Skip to main content

வரலாறு படைக்குமா கோலி தலைமையிலான இந்திய அணி? இன்று பலப்பரீட்சை!

Published on 13/02/2018 | Edited on 20/02/2019

தென் ஆப்பிரிக்க கிரிக்கெர் அணியுடனான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் வைத்து இந்தப் போட்டி தொடங்குகிறது.

 

India

 

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு ஆறு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஜோனஸ்பெர்க்கில் வைத்து நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பிங்க் ஜெர்சியுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியை சுலபமாக வீழ்த்தியது. அந்தப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தால் தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கும். ஆனால், அன்றைய தோல்வி இந்திய அணியின் சாதனையை தள்ளிப்போட்டது.

 

கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும், அடுத்த மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோற்று தொடரை இழந்தது. இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கு ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

பந்து வீச்சில் கலக்கிய இந்தியா; உலகக் கோப்பையில் செய்த புதிய சாதனை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

India mixed in bowling A new record in the World Cup

 

உலகக் கோப்பையின் 29வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே லக்னோவின் பாரத ரத்னா ஶ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கில் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்பு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் 4 ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி 40 ரன்களுக்கு 3  விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழ மறுபக்கம் ரோஹித் சர்மா நிதானமாக ஆடினார். அவருடன் சேர்ந்த கே.எல். ராகுல் அணியை சரிவிலிருந்து மீட்டார். இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் ரோஹித் சர்மா அரை சதம் கடந்தார். நன்றாக ஆடிய ராகுல் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

 

பின்பு கேப்டன் ரோஹித்துடன் சேர்ந்த சூர்யாவும் நிதானமாக ஆடினார். சதம் அடிப்பார் ரோஹித் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், 87 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஜடேஜா எட்டு ரன்களிலும், சமி 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சூரியகுமாருக்கு, பும்ரா துணை நின்று ரன்கள் சேர்க்க சூரியகுமார் பொறுமையாக ஆடினார்.  அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யா குமார் யாதவ், சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 49 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் பும்ரா மற்றும் குல்தீப்பின் கடைசி கட்ட இன்னிங்ஸ் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் ரஷித் 2 விக்கெட்டுகளும் மார்க் வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.


பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் அதிரடியாக ஆடத் தொடங்கினார். இருப்பினும் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சால் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த ரூட்டும் ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் ஆனார். மறுபுறம் வேகப்பந்து வீச்சாளர் சமி, ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ இருவரையும் சிறிய இடைவெளியில் அவுட் ஆக்கினார். சிறிது நேரம் பொறுமையுடன் ஆடிய கேப்டன் பட்லரை குல்தீப் கிளீன் போல்ட் ஆக்கினார். குல்தீப் வீசிய பந்து 7.2° திரும்பி இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறப்பான ஒரு பந்தாக வர்ணிக்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இறுதியில் இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் மட்டும் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்து வீசிய சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் எடுத்தனர். நெருக்கடியான நிலையில் பொறுப்புடன் ஆடி 87 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 

இந்த வெற்றியால் இந்திய அணி உலகக் கோப்பைகளில் அதிக முறை வெற்றி பெற்ற இரண்டாவது அணி (58) என்ற நியூசிலாந்து அணியின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்தை (59) பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா (73) முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி இதுவரை பங்கு பெற்ற உலகக் கோப்பை போட்டிகளில், லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆறுமுறை வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன் 2015இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

 

India mixed in bowling A new record in the World Cup

 

இந்தப் போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக 18,000 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் ரோஹித் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை (7) ஆட்ட நாயகன் விருது பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பைகளில் அதிக முறை (9) ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரராக முதலிடத்தில் உள்ளார்.

 

- வெ. அருண்குமார்

 

 

Next Story

ரோஹித்தின் அதிரடி ஆட்டம் திணறிய தென்னாப்ரிக்கா அணி!

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நடந்த 8-வது ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா மற்றும் இந்திய அணிகள் இங்கிலாந்து ரோஸ் பவுல், சௌதாம்ப்டன் மைதானத்தில்  மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஹசிம் ஆம்லா, குவிண்டன் டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பும்ரா வேகத்தில் ஆம்லா ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து, 2 ஓவர்கள் கழித்து டி காக்-ஐயும் பும்ரா 10 ரன்களில் அவுட் ஆக்கினார். பின்னர், களமிறங்கிய கேப்டன் டூ பிளீசிஸ் சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருக்கு சப்போர்ட் ஆக வான் டெர் டுசென் நின்றார். 20-வது ஓவரில் டூசென் 22 ரன்கள் எடுத்த நிலையில், சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து முக்கிய வீரர் டுமினி ஆட வந்தார். 23-வது ஓவரில் அவரையும் சாஹல் 3 ரன்களில் வெளியேற்றினார். சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருக்க, தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. சாஹல் 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

 

india team

 


228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ரோஹித் சர்மா. முதல் 2-வது ஓவரில் 8 ரன்கள் எடுத்து ஷிகர் தவான் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி 18 ரன்களில் கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயரத்தொடங்கியது. கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து மஹேந்திர சிங் டோனி களம் இறங்கினார். அவர் சிஸ்சர் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 34 ரன்கள் எடுத்து தென்னாப்ரிக்கா அணியின் வீரர் கிறிஸ் மோரிஸ்டம் கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி வெற்றி இலக்கை 47.3 ஓவரில் எட்டினார்.

 

ind vs sf

 

 

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 122 ரன்கள் (13 பவுண்டரிகள், 2சிக்ஸர்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போல் ஹர்திக் பாண்டியா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 230/4 (47.3 ஓவர் ) எடுத்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற முதல் தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 122 எடுத்தார். தென்னாப்பிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ் 42 எடுத்தார். இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மாவின் நிதான ஆட்டமே காரணம். இந்நிலையில் பலரும் சமூக வலைத்தள பக்கங்களில் ரோஹித் சர்மாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன.