Skip to main content

சின்ன தல ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புவாரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

மிஸ்டர்.ஐ.பி.எல்., சின்ன தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. அதிரடியான பேட்டிங், பெஸ்ட் பீல்டிங், பார்ட் டைம் பவுலிங் என ஒரு காலத்தில் இந்திய அணிக்கும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் நம்பிக்கை நட்சித்திரமாகவும் வலம் வந்தவர். ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன், டி20 ஸ்பெஷலிஸ்ட் என்று டி20–யில் உலக அளவில் சிறந்த வீரராக அசத்தினார். இன்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார். ஆனால் இன்றைய இந்திய அணியில் இடமில்லை. மீண்டும் இடம்பெற தீவிரமாக முயற்சித்து வருகிறார். இவருடைய வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

 

rr

 

 

முதல் ஓவரில் விக்கெட் விழுந்தாலும் சரி, இருபது ரன்களுக்கு 2 அல்லது 3 விக்கெட்கள் என அணி எப்படிப்பட்ட கட்டத்தில் இருந்தாலும் சரி, ரன் ரேட்டை குறைக்காமல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதே சமயம் தன்னுடைய விக்கெட்டை எளிதாக பறிகொடுக்கமாட்டார். 

 

பொதுவாக வேகப்பந்து வீச்சில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் அதிகம் அடிப்பார்கள். சிக்ஸர்கள் மிகவும் அரிதாக பறக்கும். ஆனால் ரெய்னாவை பொறுத்தவரை, ஆட்டத்தின் தொடக்கத்திலும் வேகப்பந்து வீச்சில் சிக்ஸர்களை சர்வ சாதரணமாக விளாசுவார். டி20 போட்டிகளில் இவருடைய பேட்டிங்க்கு இணை, இவர் மட்டுமே. 

 

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஐ.பி.எல்.-லில் மிகச்சிறந்த அணியாக வலம் வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சுரேஷ் ரெய்னாவின் ஆல்-ரவுண்டர் ஸ்கில்தான். இன்சைடு-அவுட், கவர் டிரைவ் ஷாட்கள் இவருடைய ஸ்பெஷல் ஷாட்கள். இவரைபோல யாரும் இன்சைடு-அவுட் ஷாட்களை எளிதாக ஆடமுடியாது. தமிழ்நாட்டில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 

 

rr

 

 

இவருடைய பீல்டிங் எப்பவும் தனி ஸ்பெஷல் தான். ஸ்லிப்பில் கேட்ச், லாங் பீல்டிங்கில் டைவ் கேட்ச், கிரவுண்ட் பீல்டிங் மூலம் ரன்களை தடுத்தல் என குறைந்தது ஒரு போட்டிக்கு 10 ரன்களையாவது  அணிக்கு சேகரித்து கொடுப்பார். பார்ட் டைம் பவுலராக அணியை பலமுறை வெற்றி பெற வைத்துள்ளார். தோனி கேப்டன் ஆக இருக்கும் போது எதிர் அணியில் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க சுரேஷ் ரெய்னாவை அழைப்பார். பலமுறை முக்கியமான விக்கெட்களை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளார். 

 

ஐ.பி.எல்.-ல் இதுவரை 172 இன்னிங்க்ஸ் ஆடி 448 பவுண்டரிகள், 185 சிக்ஸர்கள் உட்பட 4985 ரன்கள் குவித்துள்ளார் ரெய்னா. பேட்டிங் சராசரி 34, ஸ்ட்ரைக் ரேட் 138. 27 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். 25 விக்கெட்களையும் எடுத்துள்ளார். எக்னாமி ரேட் 7.4. பீல்டிங்கில் 95 கேட்ச்கள் பிடித்துள்ளார். ஒரு பீல்டராக ஐ.பி.எல்.-லில் அதிக கேட்ச் பிடித்தவர் இவர்தான். ஐ.பி.எல்.-லில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையும் ரெய்னாவுக்கு உண்டு. 

 

தோனி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இல்லாதபோது ரெய்னா கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல்.-லில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டபோது குஜராத் லைன்ஸ் அணியில் கேப்டனாக விளையாடினார். 2016 ஐ.பி.எல்.-லில் குஜராத் லைன்ஸ் அணியை ப்ளே-ஆப் சுற்று வரை அழைத்து சென்றார். நடைபெற்ற அனைத்து ஐ.பி.எல்.-தொடர்களிலும் 300 ரன்கள் எடுத்த ஒரே வீரர் ரெய்னா.  

 

rr

 

 

ஐ.பி.எல்.-ல் மட்டுமல்ல. இந்திய அணியிலும் ஏராளமான சாதனைகள் புரிந்துள்ளார். டி20-யில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை உடையவர். டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என மூன்று பார்மேட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தகாரர். டி20 போட்டிகளில் 6000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாதான். 

 

2011 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அந்த உலகக்கோப்பையில் காலிறுதி மற்றும் அரை இறுதியில் இவருடைய ரன்கள் 34*, 36*. 2015 உலகக்கோப்பையில் 1 சதம், 2 அரை சதங்கள் உட்பட 284  ரன்கள் குவித்தார். பேட்டிங் சராசரி 57. இருப்பினும் அதற்கு பிறகு இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை.  

 

சுரேஷ் ரெய்னா மீண்டும் இந்திய அணியில் இடம் பெறும் தகுதி உடையவர் என்று நிரூபித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்த வருடம் நடந்த டி20 தொடரில் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. 24 பந்துகளில் 31,  27 பந்துகளில் 43 என அசத்தினார். பின்னர் நடைபெற்ற டி20 போட்டிகளிலும் ஓரளவு ரன்கள் குவித்துள்ளார். 

 

32 வயதான அவர் இன்னும் சுறுசுறுப்பாகவும், உடல் தகுதி உடனும் உள்ளார். மற்றவர்களை பாராட்டுவதில் முதல் ஆளாக இருப்பார். அது பீல்டிங் அல்லது சிறப்பான பந்து வீச்சு அல்லது விக்கெட் என எதுவாக இருந்தாலும் சரி. ஈகோ இல்லாமல் செயல்படும் ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். விக்கெட்டுகளுக்கு இடையே அவரது ஓட்டம் இன்றும் நன்றாகவே உள்ளது. எனவே விரைவில் மிகச்சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.