Skip to main content

நான் சொதப்புகிறேன்.. கேப்டன் பதவி வேண்டாம்! - டெல்லி கேப்டன் கம்பீர்

Published on 25/04/2018 | Edited on 26/04/2018

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.

 

Gambhir

 

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து சீசன்களிலும் மிக மோசமான ட்ராக் ரெக்கார்டுகளைக் கொண்ட அணி டெல்லி டேர்டெவில்ஸ். இரண்டு முறை கொல்கத்தா அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்த கவுதம் கம்பீர், இந்தாண்டு நடைபெற்ற ஏலத்தில் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். 

 

அதுமட்டுமின்றி அந்த அணியின் கேப்டனாகவும் அவர் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், டெல்லி அணி மற்றும் கம்பீர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு குவிந்தது. ஆனால், இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேபோல், முதல் போட்டியில் அரைசதம் அடித்த டெல்லி அணியின் கேப்டன் கம்பீர், அதைத் தொடர்ந்து நடந்த போட்டிகளில் ஒற்றை இலக்கங்களில் வெளியேறி ஏமாற்றினார்.

 

இந்நிலையில், தான் கேப்டன் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கம்பீர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘அணியின் தற்போதைய நிலைக்கு நானே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். அதைக் கருத்தில்கொண்டே கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். ஸ்ரேயாஸ் ஐயர் அந்தப் பொறுப்பை வகிப்பார். இப்போதுகூட இந்த சீசனில் நம் அணியால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சொதப்பிவிட்டேன். சரியாக விளையாடவில்லை. இதுவே நான் விலக சரியான நேரம். என்னை விலகுமாறு யாரும் நிர்பந்திக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.