Add1
logo
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி || டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு || தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்! || இன்றைய TOP -10 நிகழ்வுகள்! || கிம் ஜாங் உன் ஒரு பைத்தியக்காரர்! - ட்விட்டரில் சீரும் ட்ரம்ப் || ‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை! || ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை! || குஜராத்தில் பசுவுடன் செல்ஃபி - இது நவராத்திரி ஸ்பெசல்! || காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா சொல்லும் யோசனை! || தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி || தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன் || பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம் ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
 ................................................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
 ................................................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
 ................................................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
 ................................................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
 ................................................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
 ................................................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
 ................................................................
காலத்தின் கொடை : இன்குலாப்
 ................................................................
சொல்ல மறக்காத கதை - 7
 ................................................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
 ................................................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
 ................................................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
 ................................................................
01-01-2017திகாரம், பயம் கலந்த மரியாதையைப் பெற்றுத் தரும் என்பதை மரணம் வரை நிரூபித்திருக்கிறது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு. அவர், புதிர்களின் தொகுப்பாக வாழ்ந்தார். தன்னைப் புதிராக வைத்துக் கொள்வதுதான் வெற்றியை உறுதிப்படுத்தும் என்பதில்  தெளிவாக இருந்தார். தனது மரணமும்கூட ஒரு புதிராகிவிடும் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அரசியலில் பெண்கள் நிலைப்பது கடினம் என்கிற நிலையில் பல சோதனைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் நடுவே கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிலைத்தது மட்டுமின்றி, பதினான்கரை ஆண்டுகாலம் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் செல்வி.ஜெயலலிதா. பெண்ணாக இருந்து அவர் நிலைத்தது சாதனை என்றால், பிராமண சமூகத்துப் பெண்ணாக அவர் பிறந்தது அவரது பெரும்பலம்.

திரையுலகில் பெயர் பெற்று விளங்கி அதன்பிறகு அதிலிருந்து விலகியிருந்த ஜெயலலிதா, 1981ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்  தமிழ் மாநாட்டில், நாட்டிய நாடகம் மூலம் மறுபிரவேசமானார். 1982ல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்தார். குறுகிய காலத்தில் கொள்கைப்பரப்புச்  செய லாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், சத்துணவுத் திட்டம் சார்ந்த பொறுப்பு எனப் பல பதவி களை அவருக்கு எம்.ஜி.ஆர் வழங்கி னார். அரசியலில் இவையெல்லாம் அவரது வளர்ச்சிக்கு உதவிய அதே நேரத்தில், சொந்தக்கட்சிக்குள் பகையும் வளர்ந்தது.

தன்னை எதிர்ப்பவர்களை மட்டு மல்ல, தேவையென்றால் தனது வளர்ச்சிக்குத் துணையாக இருப்பவர் களையும் பகைத்துக் கொள்ளத் தயங்காத அரசியல் பாணியை ஜெயலலிதா கடைப்பிடித்தார். அது எம்.ஜி.ஆருக்கு எதிராக அன்றைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் தொடங்கி, அவருக் காக கட்சியின் மற்ற நிர்வாகிகளை எதிர்த்து நின்ற சேலம் கண்ணன், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் உள்பட பலரையும் விலக்கியபோது பலவற்றிலும் வெளிப் பட்டது.

அதிகாரத்தின் உயர்ந்த இடம் தனக்கு உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் இலக்காக இருந்தது. எம்.ஜி.ஆர் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவி ஜானகி முதல்வரானபோது அந்த ஆட்சியை சில நாட்களிலேயே கலைக்கச்  செய்ததும், 1989ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றபோதும் அதன் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஆட்சியைக் கலைக்கும் வியூகங்களை வகுத்து, இரண்டாண்டு களில் அதைக் கலைக்கச் செய்ததும் ஜெயலலிதாவின் அரசியல் வேகத்தைக் காட்டியது. 1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலையையொட்டி நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டமன்றத்தில் மிருகபல மெஜாரிட்டியுடன் முதல்வரானார் ஜெயலலிதா. நிரந்தர முதல்வர் எனக் கட்சி நிர்வாகிகள் செய்த விளம்பரத்தை அவர் முழுமையாக நம்பிய காலம் அது.

தமிழகத்தில் மிகக்குறைந்த வயதில் (43) முதல்வரானவர் ஜெயலலிதா என்பது மட்டுமல்ல, திராவிட அரசியல் கட்சித் தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரும், அதுவரை கலைஞரும்கூட முழுமையான 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யாத நிலையில், முதன்முறையாக 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்த திராவிட அரசியல் கட்சியின் முதல்வர் ஜெயலலிததாதான்.

பெண்களிடம் அவரது செல்வாக்கு அதிகரித்தது. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பேசுகிறார் என்பதால் படித்தவர்களையும் அவர் கவர்ந்தார். தி.மு.க. மீதான எதிர்ப்பைக் கடுமையாக்கினார். குடும்ப அரசியலைக் குறி வைத்தார். எல்லா வற்றுக்கும் விலை நிர்ணயித்தார். ஊடகங்களை மிரட்சியிலேயே வைத்திருந்தார். தன்னைப் பார்த்து பயப்படுகிறவர்களுக் கெல்லாம் தைரியலட்சுமி   யாகத் தெரிந்தார். டெல்லி வரையிலும் அனைத்து அதிகார மட்டத்திலும் தனக்கான செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான கட்டமைப்பை உரு வாக்கினார்.

வெற்றிப்பாதையிலேயே பயணித்தால் தவறுகள் கூட சரியாகத் தோன்றும் என்பதுதான் ஜெயலலிதாவின் சூத்திரமாக அமைந்தது.

1996ஆம் ஆண்டு தேர்தலில் அவரது  கட்சி மட்டுமல்ல, அவரே தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து ஊழல் வழக்குகள், சிறை எனப் பல நெருக்கடிகள், தனது தோழி சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் எனக் கூறி ஒதுக்கிவைத்தார். அது சில மாத காலத்திற்குத்தான். இரண்டாண்டுகள் கழித்து 1998ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வியூகத்துடன் அ.தி.மு.க.வை வெற்றிபெறச்செய்து, மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசை ஆட்டிவைத்தார். தன் மீதான வழக்குகளும், தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிற தனது நோக்கமும் நிறைவேறாத காரணத்தால் 13 மாதத்தில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தார். டெல்லி அரசியலில் இது ஜெயலலிதாவின் நம்பகத்தன்மையைக் குறைத்தாலும், நினைத்ததை சாதிக்கக்கூடிய இரும்புப் பெண்மணி என ஊடகங்கள் புகழும் நிலை ஏற்பட்டது.

தனது சுயநல அரசியலை உரிமைக்கான போராட்டமாக  மாற்றிக் காட்டுவதிலும் ஜெய லலிதா வெற்றி பெற்றார். காவிரி பிரச்சினைக்காக பிரதமர் வி.பி..சிங் ஆட்சியின்போது நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதற்கான முயற்சிகளில் மாநிலத்தில் ஆட்சி செய்த தி.மு.க அரசு ஏற்பட்டபோது ஒத்துழைக்க மறுத்து, காவிரி பிரச்சினையில் தி.மு.க.வின் மீது குற்றம்சாட்டியவர் ஜெயலலிதா. பின்னர், தனது ஆட்சிக்காலத்தில் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். வாஜ்பாய் உருவாக்கிய காவிரி நடுவர் மன்ற ஆணையத்தை பல் இல்லாத ஆணையம் என்றார். 2007-ல் தி.மு.க ஆட்சியின்போது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானபோது, இதனால் தமிழகத்திற்கு பயனில்லை என்றார். ஆனால் தனது கையில் ஆட்சி வந்ததும் அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வலியுறுத்தினார். நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தனது தனிப்பட்ட வெற்றியாக முன்னி றுத்தி பட்டம் சூட்டும் விழா நடத்தினார். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்திலும் ஒவ்வொரு  ஆட்சியிலும் எல்லாக் கட்சிகளும் அமைப்புகளும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நீதிமன்றம் மூலம் வெற்றிகிடைத்த  நிலையில் அதையும்  தனது தனிப்பட்ட வெற்றியாக  முன்னிறுத்திக் கொண்டார் ஜெயலலிதா.

ஈழப்பிரச்சினையைப் பொறுத்தவரை, ராஜீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப்புலிகள் தலைவர்  பிரபாகரனை கைது  செய்து தண்டனை யை நிறைவேற்ற வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஈழம் பற்றி பேசியவர்களை  தடா, பொடா சட்டங்களின் கீழ் கைது செய்தார். ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்ட னையாகக் குறைக்கப் பட்டபோது அதற் காக தி.மு.க அர சைக் கடுமையாக விமர்சித்தார் ஜெயலலிதா. 2009ல் ஈழத்தில் இறுதிப் போர் நடந்தபோதும், போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றார்.

ஈழமண்ணில் போர் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதை சாமியார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து விளக்கியபிறகுதான் அவரது நிலைப்பாடு முற்றிலும் மாறியது. இனி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு வெற்றி இல்லை எனத் தெரிந்ததும், தனி ஈழம் பெற்றுத்தருவேன் எனத்  தேர்தல் அரசியல் மேடைகளில் பேசினார். ஆட்சிக்கு வந்ததும் போர்க்குற்றம் குறித்த விசாரணை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றினார். தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொலை வழக்கில் சிறைப்பட்ட 3 பேரின் மரண தண்டனையைக் குறைக்கத் தனக்கு அதிகாரமில்லை என்று சட்டமன்றத்தில் பேசியவர், அடுத்தநாளே தண்டனையைக் குறைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார். நீதிமன்றத்தால் அவர்களின் தண்டனை குறைக்கப்பட்ட போது சிறைப்பட்டுள்ள 7 பேரையும் விடுவிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, அதில் மத்திய அரசின் முடிவு குறித்த சர்ச்சையையும் விதைத்ததால், அவரது மரணம் வரை யாரும் விடுதலையாகாத சூழலும் உருவானது. ஆனால், இதையெல்லாம் கடந்து, தமிழீழ ஆர்வலர்கள் தன்னை ஈழத்தாயாக கொண்டாடுவதைக் கண்டு மகிழ்ந்தார். சூழல்களை சாதகமாக்கி தேர்தல் களத்தில் வெற்றியை ஈட்டுவதில் வல்லவரானார்.

மக்களின் மறதியே அரசியல்வாதிகளின் வெற்றி என்பதில் ஜெயலலிதாவுக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. முதல் முறையாக முதல்வராகி சென்னை செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும்போது, இலங்கைக்கு இந்திய அரசால் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பேன் என்றார். 4 முறை வெற்றிபெற்று முதல்வரானபோதும் அவர் அந்த முயற்சியில் ஓர் அங்குலம்கூட முன்னேறவில்லை.

தன்னுடைய முந்தைய நிலைப்பாடுகளுக்கு நேர்எதிரான செயல்பாடுகளை அவர் துணிந்து செய்வார். முதல்முறையாக பதவியேற்று அவர் போட்ட முதல் கையெழுத்து, மலிவு விலை மதுவை ஒழிப்பது என்பதுதான். பின்னர் அவரேதான் பார் வசதியுடன் மதுக்கடைகள், அரசே சாராய விற்பனை செய்யும் டாஸ்மாக்  கடைகள் ஆகியவற்றையும் திறந்தார். டான்சி வழக்கின் கையெழுத்து தொடங்கி, காஞ்சி சங்கராச்சாரியார் கைது வரை தனது முந்தைய நிலைப்பாட்டுக்கு மாறாக அவர் செயல்பட்டதற்கு நிறைய உதாரணங்களைக் காட்டமுடியும். சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றதும் அவரது ஆட்சிதான், ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியதும் அவரது ஆட்சிதான்.

அதிகாரம் முழுவதையும் தன் வசம் வைத்துக்கொண்டு ஜனநாயக ஆட்சியில் சர்வாதிகாரத்தனமாக அவர் கடைப்பிடித்த போக்குகளுக்கு பெரியளவில் எதிர்ப்புகள் இல்லை. மாறாக, அவற்றைப் பாராட்டும் மக்களின் உளவியலை அவர் அறிந்திருந்தார். எதிக்கட்சிகள் ஒன்றுபட்டுவிடாதபடி கவனமாகப் பார்த்துக்கொண்டார். எதிரிகள் தரப்பிலிருந்தே தனக்கான ஆதரவுக் குரல்களை வெளிப்படச் செய்யும் திறமையும் ஜெயலலிதாவுக்கு இருந்தது. அவர் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்ற பிரச்சாரமும் அதனால் உருவான நம்பிக்கைளும் அனைத்து மட்டங்களிலும் வேரூன்றின.

தொட்டில் .குழந்தை திட்டம், மழைநீர் சேகரிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தச் செய்தது, லாட்டரி சீட்டு ஒழிப்பு, அம்மா உணவகம், இலவச சைக்கிள், மடிக்கணினி, 20 கிலோ அரிசி ஆகியவை அவரது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான திட்டங்கள். அதே நேரத்தில் தொலைநோக்கான திட்டங்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட  தேடல்களில் ஊடகங்கள் இறங்காமல் பார்த்துக்கொண்டது அவரது ஆட்சியின் சாமர்த்தியம். அரசு கேபிள் மூலம் தொலைக்காட்சி ஊடகங்களை ஊமையாக்கியது அவரது விந்தையான சாதனைகளில் ஒன்று. இத்தகைய அடக்குமுறைகளை மீறி, உண்மைகளை நோக்கிய பயணத்தை நடத்தும் ஊடகங்கள் பழிவாங்கப்பட்டன. அதன் உச்சபட்சம்தான், நக்கீரன் ஆசிரியர் மீதான பொடா வழக்கு.

வழிமுறைகள் எப்படி இருந்தாலும் வெற்றிதான் முக்கியம். அதுவே அதி காரத்தைத் தக்க வைக்கும் என்பதை தனது முதல்வர் பதவியை இரண்டு முறை நீதிமன்றத் தீர்ப்பினால் பறிகொடுத்த ஜெயலலிதா அறிந்தே இருந்தார். இந்தியாவிலேயே ஆட்சியில் இருந்தபோது சிறைத்தண்டனை பெற்ற முதல்வரும் அவர்தான். ஆனால், அந்த சிறைத் தண்டனை நாட்களைக்கூட மாநிலம் முழுவதுமான வன்முறைகள், நிர்வாக  முடக்கம் போன்றவற்றால் எதிர்கொண்டது அவரது அரசு. அடாவடிகளைத் துணிச்சல் என மொழிபெயர்க்கச் செய்யும் கலையை யும்  ஜெயலலிதா அறிந்திருந்தார்.

இந்திய ஜனநாயகத்தின் குறைபாடுகளை யும், சட்டங்களில் உள்ள சந்து பொந்து களையும், ஏவலுக்குக் காத்திருக்கும் அரசு நிர்வாகத்தையும், கட்சி நிர்வாகிகளின் அடிமைத்தனத்தையும், தன்னைப்போலவே பதவியை மட்டுமே குறிக்கோளாகக்  கொண்டுள்ள எதிர்க்கட்சிகளின் பலவீனங் களையும் சாதகமாக்கிக்கொண்டு, நினைத்தபடி ஆளலாம்- மக்களிடம் நம்பிக்கையைத்  தக்க வைக்கலாம் என நிரூபித்துக்காட்டிய ஜனநாயக மகாராணி, ஜெயலலிதா.  ஏறத்தாழ 25 ஆண்டுகளாக தமிழகத்தில் அவர் உருவாக்கிய அரசியல் சூழலில் இருந்து மீள்வது அவ்வளவு எளிதல்ல. அதனால்தான், அம்மாவைத் தொடர்ந்து  சின்னம்மாக்கள் தேவைப்படு கிறார்கள். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : Vaitheeswari . S Date & Time : 2/2/2017 9:42:36 AM
-----------------------------------------------------------------------------------------------------
ஹலோ சார் நான் 1993 ல தான் பொறந்தான் அதனால் அந்த நேரத்துல வந்த நக்கீரன் ன என்னால படிக்க முடியல நெறய நேரம் தேட முயற்சி பண்ணிருக்கன் ஆனால் சரியான செய்தி கிடைக்கல அதுக்காக அந்த நாள் ல நெறய முக்கிய நிகழ்சிகள் நடந்துருக்கு அதெல்லாம் ஒரு கட்டுரையா வெளியிடனும் என்று மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
-----------------------------------------------------------------------------------------------------