Skip to main content

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். 

Next Story

பவுலர்களைக் காப்பாற்றுங்கள்; கதறிய பந்து வீச்சாளர்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

Save the bowlers; famous spinner reacts

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 261 ரன்கள் சேஸ் செய்யப்பட்ட நேற்றைய ஆட்டம் ஒரு பேட்டிங் ட்ரீட் என்றால் அது மிகையாகாது. ஆனால் பந்து வீச்சாளர்களின் நிலைதான் மிகவும் பரிதாபாகரமாக அமைந்தது. தற்போது பந்து வீச்சாளர் ஒருவர் நேற்றைய போட்டி பற்றி தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி நரைன், சால்ட் அதிரடியால் முதல் 10 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது.

இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71, சால்ட் 75 என சிறிய இடைவெளியில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 (23), ரசல் 24(12), ஸ்ரேயாஸ் ஐயர் 28(10) என அவர்கள் பங்குக்கு சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. 

பின்னர் 262 ரன்கள் எனும் வரலாற்று இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங் இருவரும் இணைந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். பிரப்சிம்ரன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 108 என மிரட்ட, சஷாங்க் சிங் ஈடன் கார்டன் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் அட்டகாசமான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களாக மாற்றி 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 262 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். 

இப்படி அதிக ஸ்கோர்கள் தொடர்ந்து அடிக்கப்படுவதும், அவை எளிதில் சேஸ் செய்யப்படுவதும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் முற்றிலுமாக பேட்ஸ்மேன்கள் விளையாட்டாக மாறி வருகிறதென்றும், இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இப்படி பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்படும் பிட்சுகள் இப்போதைய கொண்டாட்டத்துக்கு வேண்டுமானால் உதவுமென்றும், இது இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடர்களில் வெல்ல உதவாது என்றும் பலரும் விமர்சித்து வந்தனர். தற்போது இந்திய பந்துவீச்சாளர் ஒருவரே அதுபற்றி வாய் திறந்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Save the bowlers; famous spinner reacts

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த வீரருமான அஸ்வின் தற்போது இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளப்பக்கமான எக்ஸ்-ல் “தயவுசெய்து யாராவது பந்து வீச்சாளர்களைக் காப்பாற்றுங்கள் “ என்றும், “ 260+ சேசிங்கில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் போதும் என்ற நிலை. இது மூழ்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.