Skip to main content

அணியின் ஆலோசகர் பொறுப்பு; ஊதியம் பெறாத தோனி!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

ms dhoni

 

இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்தது.

 

இந்தநிலையில் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் வாழ்நாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைவர் கங்குலி உட்பட இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் பலருக்குக் கடிதம் எழுதினார். அதில் அவர், தோனியை ஆலோசகராக நியமித்தால் அது அவர் இரட்டை ஆதாயம் பெறுவதாக அமைந்து விடும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை, ஒருவர் கிரிக்கெட் சம்பந்தமான இருவேறு பொறுப்புகளை வகிக்க முடியாது. தோனி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளதால், அதைக் காரணம் காட்டி அவர் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு சஞ்சீவ் குப்தா எதிர்ப்பு தெரிவித்தார்.

 

இதனையடுத்து தோனி நியமனம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் தனது சட்ட குழுவுடன் ஆலோசிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தநிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் ஆலோசகராக பணியாற்ற தோனி, எவ்விதமான தொகையையும் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.