Skip to main content

பரபரப்பான உலகக் கோப்பை 2023; யாருக்கு அரையிறுதிக்கு அதிக வாய்ப்பு?

Published on 02/11/2023 | Edited on 03/11/2023

 

semi final chance World Cup 2023 cricket score update

 

உலகக் கோப்பை 2023 லீக் போட்டிகள் 80 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரை இறுதிக்கு பத்து அணிகள் போட்டி போட்ட நிலையில் முதல் அணியாக வங்கதேச அணி போட்டியை விட்டு வெளியேறியது. மீதமுள்ள ஒன்பது அணிகளில் முதல் நான்கு இடங்களுக்கு போட்டி போட்டு வந்த நிலையில், இந்திய அணி முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இலங்கை  வீழ்த்தியதன் மூலம் தொடர்ச்சியாக 7 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது.

 

இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் அடுத்த மூன்று இடங்களுக்கு எட்டு அணிகள் போட்டி போடுகின்றன.  இதில் யார் யாருக்கு அரையிறுதிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஒவ்வொரு அணியும் இன்னும் எத்தனை போட்டிகள் வென்றால் அரையிறுதிக்குள் நுழையலாம். எவ்வளவு புள்ளிகள் எடுக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

 

தென்னாப்பிரிக்கா

 

இந்திய அணிக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா அணியே அதிக வெற்றி பெற்றுள்ளது. ரன் விகித அடிப்படையில் மற்ற எல்லா அணிகளையும் விட மிகச்சிறப்பான ரன் விகிதத்தில், ஏன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை விட அதிகமான ரன் விகிதத்தில், தென் ஆப்பிரிக்க அணி இருப்பதால், தென்னாப்பிரிக்கா அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறுவது 95% உறுதியாகிவிட்டது. இருப்பினும் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே 100 சதவீதம் தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றுவிட்டது என்று கூற முடியும். மீதமுள்ள எல்லா போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா தோற்றாலும் 12 புள்ளிகளுடன் சிறப்பான ரன் விகிதம் கொண்டிருக்கும் பட்சத்தில் தானாகவே அரையிறுதிக்கு தகுதி பெறும்.

 

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு தகுதிபெற மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் அல்லது இரண்டு போட்டிகளில் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற வேண்டும். மற்ற அணிகளும் 12 புள்ளிகள் பெறும் பட்சத்தில் ரன் விகித அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஒருவேளை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றால், மற்ற அணிகளும் 10 புள்ளியில் நிறைவு பெற்றால், மற்ற அணிகளை விட அதிகப்படியான ரன் விகிதம் பெற்றால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு தகுதி பெற முடியும்.

 

நியூசிலாந்து

மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற்று மற்ற அணிகளும் 12 புள்ளிகளுடன் இருக்கும்போது, அரை இறுதி பந்தயத்தில் இருக்கும் மற்ற இரண்டு அணிகளை விடவும் ரன் விகிதம் அதிகம் இருந்தால், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.ஒருவேளை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றால், மற்ற அணிகளும் 10 புள்ளியில் நிறைவு பெற்றால், அரை இறுதிக்கு தகுதிபெற ரன் விகிதமே ஆபத்பாந்தவனாக உதவும்.

 

பாகிஸ்தான்

மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற வேண்டும். மற்ற அணிகளும் புள்ளிகளுடன் இருந்தால், மற்ற அணிகளை விட அதிகப்படியான ரன் விகிதம் பெற்றால் மட்டுமே  பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அவர்களுடைய அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற வேண்டும், ஆப்கானிஸ்தான அணி இரண்டு போட்டிகள் ஆவது தோல்வியுற வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் 8 புள்ளிகள் உடன் அதிகப்படியான ரன் விகிதம் இருந்தால், அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறலாம்.

 

ஆப்கானிஸ்தான்

 

ஆப்கானிஸ்தான அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை மற்ற அணிகள் 12 புள்ளிகளுடன் முடித்தால், ரன் விகிதத்திலும் அனைத்து அணிகளையும் விடவும் கூடுதலாக இருக்க வேண்டும். அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெறுவதே ஆப்கானிஸ்தான அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கூட்டும். முக்கியமாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை விடவும் அதிகப்படியான ரன் விகிதம் பெற்றால், 12 புள்ளிகளுடன் அரை இறுதித் தகுதி பெற ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.

 

இலங்கை

இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டு போட்டிகளிலும் தோல்வி பெற வேண்டும். இந்தக் கணக்குகள் எல்லாம் சரியாக நடந்தால், அரை இறுதிக்கு தகுதி பெறும் மற்ற அணிகளில் ஏதாவது ஒரு அணி 8 புள்ளிகளை பெற்றால்  ரன் விகித அடிப்படையில் ஒரு இடத்தை பெறலாம். இந்தியாவுடனான போட்டியில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால், இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் மிக மிக குறைவு.

 

நெதர்லாந்து

 

நெதர்லாந்து அணி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதம் வெற்றி பெற்று 10 புள்ளிகளை பெற்றால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளில் ஏதாவது ஒரு அணி 10 புள்ளிகளைப் பெறும்போது அதிகப்படியான ரன் விகிதத்தின் அடிப்படையில் அரை இறுதியில் ஒரு வாய்ப்பைப் பெறலாம். இரண்டு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அவர்களுடைய இரண்டு போட்டிகளிலும் மோசமான ரன் விகிதத்தில் தோற்கும் பட்சத்தில், நெதர்லாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற ஒரு வாய்ப்பு அமையும்.

 

இங்கிலாந்து

நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற்று, மீதமுள்ள அணிகளில் ஏதாவது ஒரு அணி அரை இறுதி வாய்ப்பை 8 புள்ளிகள் பெற்று தகுதி பெறும் பட்சத்தில் அதிகப்படியான ரன் விகிதம் இருந்தால் இங்கிலாந்து அணி தகுதி பெற முடியும். மேலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அவர்கள் பங்கு பெறும் அனைத்து போட்டிகளிலும் தோற்று இங்கிலாந்து அணி தன்னுடைய அனைத்து போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற்றால் ஒரு வாய்ப்பு உண்டு.

 

மேலும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நெதர்லாந்து ஆகிய அணிகள் ஏதாவது இரு போட்டியில் தோற்று ஒரு அணி 8 புள்ளியுடன் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அதிக ரன் விகிதம் பெற்று இருந்தால், அரை இறுதிக்கு தகுதி பெற முடியும். தற்போது உள்ள சூழ்நிலையில் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

 

மீதமுள்ள மூன்று அணிகளில் தென்னாபிரிக்க அணியே இரண்டாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இரு போட்டிகளிலும் தோற்றாலும் அதிகப்படியான ரன் விகிதம் பெற்றிருப்பதால் நான்காவது அணியாகவாவது தென்னாப்பிரிக்கா அணி இறுதிக்குள் நுழைந்து விடும். மீதமுள்ள இரு இடங்களுக்கு ஏழு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில், இரண்டு இடங்களுக்கு 5 அணிகள் கடும் போட்டி போடும் என்று தற்போதைய ரன் விகித அடிப்படையில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- வெ.அருண்குமார்