Skip to main content

நான்காவது டெஸ்டில் வெற்றிபெற செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
India

 

 

 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு விளையாடி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 1 - 2 என்ற கணக்கில் இருக்கிறது இந்திய அணி. நாளை சவுத்தாம்டனில் நடக்கவிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிதான், தொடரின் போக்கை தீர்மானிக்க இருக்கிறது. ஒருவேளை இந்தியா வென்றால் ஐந்தாவது போட்டிதான் தொடரை வெல்வது யார் என்பதைத் தீர்மானிக்கும். அதேபோல், இங்கிலாந்து வெற்றிபெற்றால் தொடரையும் கைப்பற்றி, ஐந்தாவது போட்டியில் கூலாக களமிறங்க முடியும். 
 

அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில், இந்திய அணி கண்டிப்பாக வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்றால், இந்த மூன்று விஷயங்கள் கண்டிப்பாக நடக்கவேண்டும். 
 

டாப் ஆர்டர் நிதானம்

இதுவரை நடந்துள்ள மூன்று போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் எந்தளவுக்கு மோசமாக விளையாடியது என்பதைப் பார்த்திருக்கிறோம். குறிப்பாக முதல் இரண்டு போட்டிகளில் டாப் ஆர்டரின் நிதானமற்ற ஆட்டத்தால், மொத்த அணிக்கும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மூன்றாவது டெஸ்டில் ராகுல், தவான் இணை அந்த நிலையைக் கொஞ்சம் மாற்றியது. அதோடு சேர்த்து சதீஸ்வர் புஜாராவின் ஆட்டமும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களுக்கும் நம்பிக்கை அளித்தது. 
 

 

 

எனவே, குறைந்தபட்சம் 150 ரன்களைக் கடக்கும் அளவுக்கு இந்த மூன்று பேர் அடங்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் விளையாட வேண்டும். அடுத்துவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களுக்கு இந்த ரன்கள் நிச்சயம் தோள்கொடுக்கும். 
 

அஸ்வின் ஆட்டம்
 

முதல் இன்னிங்ஸில் அஸ்வின் விக்கெட் எடுத்தே ஆகவேண்டும். நாட்டிங்காம் பிட்சில் டாஸ் வெல்வது பற்றி நாம் ஏற்கெனவே பேசியிருந்தது போல, இரண்டாவது இன்னிங்ஸ் கண்டிப்பாக சுழற்பந்துக்கு சாதகமாக மாறும். அதனால், முதல் இன்னிங்ஸில் அஸ்வின் தனது ஆட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தினால், இங்கிலாந்து வீரர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். மூன்றாவது போட்டியில் அஸ்வின் விக்கெட்டே எடுக்காமல் போனதை இந்த இடத்தில் நினைவுகூரலாம். 
 

 

 

ஸ்லிப் கேட்சுகளின் முக்கியத்துவம்
 

டெஸ்ட் போட்டிகளில்தான் அதிகளவிலான எட்ஜ் கேட்சுகளைப் பார்க்கமுடியும். இந்திய அணியின் ஸ்லிப் ஏரியா மிக மோசமாக இருப்பதாக, முந்தைய காலங்களில் விவாதமே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், இளம் வீரர்கள் வந்தபிறகு அந்த நிலை கொஞ்சம் மாறியது. முந்தைய போட்டியில் கே.எல்.ராகுல் ஸ்லிப் பொசிஷனில் ஆறு கேட்ச்களைப் பிடித்தது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. எனவே, ஸ்லிப் கேட்சுகளில் வீரர்கள் தனி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.