Skip to main content

மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்; ஆதரவளித்த ரஸ்ஸல்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

shah rukh khan

 

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகள், கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய (13.04.2021) போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்ய குமார் யாதவ், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, சிறப்பாக விளையாடியது. ஒருகட்டத்தில் 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதிக்கட்டத்தில் மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியைத் தழுவியதால், கொல்கத்தா அணியின் ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான், அணியின் தோல்வி குறித்து, “ஏமாற்றமளிக்கும் செயல்பாடு. ரசிகர்களிடம் கொல்கத்தா அணி அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறது" என தெரிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஷாருக்கானின் ட்வீட் குறித்து, கொல்கத்தா வீரர் ரஸ்ஸலிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நானும் அந்த டிவீட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால் நாளின் முடிவில், கிரிக்கெட் ஆட்டத்தில், என்ன நடக்குமென்பது ஆட்டம் முடியும்வரை உங்களுக்குத் தெரியாது. நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். வீரர்களை பற்றி நான் பெருமைப்படுகிறேன். உங்களுக்குத் தெரியும், நாங்கள் நிச்சயமாக ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் இது உலகத்தின் முடிவு அல்ல. இது இரண்டாவது போட்டி மட்டுமே. இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளப் போகிறோம்" என தெரிவித்தார்.