவி விடவில்லை. எது காப்பாற்றுகிறது. எது உள்ளே அந்த உயிரைத் தக்க வைக்கிறது. உயிர் உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்கிற காரணம் என்ன. ஓட்டை வழியே வெளியேறாத செயல் என்ன. இது யார் செய்தது. எவரால் நடக்கிறது என்று கேள்வி கேட்டார்.

பதில் என்னவென்று நீங்களாகவே முயற்சி செய்யுங்கள். சகலமுமா சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பது. உங்களால் உங்கள் அறிவு என்ன சொல்கிறது என்பது விவாதிக்க முடியுமா. உங்களுக்குள்ளே கேள்வி கேட்டு பதில் தேடமுடியுமா. அப்படி தேடினால் நீங்கள் சிறப்பான ஒரு இடத்திற்கு வருவீர் கள். ஜெயித்தவர்கள் அத்தனை பேரும் உள்ளுக்குள்ளே ஆழ்ந்து விவாதித்தவர்களே. தன்னை யார் என்று அலசியவர்களே. தனக்கு என்ன தெரியும் என்று கேள்வி கேட்டுக் கொண்டவர்களே.

நிலையை பலப்படுத்த அல்லது மேலும் பக்குவப்படுத்த யார் உதவி செய்வார்கள். எந்தவிதமான நண்பர்களோடு பழகலாம். இதெல்லாம் நீங்களாகக் கற்றுக்கொள்வது நல்லது. தவறானவர்களிடம் போவதும், தடுக்கி விழுந்து எழுந்திருப்பதும் சிறப்புதான். அதில் ஒன்றும் குறை வந்துவிடாது. சத்தியமானவர்கள் எல்லா கேள்விகளுக்கும் மிகச்சிறப்பான பதிலை நிச்சயம் கொடுத்து விடுவார்கள். அல்லது உங்களையே ஒருமுகப்படுத்த வைத்து, உங்களுக்குள் ஆழ யோசிக்க வைத்து, உங்களுடைய வலிவை உங்களுக்குக் காட்டுவார்கள்.

ஜெயித்தல் என்பது லௌகீக வாழ்க்கையின் வெற்றி மட்டுமல்ல. சம்பாதிக்கும் பணம் மட்டுமல்ல. ஜெயித்தல் என்பது தன்னைப் பற்றிய கண்டுபிடிப்பும் முக்கியமானதாகும்.

செய்வன திருந்தச் செய் என்பது இந்த விவாதத்தில்தான் இருக்கிறது. நீங்கள் யார், உங்கள் வலிவு என்ன என்பது தெரிந்துவிடின் ஒரு செய்கையில் ஈடுபடுவது எளிது. அதில் தெளிவாவது மிக எளிது. எனவே, கூர்மையாய் தன்னை கவனித்தபடி இருக்கின்ற இந்த நிலைமைதான் மிக முக்கியமானது. ஆன்மிகம் உங்கள் லௌகீக வாழ்க்கையை வெற்றிபெறச் செய்வதற்கே உதவுகிறது. கடவுள் தொழல் என்பது அதில் ஆரம்பப் பாடம். பிறகு வளரவளர மலையப்ப ஸ்வாமி மலையைவிட்டுக் கீழிறங்கி உங்கள் மனதிற்குள் உட்கார்ந்து கொள்வார்.

கோவிலுக்குப் போகவேண்டியது என்ற விஷயமே போகும்.

""இன்னைக்கு கோவில்ல கும்பாபிஷேகம். பெரியவங்க வரணும்.'' உங்களைப் பார்த்து கைகூப்பும். அதை ஆதரிக்கலாம். தவறில்லை. அங்கிருந்துதானே நீங்கள் வெளியே வந்தீர்கள். அப்படித்தானே யாராவது வெளியே வர வேண்டும். மலையப்ப ஸ்வாமியோ, மண்ணால் செய்த பிள்ளையாரோ, அது அல்லவா ஒரு மனிதரை உயரே தூக்கும். இதைப் புரிந்துகொண்டு அதற்கு உதவிசெய்ய வேண்டும். ஆனால் அதற்கு உள்ளுக்குள் போய் அமர்ந்துவிடக்கூடாது.

இல்லையே. இது வியாபாரமாக இருக்கிறதே. எவனோ ஒருவன் அதில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் சுருட்டிக் கொள்கிறானாமே. அவன் பெயர், இவன் பெயர் என்றெல்லாம் வெளியே வரும். உங்களுக்கு அதில் அக்கறையே இல்லை. தேவையும் இல்லை. சுருட்டிக்கொண்டால் சுருட்டிக்கொண்டவன் பாடு. அவன்பட வேண்டிய அவஸ்தை. அவனுக்கு காத்திருக்கின்ற நரகம். அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். எல்லா திருடனுக்கும் தேள் கொட்டும். அலறுவான். அலறும்போது பிடிபடுவான். எனவே, திருடுபவன் பற்றி எந்தவித அவஸ்தையும் ஒரு தனி மனிதர் படவேண்டியதில்லை. அது அவரவர் கர்மா.

இப்போது மலையப்ப ஸ்வாமி எங்கே? படத்தில். பேசுவதுண்டா? தினசரி. எங்கே? உள்ளுக்குள்ளே. எப்போது? வேலை துவங்கும்போது. வேலை முடிக்கும்போது. முடித்து விட்டு வீட்டிற்கு வரும்போது. மனைவியின் முதுகு தடவும்போது. மனைவியால் மார்பு தடவப்படும்போது. குழந்தைகளைக் கொஞ்சும்போது. தூங்குகின்ற குழந்தைக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டு அதன் பிஞ்சுக் கால்களை முத்தமிடுகிறபோது. இப்படி பல்வேறு நல்ல நேரங்களில் மலையப்ப ஸ்வாமியின் முகம், அருள் ஞாபகம் வரத்தான் செய்யும். இது மனம் ஒருமித்தல். உள்ளுக்குள்ளே தன்னை கவனித்தல். தன்னை கவனித்தலும், மலையப்ப ஸ்வாமியின் நினைப்பும் ஒன்றே.

மலையப்ப ஸ்வாமியின் நினைப்பே தன்னை ஆழ்ந்து கவனித்தல் என்ற நிலைக்கு வரும். வளர வளர, முதுமை வரவர, இது முற்றி வேறுவிதமாய்ப் போகும். வெற்றி வரவர இன்னும் கன பரிமாணங்கள் கொள்ளும். தோல்வி வர அல்லது இழப்பு வர அதனுடைய உண்மைத் தன்மை இன்னும் பலமாகும்.

கடவுள் வழிபாடு, பிரதிமை வழிபாடு என்று ஆரம்பித்த இந்த சாதாரண விஷயம் உங்களையறிவதில் வெகு உக்கிரமாகக்கொண்டு போய்விட்டு, உங்களுடைய தள்ளாத வயதில், உங்களுடைய மூச்சு வாங்கும் பருவத்தில், உங்களுடைய கண் இடுங்கிப்போய் அடுத்தவர் பேசுவது தெளிவாகக் கேட்காத கிழக்காலத்தில் உங்களை மிக போஷாக்காக வைக்கும். மற்றவர் பேசுவது கேட்கவில்லை. அதனால் என்ன. கேட்க வேண்டிய அவசியமில்லை போலிருக்கிறது. அவர் யார் என்றே தெரியவில்லை. ஆனால் அவர் நன்கு தெரிந்தவர்போல் பேசுகிறார். தெரிந்தவராய் இருந்தால் என்ன, தெரியாதவராய் இருந்தால் என்ன என்று மனம் சாதாரணமாய் இருக்கும். வெறும் சிரிப்போடே இருக்கும்.

""அய்யா, உங்களைப் பார்க்கும்போதே
அழுகையா வருது. தேஜஸ்வியா இருக்கீங் கய்யா.''

""அப்படியா.'' வியப்புக் கொள்ளும். தன் முகத்தில் ஒளி பரவுகிறதாமே. ஒளிரூபமாக இருக்கிறோமாமே. போய் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளாது சரிசரி என்று அலுத்துக்கொள்ளும். எல்லாரும் மல, மூத்ரதாரி தானே என்று சமாதானம் கொள்ளும். கம்பு ஊன்றி கடற்கரையில் நிற்கும்.

""எவ்வளவு பெரிய ஆளு. என்ன சாதாரணமா வந்து நிற்கிறாரு பாரு.'' யாரோ பின்பக்கம் பேசிக்கொண்டு போவார்கள்.

உலகத்தை ஆழ்ந்து உற்றுப் பார்க்கின்ற நேரம் அது. தன்னைப்பற்றி அபிப்ராயங்கள் அத்தனையும் கீழே உதிர்த்துவிட்டு, தனக்கு அடுத்த லட்சியங்கள் என்ன என்பது பற்றி நெல்முனையளவும் கஷ்டப்படாமல், வளர்ந்து வந்தவரை மிகப்பெரிய விஷயம் என்பதைப் புரிந்துகொண்டு உலகத்தை வியப்போடு பார்த்தல். ஏதோ பறக்கிறது. ஏதோ மிதக்கிறது. ஏதோ குட்டிக்கரணம் அடிக்கிறது. ஏதோ மிதந்து போகிறது. மேகங்கள் மேலே ஊர்கின்றன. என்னது இது? நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே என்று ஒரு பிரமிப்பாய் உலகத்தைப் பார்க்கின்ற ஒரு இடம் வரும்.

இதற்கு அப்பால் இது என்னவென்று விசாரித்தால் கிடைப்பது சூன்யம்தான். அந்த சூன்யத்தில்தான் மனம் லயிக்கும். இதுதான் முடிவென்றும், இதுதான் சிறந்த விஷயமென்றும் பல மதங்கள் சொல்கின்றன. சூன்யவாதம் என்று அதற்குப் பெயர்.

இதற்குப்பிறகு என்ன? ஒன்றுமில்லை. எதுவுமில்லாத இடம். அங்கிருந்துதான் வந்தாய். ஏதோவாய் நடத்திக்கொண்டிருக்கிறாய்.

பிறகு எதுவுமில்லாத இடத்திற்குப் போகிறாய்.

இதை வேறு மதம் வளர்க்கும். வேறு ஏதோ வாய் வந்தாயல்லவா. அதுதான் இங்கு விசேஷம்.

மறுபடி எங்கே போகிறாய், எங்கிருந்து வந்தாய் என்பதல்ல. இங்கு என்னவாய் வாழ்கிறாய் என்பதுதான் விஷேசம்.

(தொடரும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :