Skip to main content

30 கொலைகள் செய்த சயனைடு மல்லிகா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 09

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

rajkumar-solla-marantha-kathai-09

 

30 கொலைகள் செய்த பெண்ணின் கதையை ‘சொல்ல மறந்த கதை’ என்னும் தொடரின் வழியாக இன்சூரன்ஸ்  நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகா என்கிற பெண் திருமணமாகி கணவரை விட்டுப் பிரிந்தவர். அவருக்கு வாழ்வாதாரத்துக்கு வழியில்லை. பொதுவாக பணக்காரப் பெண்களோடு பேச்சுக் கொடுக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர்களோடு இவர் மிகுந்த நட்பாகப் பழகுவார். அவர்களோடு ஒன்றாக கோவிலுக்குச் செல்வார். அவர்களுடைய வீடுகளுக்கே சென்று உரிமையோடு பழகுவார். இறுதியில் அவர்களுடைய நகைகளைத் திருடிவிட்டு அவர்களுக்கு சயனைடு கொடுத்து கொல்வார். 

 

இதனால் அவருக்கு சயனைடு மல்லிகா என்கிற பெயர் வந்தது. அவரால் தொடர்ந்து பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் காணாமல் போவதும், அவர்கள் சயனைடு மூலமாக கொல்லப்படுவதும் தொடர்ந்து அரங்கேறி வந்தது. 20 வயது முதல் 60 வயது வரையிலான பெண்கள் பலரை அவர் கொன்றார். ஒரே ஒரு பெண் மட்டும் சுதாரித்துக்கொண்டு இவரிடமிருந்து தப்பினார். அதன் பிறகு மல்லிகா போலீசாரிடம் சிக்கினார். அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

 

பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இன்றும் அவர் உயிருடன் தான் இருக்கிறார். பாதுகாப்பற்ற கோவில்களுக்கு செல்வதையும், பழக்கமில்லாதவர்களோடு பழகுவதையும் பெண்கள் தவிர்க்க வேண்டும். தங்களுடைய பாதுகாப்பைத் தாங்கள் தான் உறுதி செய்துகொள்ள வேண்டும். கர்நாடக மாநிலத்தையே உலுக்கிய வழக்கு சயனைடு மல்லிகாவின் வழக்கு. 

 

தமிழ்நாட்டிலும் சயனைடு கலந்து கொல்லப்பட்ட வழக்குகள் குறித்து சொல்ல ஒரு வழக்கு இருக்கிறது. இரண்டு நண்பர்கள் டாஸ்மாக்கில் குடிக்கச் சென்றனர். மதுபானத்தை சரியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். அதற்காக அவர்கள் டம்ளர் கேட்டபோது அருகிலிருந்தவர் சயனைடு கலந்த டம்ளரை அவர்களிடம் கொடுத்தார். அதில் மதுவை ஊற்றிக் குடித்த இருவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்தனர். மது குடித்ததால் தான் அவர்கள் இறந்தனர் என்று முதலில் நம்பப்பட்டது. அதன் பிறகு தான் சயனைடு விஷயம் என்று அனைவருக்கும் தெரிந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சயனைடு கலந்த டம்ளரைக் கொடுத்தவர், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு தான் உண்மை வெளிவந்தது. இப்படி சயனைடு மூலம் செய்யப்பட்ட கொலைகள் நிறைய இருக்கின்றன.