Add1
logo
மோசடி வழக்கில் - மதன் மீண்டும் கைது || அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் - மு.க.ஸ்டாலின் || அரசாணைக்கு தொழில் கல்வி ஆசிரியர்கள் வரவேற்பு || ஆதித்தனார் நினைவு நாள் இன்று - உருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிக்கிறார் || தமிழக மீனவர்கள் 6 பேரை - இலங்கை கடற்படை கைது செய்தது || தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த 2 அடிமைகள் - துரைமுருகன் பேச்சு || இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது உறுதி || கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு! || ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் || சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள் || பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி || தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
......................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
......................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
......................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
......................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
......................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
......................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
......................................
காலத்தின் கொடை : இன்குலாப்
......................................
சொல்ல மறக்காத கதை - 7
......................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
......................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
......................................
கவிதைகள்
......................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
......................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
......................................
01-01-2017


-ஆருர் தமிழ்நாடன்

 வசீகரம்பொங்க, நம் வாசலில் வந்து நிற்கிறாள் தைப்பாவை. தமிழர் நெஞ்சமெல்லாம் நம்பிக்கை விளக்குகளை ஏற்றிவைக்கும் திருச்சுடர் அவள் விழிகளில் ஈராமாய் எரிகிறது.  தமிழகத்தின் பேரிடர்க் காயங்களுக்கு ஆறுதல் மருந்து தடவும் பரிவுக் கரங்களாய், அவளின் அழகுக் கரங்கள் நீள்கிறது. புத்தாண்டுப் புத்தாடையோடு தமிழர் திருநாளாய்  நடைபயிலும் அவளின் அன்னத்தின் தூவியன்ன அழகுப் பாதங்கள், காலப்பெருவெளியில் கவித்துவமாய்ப் பதிகிறது. அவளின் வருகையால்; கரும்புக் காடாகிறது மனம். அறுவவைக் களமாகிறது வாழ்க்கை. இஞ்சி மஞ்சள் கமழத் தோரணக் காடாகிறது நாட்கள்.

உறவுகளின் குதூகலிப்பில் வண்ணக் கோலமாகிறது நம் மனவாசல். ஜல்லிக்கட்டுப் புழுதியைச் சந்தனமாய்ப் பூசிக்கொண்டு சிலுசிலுக்கிறது காற்று. பழமையை விறகாக்கிக்கொண்டு எரிகிறது நம் பொங்கல் அடுப்பு. 

தமிழர் திருநாளான தைத்திருநாளை உலகம் உவப்பாகப் பார்க்கிறது. காரணம், இது தமிழர்களாகிய நமது, பண்பாட்டுச் செழுமையின் அடையாளம்- இயற்கைக்கும் நன்றிதெரிவிக்கும் நம் உயர் பண்பாட்டின் உருவாக்கம். இந்தத் தைத்திருநாளை, இதய ஈரத்தோடும், ஈடிலா வீரத்தோடும் ஆண்டாண்டு காலமாய்க் கனிந்து கொண்டாடிவருகிறது தமிழினம்.    மார்கழித் திங்களில் நீராடி நோன்பிருந்து, தைத்திங்களைத் தையலர்கள் வரவேற்கும் வழக்கம், சங்ககாலத்தி லேயே இருந்தது. நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் இதுகுறித்த செய்திகள் புன்னகைக்கின்றன. இதன் நெகிழ்வான நீட்சியாகவே "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்'’ என பனியில் குளிர்ந்து, அதன் சில்லிப்பைத் தன் பாடலில் அள்ளி வீசுகிறாள் ’சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ஆண்டாள்.

’மார்கழிக்குப் பெண்ணாக, மாசிக்குத் தாயாகப் பேர்கொழிக்க வந்த’ தைப்பாவையை, பொங்கல் வைத்துப் பூரிப்பாய் வரவேற்பது தமிழர் வழக்கம். 

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி,
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்'

-என எடுத்துக்காட்டுவதுபோல்,  நம் இல்லத்துப் பெண்கள், அடுப்புத் தீவளர்த்து, சுவைமிகும் பால்கொண்டு, புதுமண் கலயத்தில் வைக்கும் பொங்கல், ஆண்டாண்டுகாலமாய் நம் வீட்டு முற்றத்தில் பொங்குகிறது. முற்றத்தில் மட்டுமா பொங்கல் திருநாளின் அடையாளம்?

அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
சாறு கொண்ட களம் போல்’

-என புறநானூற்றுப் புலவர் குருங்கோழியூர்க் கிழார் படம்பிடித்துக் காட்டுவதுபோல், சிற்றூர்களில் எல்லாம், வைக்கோல் வேய்ந்த கூரைகளோடும், கரும்புத் தோரணங்களோடும், அறுவடை மணம் கமழத் தன் அடையாளத்தை அழுத்தமாகப் பதிக்கிறது பொங்கல்.

இந்தப் புதுநாளில், சங்கத் தமிழரின் இல்லம் செல்பவர்க்கு, மணக்க மணக்க இனிய பொங்கல் கிடைக்கும். அது எவ்விதமாய்த் தயாரிக்கப்படும் பொங்கல் தெரியுமா?

விதைவிடாமலே அறுத்த தினையை, மான்கறி சமைத்துச் சமைத்து மணமேறிப் போயிருக்கும் கலத்தில், நுரைக்க நுரைக்கக் கறந்த புதுப்பாலை ஊற்றி, சந்தன விறகைக் கொண்டு அடுப்பெரித்துப் பொங்கவைக்கும் பொங்கல் அது. அங்கே தழைவாழை இலையுடன் விருந்தோம்பல் நடக்கும். இதைத்தான்,

’உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
- என்கிறது புறநானூறு (168.)

இப்படி இனிமையும் ஈரமும் ஒருபக்கம் அரங்கேற, இன்னொரு பக்கம் காளைகளோடு காளையர்கள் வீறுகொண்டு மோதுவர். அப்போது அவர்களின் பார்வை மனதுக்கினிய மங்கையை கூட்டத்தில் தேடிப் பரிதவிக்கும். ஜல்லிக்கட்டுக் களங்களில், கண்களுக்கிடையிலும் ஜல்லிக்கட்டு நடக்கும். கண்களால் காதலெனும் கரும்பு கடிப்பார்கள். அப்போதுகூட, கொல்லேற்றுக் கோடஞ்சுகிறவர்களை, மறுமையிலும் ஏற்கமாட்டோம் என்று அரிவையர்கள் கண்களாலேயே அறிவிப்பார்கள். அன்றைய ஜல்லிக்கட்டுக் களங்களில், சாதிமத பேதங்கள் கடந்த மண முகூர்த்தங்கள் முளைத்தன. இத்தகைய பெருமிதப் பின்னணிகளோடு பொங்கல் விழாக்கள், தமிழ்மண்ணில் காலங்காலமாய்க் கொண்டாடப்பட்டு வருகிறது.

16-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த போர்த்துக்கீசியரான டூபாய், தமிழகத்தில் பொங்கல், நான்கு நாள் திருவிழாவாகக் கொண்டாடப் பட்டதையும்,  இதற்காக இல்லங்கள்தோறும்  கூரைகளைப் புதிதாகத் தமிழர்கள் வேய்ந்ததையும், சுவர்களுக்கு வண்ணம் தீட்டி அலங்கரித்ததையும் ஜல்லிக்கட்டு சகிதம் பொங்கல் விழா, பண்பாட்டு வெளிச்சத்தோடு நிகழ்ந்ததையும் தனது"இந்துகளின் பழக்கவழக்கமும் வாழ்க்கை முறையும்(Manners and c    Kustoms of hindus) என்ற நூலிலே வியப்பாய் விவரித்துப் பூச்செண்டை உயர்த்துகிறார்.

பொங்கலைத் தமிழ்ச் சமுகம் பரவலாகக் கொண்டாடியபோதும், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வழக்காறுகள் கடைப்பிடிக்கப்பட்டன. இதனால், 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்கள், தைப்பொங்கலைத்  தமிழர் திருநாள்’ என்னும் ஒருமித்த அடையாளத்தோடு கொண்டாடத் தலைப்பட்டார்கள்.

இதுவரை தான் அறிந்திராத புதிய பக்கங்களை வரலாறு, மெல்ல மெல்ல  புரட்டத்தொடங்கியது.


தைப்பொங்கலைத் ’தமிழர் திருநாள்’ என்று அடையாளபடுத்திக் கொண்டாடிய முதல் தமிழர்  அறிஞர் கா. நமச்சிவாயனார் ஆவார். தனது தமிழ்க்கடல் பதிப்பகத்துக்கு நூல் எழுதிய புலவர் பெருமக்களை சிறப்பித்துத், தமிழர் திருநாளைக் கொண்டாடிய மாமனிதர் அவர்.

தமிழர் திருநாளை முன்னெடுக்கத் தொடங்கிய, அறிஞர் பெருமக்கள், தன் சிந்தனையால் தமிழைச் சிகரத்தில் ஏற்றிய திருவள்ளுவரைக் கைதொழுதனர். அவருக்கு விழா எடுக்க விழைந்தனர். ’திருவள்ளுவர் பிறந்த திருத்தலம்’ என்று  மயிலாப்பூர்  திருவள்ளுவர் கோயிலைப் பலரும் ஆராதித்தனர். எவ்வித சான்றும் இல்லாமல், வைகாசித் திங்களில் வரும் அனுச நாளே, திருவள்ளுவர் பிறந்த நாள் என்று அக்கோயிலில் கற்பனைப் பல்லக்கு தூக்கப்பட்டது. 

இந்த நிலையில் 1935 மே 18, 19-ல் ’திருவள்ளுவர் நாள் கழகத்தினரால்’ தமிழ்முனிவர் மறைமலையடிகள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப் பட்டது.  இதன்பின், திருவள்ளுவரைக் கொண்டு தமிழர் ஆண்டு களைக் கணிக்கும் எண்ணம் தமிழறிஞர்கள் மத்தியில் மலர்ந்தது. காரணம், வடநாட்டைச் சேர்ந்த சாலிவாகனன் பெயரிலான கணக்கீட்டின்படி பிரபவ-வில் தொடங்கி அட்சய வரையிலான 60 தொடர் வருடத்தை கடைப்பிடிப்பதில், தமிழருக்கான எந்த அடையாளமும் இல்லை. அதிலும் அந்த 60 வருடங்களும் பிறந்த கதையாகப் புராணங்கள் சொல்லுவது அருவருக்கத்தக்கது. எனவே, கிறித்தவர்கள் ஏசுவை வைத்து ஆங்கிலப் புத்தாண்டைத் தொடங்கியது போல், திருவள்ளுவரிலிருந்து புத்தாண்டைத் தொடங்க அறிஞர்கள் திட்டமிட்டது பொருத்தமானது.

1937 டிசம்பர் 26-ல் திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில், தமிழர் மாநாட்டை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்  நடத்தினார். இந்த மாநாட்டில்தான்  கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் என்கிற தன் காலக்கணிப்பை வெளியிட்டார் மறைமலையடிகள். இதை அங்கிருந்த தந்தை பெரியார் ஏற்பாரா? என அனைவர் கண்களும் அவரையே கவனித்தன. அந்த கணநேரத்தில், காற்றுக்கும் அங்கே வியர்த்திருக்கும். தந்தை பெரியாரோ, அந்த முடிவை ஏற்று, திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கத்திற்குத் தோதாகப் பச்சைக்கொடி அசைத்தார். அவருக்கு அங்கேயே  திரு.வி.க., தன் உரையால் நன்றிமுத்தம் பெய்தார். இதைத் தொடர்ந்தே தமிழர் புத்தாண்டாய் தைத் திங்களை கையிலெடுக்கத் தொடங்கியது புலவர் கூட்டம். 1949 ஜனவரி 14, 15-ல் தந்தை பெரியார் தலைமையில் திருக்குறள் மாநாடு  சென்னையில் நடந்தது. இதன்பின்னரே, தமிழர் திருநாளும், திருவள்ளுவர் திருநாளும் கைகுலுக்கத் தொடங்கின.  இந்த நேரத்தில், பொங்கல் திருநாளில் வாழ்த்திதழ் அனுப்பும் வழக்கத்தை ஆரம்பித்துவைத்த பெருந்தமிழர் பெரியசாமித் தூரனை நாம் மனதிற்குள் நிறுத்தி மலர்தூவியாகவேண்டும். 1923-ல் மாநிலக் கல்லூரி மாணவராக இருந்த அவர்தான், திரு.வி.க. உள்ளிட்டவர் களுக்கு வாழ்த்திதழ் அனுப்பி, நம் பண்பாட்டு வெளியில் ஒரு புதிய திசையைத் தொடங்கிவைத்தார்.  இளைஞர்கள் மத்தியில் தமிழர் திருநாளைக் கொண்டாடும் விருப்பத்தை, இதயத் துடிப்பைச் சுமந்த இந்த வாழ்த்திதழ்கள் கமுக்கமாய் வளர்த்தன என்றும் நாம் கைதட்டலாம்..

1949-ல், மாநிலப் பிரிவினைக்கான குரல்கள் எழுந்த நேரத்தில், சிலம்புச்செல்வர் ம.பொ.சி., தமிழர்களுக்கு உணர்வூட்ட தமிழர் திருநாளைக் கையிலெடுத்தார். பொங்கலில் தமிழ்மணத்தது. இதேபோல்,  திராவிட இயக்கங்கள், பொங்கல் விழாவைப் பூரிப்பாய்க் கையிலெடுத்தன.  உரையரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், சிறப்புமலர்கள் போன்றவற் றால், அதைத் ‘தமிழர் திருநாளாய்’ இலக்கிய ஈரத்தோடு வளமாக வளர்த்தெடுத்தன. எனினும், தைத் திங்களுக்கு, தமிழ்ப் புத்தாண்டு என்ற அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்ற ஆதங்கம், செரிக்காத உணவாய், உணர்வாளர்களின் நெஞ்சில் கரித்துக்கொண்டிருந்தது.

கலைஞரோ, தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு என்று  28.1.2008-ல்  சட்டப் பேரவையில் சட்டமியற்றிச்சாதனை படைத்தார். வரலாற்றில், தமிழருக்குக் கிடைத்த மகத்தான பண்பாட்டுப் பதிவு இது. இதனால் தமிழர் மனங்களில் எல்லாம் இன்ப இசை கசிந்தது.  1971-ல் தமிழக அர சால் திருவள்ளுவர் ஆண்டு ஏற்கப்பட்டு, அது 1972-ல் அரசிதழிலும் இடம்பிடித்தது. ஆனால் இதை முதல்வர் பொறுப்பேற்ற ஜெயலலிதாவால் ஏற்கமுடியவில்லை. அதனால் 2011-ல் ஆட்சி பீடம்  ஏறிய அவர், சித்திரையே தமிழர் புத்தாண்டு என ஏறுக்கு மாறாக  சட்டத்தைநிறைவேற்றிவிட்டார். இதன்மூலம்,  தமிழறிஞர்கள் ஏறத்தாழ 80 ஆண்டுகாலம் போராடி, தைமகளின்  தலையில் அணிவித்த ’தமிழர் புத்தாண்டு’ மகுடத்தைக் கழற்றி வீசினார். தன்னை  ஆரிய மௌடீகத்தின்  ஆணிவேர் என்று அவர்  நிரூபித்தார். தை முதல் நாளை  தமிழ்ப் புத்தாண்டென்னும் அழகுப் பிள்ளையாய் அறிஞர்கள் வளர்த்தெடுத்ததை மறந்து, அதன் கழுத்தில் கை வைத்துவிட்டார்.

 'நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு.
தரணியாண்ட தமிழர்க்கு தை முதல்
நாளே தமிழ்ப் புத்தாண்டு'

என்கிற புரட்சிக் கவிஞரின் வரிகளை நெஞ்சிலே ஏந்தி, பெரும்பாலான உலகத் தமிழர்கள், தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு என்பதை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் உலகம் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :