காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏற்கனவே இந்தியா இரண்டு பதக்கங்களை பெற்றிருந்த நிலையில் தற்பொழுது மூன்றாவது பதக்கமாக தங்க பதக்கத்தை உறுதி செய்துள்ளது இந்தியா.
22ஆவது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டிகள் நடைபெறக்கூடிய முதல் நாளிலேயே இந்தியா தொடர்ச்சியாக மூன்று பதக்கங்களை உரித்தாக்கியுள்ளது. ஏற்கனவே 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்க்கார் வெள்ளிப் பதக்கமும், 61 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் பிரிவில் 269 கிலோ எடையைத் தூக்கி இந்திய வீரர் குருராஜா வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார்.
இந்நிலையில் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் 197 கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு தங்கம் வென்றுள்ளார். இதனால் காமன்வெல்த் 2022 போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மீராய்பாய் சானு ஏற்கனவே 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கமும், 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். அதேபோல் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.