Skip to main content

கே.எல்.ராகுலிடம் இருந்து துணைக் கேப்டன் பதவி பறிப்பு?

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Deprived of vice-captaincy from KL Rahul?

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் சிறப்பாக ஆடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

டெல்லியில் அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்கு சுழல் கைகொடுக்க சிரமம் ஏதும் இன்றி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை தக்க வைத்தது. 

 

ஆயினும் இந்திய அணியின் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸ்களிலும் பெரிதாக சோபிக்கவில்லை. இரு டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து இந்திய அணியின் மூன்று இன்னிங்ஸ்களில் 38 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாகவே அவர் பெரிய இன்னிங்ஸ்களை ஆடாததும் குறிப்பிடத்தக்கது. 

 

மேலும், கடந்த சில ஆண்டுகளில் எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச வாய்ப்புகள் கே.எல்.ராகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தன் திறமையை நிரூபிக்கவில்லை. திறமையான வீரர்கள் வெளியில் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் என கே.எல்.ராகுலுக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி தூக்கினர். 

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ராகுலின் பெயர் இடம்பெற்று இருந்தாலும் துணைக்கேப்டன் என்று கே.எல்.ராகுல் குறிப்பிடப்படவில்லை. இதனால் தற்போது இந்திய அணியின் அடுத்த துணைக்கேப்டன் யார் என்றும் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல் விளையாடுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. 

 

அடுத்த இரு போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷ்ரேயஸ் ஐயர் , சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.