Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
 ................................................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
 ................................................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
 ................................................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
 ................................................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
 ................................................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
 ................................................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
 ................................................................
காலத்தின் கொடை : இன்குலாப்
 ................................................................
சொல்ல மறக்காத கதை - 7
 ................................................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
 ................................................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
 ................................................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
 ................................................................
01-01-2017இரா.காமராசு

க்கள் கவிஞர் இன்குலாப் விடுதலையின் குறியீடாக வாழ்ந்தவர். கீழக்கரையின் ஓர் ஒடுக்கப்பட்ட இஸ்லாமியக் குடியில் பிறந்த சாகுல் அமீது  ஒட்டுமொத்த மானுட விருப்பங்களை நிறைவேற்றிட கவிதையைக் கருவியாக்கிக் களம் கண்டு இன்குலாப்’’ஆனவர். புரட்சிகர அமைப்புகளின் முழக்கங்களில் “"இன்குலாப் ஜிந்தாபாத்'’ என்றால் அநீதிக்கு எதிரான ஆவேச உணர்வு பற்றும். தமிழ்ச் சூழலில் போராட்டக் களத்துக்கு வெளியே “ஜிந்தாபாத்’’இல்லாமாலேயே இளைஞர்களுக்கு அந்தப் பேருணர்ச்சியை வழங்கிய சொல் இன்குலாப்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் பயிலும்போதே இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக இந்தி எதிர்ப்புப் போரில் குதித்தவர் இன்குலாப். கா.காளிமுத்து, நா.காமராசன், பா.ஜெயப்பிரகாசம் ஆகியோரோடு இயக்கத்தில் இணைந்தவர்.

    வெங்கொடுமை அரசுக்கு வெறிபிடித்த காலம்
    வீதிகளில் தமிழ் இளைஞர் பிணங்குவித்த காலம்
    செங்குருதி தமிழ்மணந்து தீப்பிடித்த காலம்
    திசை எட்டும் தமிழ்முழக்கம் கேட்டிருந்த காலம்

எனப் பின்னாளில் அதனை இன்குலாப் நினைவுகூர்வார். இந்தி அரக்கியைத் தள்ளி ஆங்கில அசுரனை அரியணை ஏற்றிய ஏமாற்றமும், வறிய மக்களின் மீதுள்ள தீராப் பற்றும் அவரை இடதுபக்கம் திருப்பின.

வசந்தத்தின் இடிமுழக்கமென வந்துதித்த இயக்கத்தில் பாட்டாயுதம் ஏந்திப் பயணப்பட்டார். மனிதமும், விடுதலையும்தான் மார்க்சியம் என்ற புரிதலுக்கு வெகுவிரைவில் வந்து சேர்ந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் ஓலம் கேட்குமிடமெல்லாம் ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக அணிவகுத்தார். வியட்நாம், கியூபா, பாலஸ்தீனம், ஈழம் என எல்லா உரிமைச் சமர்களுக்கும் போர்ப்பரணி பாடினார். வெண்மணி, போபால், குளப்பாடி, ஊஞ்சனை, திண்ணியம், கொட்டாங்கச்சி ஏந்தல்..... என எல்லாச் சமூகக் கொடுமைகளுக்கும் எதிராக தன் தூவலை உயர்த்தினார். மனித உரிமை அமைப்புகளில் பங்கேற்றார். மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தில் முன்நின்றார். சிறியதோ, பெரியதோ தன் காலத்தில் நடந்த நியாயம், நீதி கோரிய போராட்டங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இதற்காக அவர் இழந்தவை ஏராளம். காவல் துறையின் விசாரணை, மிரட்டல்கள் அவரை இறுதிவரைத் துரத்திக்கொண்டே இருந்தன. தன் கருத்தில் ஒரு விதப் பிடிவாதத்துடன் அனைத்தையும் எதிர்கொண்டார். இயல்பிலேயே கனிவு மிகுந்த உள்ளம் கொண்ட அவர், அடக்குமுறை என வந்தால் அதை உக்கிரமாக எதிர்க்கும் ஆற்றல் பெற்றவராகவும் இருந்தது வியப்பு. அவரின் கவிதைகள் களத்திலிருந்து பிறந்தவை. அவையே ஓர் போர்க்களமாக ஆயின.

        “எழுதியதெல்லாம்
        மொழிபெயர்ப்புத்தான்
        இளைஞர் விழிகளில்
        எரியும் சுடர்களையும்
        போராடுவோரின் சுழிப்புகளையும்
        இதுவரை கவிதையென்று
        மொழிபெயர்த்திருக்கிறேன்!’’

என்பார் அவர். நடப்புச் சாதி சமூகத்தை நிராகரித்தார். மதத்தை மறுதலித்தார். ஜனநாயகம் என்கிற பெயரில் நிகழ்ந்த அராஜகங்களைத் தோலுரித்தார். எனவே எதிர்ப்புக் குரலாய் ஆன அவரை எல்லோரும் நிராகரித்ததில் வியப்பில்லை. தன் கவிதைகளின் தகுதிப்பாடு பற்றி அறிந்தே இருந்தார்.

“எதிர்ப்புக்குரலின் வெளிப்பாடு அழகியலுக்கு எதிரானதாக எனக்கு எப்பொழுதும் தோன்றவில்லை. அழகிழந்து போய்விட்ட உலகில், எதிர்ப்புக்குரல் என்பதே அழகைத்தான் தனது உட்கிடைக்கையாக முன் வைக்கிறது’’ எனத் தெளிவாகச் சொல்லுவார். அவரின் கவிதைகளின் உயிர் கருத்தியலாக இருந்தது.

        தடி எடுத்தான் தண்டல்காரன்
        பின்னர் அதைச்
        செங்கோல் என்றான்

என்பதில் உள்ள இந்த அமைப்புமீதான விமரிச னத்தை வேறு யார் எப்படிச் சொல்லிவிட முடியும்?

        செருப்பணிந்து கொண்டு
        தெருவில் வராதே என்பவனின்
        தோலை உரித்துச்
        செருப்பாக்கிக் கொண்டு
        திமிர் நடை போடுவோம்

என்பதில் உள்ள உக்கிரம் உணர்ந்தால் அன்றி விளங்காது. அவரின் புகழ்பெற்ற "மனுசங்கடா நாங்கள் மனுசங்கடா'’பாடலை மக்கள் கலைஞர் கே.ஏ.குண சேகரன் முழங்கும்போது மேடையே ஓர் போர்க்களமாய் மாறிவிடும். நடப்புச் சமூகத்தை, மனிதர்களை, நிலவுடைமையின் வேர்களை ஆழ அறிந்தவர் இன்குலாப்.

எல்லோரும் வியக்கும் "நாங்க எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க'’என்பதைக் காட்டிலும் எதிரியை வன்மப்படுத்தும், வீழ்த்தும் ஒரு வரி உண்டு. அது

"நாங்க ஊடுபுகுந்தா உங்கமானம் கிழிஞ்சுபோகாதா'’’

இன்றைக்கும் “வீடுபுகுதல்’’ என்பதுதான் பல மோதல்களின் ஆணிவேராக இருக்கிறது. எங்கே கைவைத்தால் ஆதிக்கத்தை அசைக்க முடியும் என்பதை மிகச் சரியாக இப்பாடலில் செய்துவிடுகிறார்.

“ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம், “ஸ்ரீராஜ ராஜேச்சுவரியம்’’ ஆகிய இரண்டு கவிதைகளும் சோழர் காலம் பொற்காலம் என்ற மாயைத் தகர்த்த நா.வானமாமலை, மே.து.ராசுக்குமார் ஆய்வுகளிலிருந்து எழுந்தவை. இக்கவிதைகள் அதுவரை சோழர் புகழ்பாடி, அதன் தொடர்ச்சியை தங்களில் காட்டி, கட்டி ஆண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதில் வியப்பில்லை. ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் சட்டமன்றத்தில் சேர்ந்து நின்று பாடநீக்கம் செய்த கதை இன்குலாப்பின் மேற்படி கவிதைகளுக்கு நிகழ்ந்தது. எழுத்துரிமைக் காவலர்கள்கூட வாய்மூடி மௌனம் காத்த வரலாறு இதற்குண்டு.

சொல்வோம்
ஆயிரம் ஆண்டுகளாக
அழுகை
மொழி மாற்றிக்
கொண்டதில்லை
ஆத்திரமும் கூடத்தான்.
        கண்ணீர்
நிறம் மாற்றிக்
கொண்டதில்லை        ரத்தமும் கூடத்தான்.

எனக் அக்கவிதை முடியும். யுத்தம் தொடரும் என்பதை இதைவிட எப்படிச் சொல்வது?

தமிழ்ச் சமூகத்தில் கழிந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்த எல்லாவித ஒடுக்குமுறைகளையும் தன் கவிதைகளில் இன்குலாப் பதிவு செய்துள்ளார். அவரே சொல்கிறார். “ஒரு கவிதை அதற்குரிய கலை நியாயங்களுடன் இயங்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. என் படைப்புகள் பல அரசியல் நிகழ்வுகளின் உடனடி கவிதைப் பதிவுகளாக இருந்தன. எனது அரசியல் பங்கேற்பின் முக்கியமான மையமாக எனது கவிதை இருந்துவந்துள்ளது.’’

இப்படி அரசியல் நடவடிக்கையாக அவர் கவிதைகள் அமைந்தாலும் அவரிடம் அழகியல் உணர்வு இயல்பாக அமைவதை பல படைப்புகளில் காண முடியும்.

    பவுர்ணமி இரவின் படகுக்காரரே
    நதிநுரை அலைக்கும் நாணற்புதர்களை
    விலக்கிச் செல்கையில் மெதுவாகச் செல்லுங்கள்
    வழியில்
    தண்ணீர் வாத்துக்கள் அடைகாத்த
    முட்டைகள் கிடைக்கலாம்
    கால்கள் மோதிவிடாதிருக்கட்டும்’’

சங்கக் கவிதைகளுக்கு இணையாக அக உணர்வை வெளிப்படுத்தும் அழகுக் கவிதை இது. இப்படிப் பல கவிதைகள் அவரிடமுண்டு.

கவிதைகள் மாதிரியே அவரின் கட்டுரைகளும் "ஆனா', "எதிர்சொல்' ஆகிய தொகுப்புகள் எதிர் அரசியலை, கலக அரசியலை முன்வைக்கின்றன.

இன்குலாப் சிறுகதைகளும் எழுதினார்.  "பாலையில் ஒரு சுனை'’’ அற்புதமான தொகுப்பு. இதில் உள்ள சிறுகதைகள் மனித உறவுகளை, உணர்வுகளை நுட்பமாகச் சொல்பவை, “தோழமை’’ போன்ற கதைகள் அழகியல் தன்மையில் மேலோங்கியவை.

இன்குலாப்பின் தனித்தன்மை மிக்கப் பங்களிப்புகள் அவருடைய நாடகங்கள். மரபிலக்கியங்களை மறுவாசிப்பு செய்து அவர் உருவாக்கிய நாடகங்கள் மேடையிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. நாடகக்காரர்களை விடவும் நாடக உருவாக்கத்தில் கவிஞர் இன்குலாப்பை பாராட்டுவோர் உண்டு. இவரின் ஔவை, குறிஞ்சிப்பாட்டு, குரல்கள், மணிமேகலை போன்றவை நவீன நாடக வரலாற்றில்  முக்கியத்துவம் வாய்ந்தவை.

இஸ்லாம் சமயத்தில் பிறந்த அவர் அதன் பழைமைத் தன்மைகளிலிருந்து விலகிநின்றார். விமர்சிக்கவும் செய்தார். கீழக்கரையின் மகிமையான “பேய்விரட்டுதல்’’ போன்றவற்றைக் கண்டித்தார். இஸ்லாத்துள்ளும் மேல், கீழ் இருப்பதை, வர்க்கபேதத்தைச் சுட்டியதால் சொந்த மதத்தவரல் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார். அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அதே வேளை மத நம்பிக்கையாளர்களை ஒருபோதும் அவமதிப்பு செய்ததுமில்லை.

ஒருமுறை நெருங்கிய நண்பர்கள் அவரிடம் கேட்டார்கள். "நீங்கள் கடைசியாகப் பள்ளிவாசல் போனது எப்போது?'’என்று.

"என் தாயாரின் மறைவின்போது அவர் நம்பிக்கையை புறந்தள்ளக் கூடாது என்பதற்காக!'’’ என்றார்.

"எப்படியிருந்தாலும் ஒருநாள் நீங்கள் பள்ளிவாசலுக்கு வருவீர்கள்'’என்றார்கள் நண்பர்கள்.

இன்குலாப் மௌனமாகச் சிரித்துக் கொண்டார். அந்த மௌனமும், சிரிப்பும் அவரது உடல் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஈகையாக வழங்கப்பட்டபோது ஒரு கொள்கை வீரனின் வாழ்க்கை வரலாறாக மாறியதை உணர முடிந்தது. கல்லறை வரிகளை கவிதைகளாக இன்குலாப் எழுதினார். தன் கல்லறைக்கு என கவிதையில் சொன்னது:

        மரணம் தழுவிய மக்கள் எல்லார்க்கும்
        கல்லறை எழுப்பும் கவுரவம் வரும்வரை
        சாம்பலும் தூசும் என் கல்லறைகள்
        உங்கள் நினைவுகள் என் கல்லறை வரிகள்!

இந்த இடத்தில்கூட சக மனிதனை எண்ணியவர். அதனால்தான் அவர் கல்லறைக்குச் செல்லாமல் மருத்துவர்களின் கருவறையாகிப் போனார்!

வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் இடைவெளியற்ற மனிதர் இன்குலாப். அன்பு, பிரியம், பாசம், நட்பு, தோழமை..... எத்தனை வார்த்தைகள் சொன்னாலும் பொருந்தும் நெஞ்சுகொள்ளா மனிதநேயம் அவருடையது. பிறருடன் ஒப்பிடமுடியா தோழமை அவருடையது. அவருக்கு அதிகாரப் பீடங்களைத் தவிர்த்த தனிமனிதப் பகை யாரோடும் கிடையாது. “பகைவர்க்கும் அருள்வாய்’’ என்பதான நன்னெஞ்சம் வாய்க்கப்பட்டவராக அவர் இருந்தார். பிறப்பில் இஸ்லாமியராகவும், வாழ்வால் தூய கம்யூனிஸ்டாகவும் இருந்தது அவரின் பலமும் பலவீனமுகமாகப் பார்க்கப்பட்டது. கல்விச்சாலையில் அவரின் படைப்புகள் உரிய அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. எந்த விருதும், பரிசும் அவரைத் தேடிவரவில்லை. அப்படி வந்தாலும் ஏற்கும் நிலையில் அவர் இல்லை. கம்பீரத்தோடு வாழ்ந்தார். அவரின் இலக்கிய வாரிசுகள் இடதுசாரி முகாமில் ஏராளம். குடும்ப வாரிசுகளும் அவரின் கொள்கைக்கு மாறு நினைத்ததில்லை. மகன் இன்குலாப் அவரின் இன்னொருமுகம். மகன் செல்வம் சாதி, மத, மறுப்புத் திருமணம் செய்தவர். மகள் டாக்டர் ஆமீனாபர்வின் தமிழ்நாட்டின் நெரூடாவை, மாயாகோவ்ஸ்கியை, ரசூலை (எங்கள் இன்குலாப்பை) காத்தவர். கொள்கையாளர்களுக்கு இப்படியெல்லாம் குடும்பம் வாய்ப்பது அபூர்வம்.

இன்குலாப் மறையவில்லை. “ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன்’’ என்றவர், செம்பறவையாக என்றென்றும் “மனிதம் என்றொரு பாடலை இசைக்க’’ உயிரே உயரே பறந்து கொண்டிருப்பார்!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :