Skip to main content

பஞ்சாப் அணியில் இருந்து சேவாக் விலகல்? ட்விட்டரில் அறிவிப்பு!

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
sehwag

 

 

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்வதாக அந்த அணியின் மென்டராக இருந்த சேவாக் தெரிவித்துள்ளார். 
 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இரண்டு சீசன்களாக தொடக்க வீரராகவும், 2016ஆம் ஆண்டிலிருந்து மென்டராகவும் செயல்பட்டவர் விரேந்தர் சேவாக். கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக தமிழக வீரர் அஸ்வின் பொறுப்பேற்றிருந்தார். முதல் ஆறு போட்டிகளில் சிறப்பாக ஆடிய அந்த அணி அதற்கடுத்த எட்டு போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. லீக் சுற்றில் வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது கூட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பஞ்சாப் அணி தோற்றது. இதனால், அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மற்றும் சேவாக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், பிரீத்தி இதனைத் திட்டவட்டமாக மறுத்தார். 
 

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாப் அணியில் இருந்து விலகுவது பற்றி செய்தி வெளியிட்டுள்ள சேவாக், “எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவுண்டு. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். மூன்றில் மென்டராக இருந்திருக்கிறேன். இந்த தருணத்தில் நான் அந்த அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறேன். அணியினரின் நல்ல எதிர்காலத்திற்கும், என்னோடு பயணித்ததற்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.