Skip to main content

மாற்றி எடுத்த வீரர் மாஸ் காட்டிய சுவாரசியம்; ஐபிஎல்-இல் நடந்த ருசிகரம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Shashank Singh batting gt vs pbks match

மாற்றி எடுக்கப்பட்ட வீரரின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024இன் 17ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு சஹா 11 ரன்னிலே வெளியேறி ஏமாற்றினார். பின்னர் கேப்டன் கில்லுடன் இணைந்த வில்லியம்சன் பொறுமையாக ஆடினார். ஆனால், கேப்டன் கில் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.

வில்லியம்சன் 26 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் வழக்கத்திற்கு மாறாக அவரும் அதிரடியாக ஆடினார். 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மற்றொரு தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கர் 8 ரன்களில் வெளியேறினார். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும், மறுபுறம் கேப்டன் கில் அரை சதம் கடந்து 89 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். இறுதி ஓவர்களில் அதிரடி ஆட்டக்காரர் ராகுல் டெவாட்டியாவின் 23 ரன்கள் உதவியுடன் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளும், ப்ரார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 200 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் தவான் 1 ரன்னிலே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். முக்கிய ஆட்டக்காரரான் பேர்ஸ்டோவும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது அதிரட் காட்டிய பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.பெரிது எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசாவும் 15 ரன்களில் அட்டமிழக்க 111-5 என்று தடுமாறியது.

பஞ்சாப் அணி தோல்வி உறுதி என ரசிகர்கள் நினைத்த வேளையில், சஷாங்க் சிங் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அடுத்து வந்த ஜித்தேஷும் அதிரடியாக ஆரம்பித்தார். ஆனால், அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஜித்தேஷ் 16 ரன்களில் வெளியேறினார். பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்ட சஷாங்க் சிங் அரை சதம் கடந்தார். பின்னர் வந்த அஷுட்டோஷ் ஷர்மாவும தன் பங்குக்கு அதிரடியில் இறங்கினார். அஷுட்டோஷ் ஷர்மா 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆக, இறுதி வரை ஆட்டமிழக்கமாமல் நின்ற சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை அபார வெற்றி பெற செய்தார்.

இந்த சஷாங்க் சிங் பஞ்சாப் அணிக்குள் வந்த நிகழ்வு சுவாரசியமானது. ஐபில்2024 மினி ஏலத்தின் போது பஞ்சாப் அணி சஷாங்க் சிங் என்ற வீரரை எடுக்க முன்பே திட்டமிட்டு, அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால், 19 வயது சஷாங்க் சிங்கை எடுப்பதற்கு பதிலாக 32 வயதான சஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்து விட்டது.

தற்போது அந்த சஷாங்க் சிங் தான், தனது அதிரடியால் பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தி வெற்றி தேடித் தந்துள்ளார். குஜராத் அணி தரப்பில் நூர் அஹமத் 2 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா, உமேஷ், ரஷித், மொஹித், தர்ஷன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக சஷாங்க் சிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.