Add1
logo
மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி || ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்) || இந்தியருக்காக குண்டடி பட்டவரை கவுரவித்த டைம்ஸ் இதழ்! || ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர் || செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர் || மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் தாக்கு || இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை || எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின் || ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்) || தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! || ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில் || எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும், உருண்டு - பிறண்டாலும் அதிமுகவால் டெபாசிட் வாங்க முடியாது: ஸ்டாலின் ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
 ................................................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
 ................................................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
 ................................................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
 ................................................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
 ................................................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
 ................................................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
 ................................................................
காலத்தின் கொடை : இன்குலாப்
 ................................................................
சொல்ல மறக்காத கதை - 7
 ................................................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
 ................................................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
 ................................................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
 ................................................................
01-01-2017


சென்னிமலை தண்டபாணி


ன்றைய கவிதை போராட்டக்கவிதையாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு போர்வீரனாக இருக்கவேண்டும்’’என்றார் மக்கள் கவிஞர் மயாகோவ்ஸ்கி. அப்படிப்பட்ட போராட்டக் கவிதைகளைக் கனலும் நெருப்புத் துண்டான சொற்களோடு தன் வாழ்நாளெல்லாம் வாரிக் கொடுத்தவர் கவிஞர் இன்குலாப். இராமநாதபுரம் கீழக்கரையில் எளிய இசுலாமியக் குடும்பத்தில் பிறந்த சாகுல்அமீது இன்குலாப்’என்று வலம்வந்தார். கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர் என்று பன்முகத்திறன் பெற்றவராய் விளங்கியவர். என்றாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கலகக்குரலாகக் காலமெல்லாம் ஒலித்துக் கொண்டேயிருந்தவர். 1.12.2016 அன்று இறப்பின் மடியில் துயில்கொண்ட பொழுதுவரை அவர் ஒரு போராட்டக்   காரராகவே வாழ்ந்திருந்தார்.

கன்னக்கோல் திருடர்கள்
செங்கோல் ஏந்தியதால்
உருவான சட்டங்கள்
ஓட்டைகளாயின’’
என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லிக்  கொண்டேயிருந்தவர்.
பாரதக் கொடிநிழலில்
பணம்படைத்தோர் பஞ்சணைகள்
ஏழைக்குழந்தைகள்
இளைப்பாற நிழல்உண்டா?’’

என்று தவித்த கவிஞரின் முதல் கவிதை தர்காவில் பேய் ஓட்டுகிறேன் என்ற பேரில் பெண்களைக் குச்சியால் அடித்துக் கொடுமைப்படுத்தும் சிறுமைக்கு எதிராகச் சினந்து கனன்றது. அப்போது அவர் வயது பன்னிரண்டுதான்.

தொடங்கும் நாளின்
ஒவ்வொரு நொடியிலும்
வாழ்க்கையை நிரப்பு’’

என்ற கவிஞர் தன் கண்முன் கண்ட சாதி, மத, இன, வர்க்கக் கொடுமைகளுக்கும், சமுதாயத்தில் புரையோடிக்கிடந்த அனைத்து மூடத்தனங்களுக்கும் எதிராகவும் போர்க்குரல் எழுப்பிக்கொண்டேயிருந்தார்.

“ஆடை போர்த்திய காரணத்தால் மட்டும் மனிதர்கள் என்ற மரியாதை கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டி

தேர்ந்த தூரிகை
கட்டளை இடமுடியுமோ
எந்த ஒரு செடிக்கும்
எப்படிப் பூப்பது என்று’’
என்ற கம்பீரத்தோடு
எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்’’
என்றபடி
சமயம் கடந்த மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதன் என்றொரு பாடலை இசைப்பேன்’’
என்று இசைத்துக்கொண்டேயிருந்தார்.

இன்குலாபின் ஒவ்வொரு கவிதைக்குப் பின்னும் ஒரு வரலாறு உண்டு. நெகிழ்ந்த நிகழ்வு உண்டு. கண்டு கொதித்த கொடுமை உண்டு. வெறும் கற்பனைகளால் அவர் தன் கவிதையை நிரப்பிவைக்கவில்லை. மக்கள் படும் அவலங்களைக் கொடுமைகளைக் களைந்தெறியக் குமுறிய குமுறல்கள் கொதித்துக் கொண்டிருந்தன அவற்றுள்.

“தொட்டில் தொடங்கிச்
சுடுகாடு வரைக்கும்
சடங்குகளாலே
வாழ்க்கை கனத்தது.’’
என்பதைக் கண்ட கவிஞர்
ஆதிக்கச் சாதிகளால்-சில
ஆயிரம் ஆண்டுகளாய்ப்
பாதிக்கப் பட்டவர்மேல்-நீங்கள்
பரிவு கொண்டதுண்டா?’’
என்று வினாவெழுப்பியதோடு
பெரிய மாளிகையில்-வளர்ந்த
பெண்டு பிள்ளைகளோ-எங்கள்
குருதித் துளிகளினால்-வாசற்
கோலம் போடுகிறார்.’’
என்பதை உரத்து முழங்கிக்கொண்டிருந்தார். அதோடு நிறுத்தாமல்
“வேர்வையை விதைக்கிறேன்.
அறுவடை விழாநாளில்
கண்ணீர்த் துளிகளைக்
கணக்குப் பார்க்கிறேன்’’
என்று உண்மையைச் சொல்லியபடியே
பிரபஞ்சம் நடத்திய அழகுப் போட்டியில்
பூமியின் உடலை வயல்களால் வார்த்துக்
கோள்களை எல்லாம் வெற்றி கொள்ள
வைத்தவை எந்த வர்க்கத்தின் கைகள்?’’
என்று கேட்டார். அந்தக் கோபம்
“மாட மாளிகைகளை மண்ணில் எழுப்பியோர்
திருவோட்டுப் பண்டாரங்களாய்த்
தெருக்களில் துயில்வதா?’’
என்றபடியே
தொழிற்சாலைப் பாத்தியில் வேர்வை நீர்ஊற்றி
இயந்திர ரோஜாக்களை மலர வைத்தோம்.
இருந்தும்
வறுமை முட்கள் கீறிய வடுக்களே
பாடுபட்டதற்குக் கிடைத்த பரிசுப் பதக்கங்கள்’’

என்று கவிதையாக வெடித்தது.

போராடும் போதுதான் மனிதன் பிறக்கிறான்’’என்ற கவிஞரின் கவிதைகள் போராட்டக் கவிதையாக மட்டுமில்லாமல் அவ்வக்காலத்தின் அரசியல், சமுதாயச் சூழலைப் படம்பிடித்துக் காட்டியவையாக விளங்கின. மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பில் தடியடிபட்டுச் சிறைசென்ற கவிஞர் இளமையில் கழகத்தின் மீது பற்றுக் கொண்டவர். 1968ல் கீழ் வெண்மணியில் நாற்பத்தி மூன்று தாழ்த்தப்பட்ட மக்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட போது மார்க்சியப் பறவையாய் மாறிப் பறந்தார். கால ஓட்டத்தில் மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்தில் ஈடுபட்டும் தமிழ் தேசிய விடுதலையில் ஈடுபாடு கொண்டும் இயங்கினார். கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என்று நாடகங்களை எழுதிய அவர் விரல்கள் பின்னாளில் அவ்வை, மணிமேகலை நாடகங்களை எழுதின. மரியாதைக்குரிய எஸ்.வி.ராஜதுரையோடு இணைந்து மொழிபெயர்ப்புப்பணியிலும் ஈடுபட்டார். அவர் எழுதிய ஆரம்ப நாள் கவிதைகள் இளவேனில் நடத்திய கார்க்கியில் அரங்கேறின. சௌந்தர்ய உபாசகர்களுக்குச் சாமரம் வீசுவோர்க்கு இன்குலாப்பின் கவிதைகள் இதயத்தைத் தொடாமலிருக்கலாம். ஆனால் களத்தில் நின்று போராடிய கவிஞரின் கனல் கக்கும் வரிகள் அடித்தட்டு மக்களின் இதயத்திற்குள் துடிப்புகளாகவே இருக்கும்.


முற்போக்கை முன்னெடுக்கும் இடதுசாரிப் படைப்பாளர்களின் படைப்புகளைப் போகிற போக்கில் முழக்கங்கள், கூச்சல்கள், அழகியல்அற்றவை, கவித்துவமற்றவை என்றெல்லாம் புறந்தள்ளிப் போகிறவர்களின் கருத்துகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். சத்தியத்தின் சுடர்விடும் படைப்புகளைக் குறித்துப் புற்றீசல்கள் புலம்பாமலா இருக்கும்.? இன்குலாபின் கவிதைகளில் சத்தியத்தின் சுடர் ஒளிர்ந்துகொண்டேயிருந்தது. ஆதிக்க இருட்டை மோதித் தகர்க்க அவர் எழுப்பிய முழக்கங்கள் இலக்கிய உலகில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தன.

காலங்கள் ஆயிரம் காலங்களாய்-நம்
கைகள் ஓய்ந்ததுண்டா?
மாலைகள் வசந்த மாலைகளில்-நாம்
மயங்கிக் கிடந்ததுண்டா?
வாலிபம் ஆசை வாலிபத்தை-நம்
வாழ்வில் சுவைத்ததுண்டா?
கோலங்கள் காதல் கோலங்களைக்-
கண்ணில்
கொண்டு திரிந்ததுண்டா?’’

என்று அடித்தட்டு மக்களின் அகஉணர்வை விடுதலை கீதமாகப் பாடவைத்தார். ஏனென்றால்

விடுதலை என்ற விளம்பர
வெளிச்சத்தில்
கொடிதான் மாறியது.விடுதலை எங்கே?’’
என்று வினாவெழுப்பி

இங்கு ஒரு கொடிமாற்றும்
ஏமாற்று நாடகம்
விடுதலை என்ற பெயரில்
அரங்கேற்றம் கண்டது’’

என்று உண்மையைப் போட்டு டைத்தார். பெற்ற சுதந்திரம் எவர் வீட்டு முற்றத்தில் முடங்கிக் கிடக்கிறது என்பதையும் அதன் விளைவுகள் என்ன என்பதையும் கோபம் கொப்பளிக்க கவிஞர் எழுதினார்.

“உடைமை வர்க்கத்தின் உல்லாச மாளிகையில்
அதிகார வர்க்கத்தின் ஏ.சி. அறைகளில்
ஆனந்த சுதந்திரம் அரங்கேறுகின்றது’’
என்ற ஏளனப் புன்னகையோடு
மதுரையைக் கொளுத்திய தெய்வீகக் கற்பை
பத்துக்கும் அஞ்சுக்கும் குத்தகை விடுவது
சிலம்பை ஏந்திய சிலையின் கீழேதான்’’
என்று வயிற்றெரிச்சலோடு சொல்லி
ஆதிக்க மலைகளால் நசுக்கப் படுகிற
அதிகார அலைகளால் ஒதுக்கப் படுகிற
நாதியற்ற நாட்டு மக்களை
நேசிக்க மறந்து தேசப்படத்தைப்
பூசிப்பதொன்றே தேசப்பற்றாகுமா?’’

என்று நெஞ்சுயர்த்திக் கேட்டார். அரசியல் கவிதை களையும் அழகியலோடு படைத்த கவிஞரின் குரல் எப் போதும் எளியோர்க்காகவே ஒலித்துக் கொண்டிருந்தது.

ரகுபதி மந்திரமும்-ராம
ராஜ்ஜியக் கனவுகளும்
அகிம்சை போதனையும்-ராட்டை
யாகமும் பஜனைகளும்
பசித்த வயிற்றுக்கு-ஒரு
பருக்கையும் போடவில்லை’’

என்கிற உண்மையை உரக்கச் சொன்னதோடு

தேய்ந்து போன
காவடிக் கட்டைகள்
சென்னைக் கோட்டையில்,
தேசிய இனங்களின்
முதுகெலும்புகள்
தில்லி வாசலில்’’
என்கிற நிலையையும் சுட்டிக்காட்டி
நள்ளிரவில் உடுக்கை அடிக்கும்
ஒவ்வொரு கோணங்கியும்
நல்லகாலம் வருகுது
என்றுதான் சொல்கிறான்’’

என்று ஏமாந்துவிடாதிருக்க எச்சரிக்கை செய்கிறார். இன்றைய நடப்புநிலையோடு இத்தகைய கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கிறபொழுது கவிஞரின் பாய்ச்சல் எத்தகையது என்பது விளங்கும்.


அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து எழுதிய முக்கியமான கவிஞர்கள் இன்குலாபும் தமிழன்பனும்தான் என்பதை இலக்கிய வரலாறு பதிவு செய்திருக்கிறது. இன்குலாப் “யுஜி’’ என்றும், தமிழன்பன் “விடிவெள்ளி“ என்றும் நெருக்கடிநிலைக்கு எதிர்க்குரல் எழுப்பினர். பொற்காலம் எழப்போகிறது என்று கற்பிக்கப்பட்ட கற்பிதங்களையெல்லாம் எள்ளி நகையாடிய இன்குலாப்,

புழுக்கள் நெளிவதால்
ஏற்பட்ட சலனத்தை
நீரோட்டம் என்றால்
ஏமாந்தா போவோம்?’’
என்றும்
வன்முறை கூடாது’’
என்று உபதேசித்தவர்
வாயிலிருந்து தெறித்தது
எச்சிலல்ல-
என் தோழனின் ரத்தம்’’

என்றும்  பதிவுசெய்தார். 

கவிஞரின் கவிதைகளில் அழகியல் இல்லை. வெறும் வறட்டுத் தத்துவம்தான், சித்தாந்தம்தான் என்று அள்ளிவிடப்படுகிற பொறுப்பற்ற விமர்சனக் கருத்துகளுக்கு அவருடைய கவிதைகளே விடைகூறும்.

கண்ணீரில் சலவைசெய்து-மூச்சுக்
காற்றில் உலருகின்ற
கந்தல் துணியாக-எங்கள்
காலம் கழிகிறது,’’
என்று எழுதுகிற அவர் விரல்கள்தான்
சூரிய மயில்தன் நெருப்புத் தோகையை
விசிறிபோல் வீச இருளின் தூசு
பறந்து போகிற காலைப் பொழுது’’என்றும்
“நெருப்பு விரல்கள் நிலத்து வீணையில்
வெயிலை மீட்டும் வேளைக்கு முந்திய
கருக்கலில்’’என்றும்
குப்புறக் கிடக்கும்
பூமியின் முதுகில்
கூந்தல் இரவு
போர்வையாகிறது’என்றும்

கொசுவைப் “பறக்கத் தெரிந்த கறுபபுச் சீரகம்’’ என்றும் எழுதிச் செல்கின்றன. அதே நேரத்தில் கொந்தளிக்கும் கோபத்தோடு

“நகங்கள் பிறாண்டிய
தொடைகள் பிரிய
விறைத்துக் கிடப்பவள்
எவர் சகோதரி?’’

என்று எழுதுவதும் அதே விரல்கள்தான்.

பெண்ணியக் கருத்துக்களை முன்னெடுத்துச் சென்ற கவிஞரின் கவிதைகளில் பெண்களுக்கெதிரான அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான குரல் ஓங்கி ஒலித்தது.

“கிளிகள் என்றும் ஆடும் மயில்கள் என்றும்-நீங்கள்
கேட்ட வருணனை கொஞ்சங்களோ?
கிளைகளும் பச்சை .இலைவிரிக்கும்ஓ
கிளிகளே! உங்களின் சிறகெங்கே?’’என்று கேட்டு
“இறக்கை வெட்டிய கிளிகளாய்-நீங்கள்
எத்தனை காலம்இக் கூண்டுக்குள்ளே.
பறக்கத் துடிக்கும் பறவைகளே-இங்குப்
பரந்து கிடக்குது பிரபஞ்சம்’’

என்று திசைகளை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்கள் விழிப்புற வேண்டும் என்பதற்காக,

“தாமரைப் பூவில் சரசுவதியாய் பெண்ணை
தாங்கள் மதிப்பதாய்க் கதைஅளப்பார்.
தாமரைப் பூவினில் வாழாத-சேரிச்
சரசுகள் எத்தனைபேர் படித்தார்?’’

என்று கோபக்கனலை முடிந்துவைத்துக் கொடுத்தார். அவர் எழுதிய “மனுசங்கடா-நாங்க மனுசங்கடா’’ என்ற பாடல் கேட்பவரைக் கொந்தளிக்க வைக்கக்கூடியது. இயக்கத்தோழர்களால் இன்றும் வீதிக்கு வீதி பாடப்படுவது.

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே-ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க

எரியும்போது எவன்மசுரைப் புடுங்கப் போனீங்க’’ என்று குமுறி வெடிக்கிற வரிகள் காற்று வெளியைக் கலவரப்படுத்திக் கொண்டேயிருக்கும். தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளில் இருந்து பின்னடைவு காணாத கவிஞரின் “ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம், “ஸ்ரீராஜராஜேச்சுவரியம்,“கண்மணி ராஜம்’,’“கிரௌஞ்ச வதத்திற்குக் கேள்விகள் இல்லையா?’’ போன்ற எண்ணற்ற கவிதைகள் கவிஞரின் அரசியல் சார்பையும் கவித்துவத்தையும் பறைசாற்றுகின்றன.

என்னோடு சேர்ந்த
எல்லா முகத்திலும்
களவாடப் பட்ட வாழ்க்கையே
எழுதப்பட்டுள்ளது“ என்று துணிந்து சொல்லி
“தீக்குச்சி மருந்தில்
தீய்ந்து போகும் கைகள்
சிலேட்டில் முத்துக் கோக்க வேண்டிய
கைகள் அம்மா!’’
என்று கசிந்து
மனித விடுதலை
இறுதி லட்சியம்
மரணத்தைத் தியாகத்தால்
வெல்வது நிச்சயம்
என்று செம்மாந்து நின்று  கவிதைகளை முழங்கிய இன்குலாப்
உலகின் அழகை உணரவும் நுகரவும்
மனந்தான் வேண்டும்.
மதம்ஏன் வேண்டும்?’’ என்று கேள்வியோடு
மனிதரைப் பிரித்துச் சுவர்களை வளர்க்கும்
மதங்கள் தேவையில்லை
மனித உறவை மனிதர்க்கு மறுக்கும்
மதங்கள் தேவையில்லை’’
என்று வாழ்நாளெல்லாம் வாழ்ந்து
பூமியின் பசிய பக்கங்களில்
எனது பயணத்தை
மீண்டும் எழுதுவேன்,’’ என்று புன்னகைத்து
எவனது முழங்காலுக்குக் கீழும்
தலைசாய்ந்து கிடக்காது தமிழினம்
என்ற பெருமிதத்தோடு வாழ்ந்ததோடு
விடுதலை
யாசித்துப் பெறும்
தானமல்ல.
நமது அவசரத்தில்
அட்டைகளிடம் போய்
ரத்ததானம் கேட்கவேண்டாம்

என்பதையும் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

விருதுகளுக்காக அலைமோதும் கூட்டத்திற்குள் அவரது காலடிமண் கூடப் பட்டதில்லை. அன்பும் நட்பும் கருதி அவர் ஏற்றுக்கொண்ட விருதுகள் உண்டு. வழங்கப்பட்ட “கலைமாமணி’’ விருதையும் புறக்கணித் தவர் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே நேரத்தில் மானுட விடுதலைக்கு உலகளாவிய பார்வை யோடு கவிதை படைத்த மக்கள் கவிஞரை, சாதி, மத, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் நிமிர்ந்து வாழ்ந்த பெருமகனை அவர் படைப்பின் வழி சரியாக எடை போடத் தவறிவிட்டது தமிழ்ச்சமூகம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அவரவர் ஒரு பட்டியலைத் தயாரித்து வைத்துக் கொண்டு இந்த ஆண்டிற்குரிய “சாகித்ய அகாதமி“ விருது இவர்களில் ஒருவருக்குத்தான் என்பதுபோல் கருத்துத் திணிப்பை நிகழ்த்திக்கொண்டி ருக்கும் காலகட்டத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் அவ்விருதுக்குத் தக்கவராக நிமிர்ந்துநிற்கிறார் என்பதைப் பதிவு செய்வது நம் கடமை. அந்த விருது அவருக்கு வழங்கப்படும் சிறு மரியாதை அவ்வளவுதான். என்றாலும் எத்தனை காலம் கடந்தாலும்

“வயலிலிருந்து புதிய வாழ்வைத்
தேடி வருகிறோம் ஆழக்
கடலிலிருந்து புதிய வாழ்வைத்
தேடி வருகிறோம்.
புழுதி படிஞ்ச மேனியோடு
தேடி வருகிறோம்-நித்தம்
புரளும் வறுமைச் சேற்றிலிருந்து
தேடி வருகிறோம்.’’

என்று எங்காவது ஒரு மூலையில் இருந்து மக்கள் கவிஞரின் குரல் ஒலித்துக் கொண்டுதானிருக்கும். அதை எவரும் தடுக்கமுடியாது. ஏனென்றால் இன்குலாப் காலத்தின் கொடை.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :