Skip to main content

"அதையெல்லாம் தோனி பார்த்துக்கொள்வார்..." சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தகவல்

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

Dhoni

 

 

13-வது ஐபிஎல் தொடரானது வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்குப்பின் நடைபெறுவதால் இத்தொடர் குறித்தான எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் சென்னை அணிக்குள் பல சிக்கல்கள் அடுத்தடுத்து எழுந்து சென்னை அணியின் ஐபிஎல் பங்கேற்பு குறித்து கேள்வி எழுப்புகின்றன. முதலில் சென்னை அணியைச் சேர்ந்த ஒரு பந்து வீச்சாளர், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னை அணி திட்டமிட்டபடி பயிற்சி மேற்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டது. அதன் பின்பு சென்னை அணியின் முக்கிய வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களுடைய சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், “சென்னை அணி சரியான கட்டமைப்புடன் உள்ளது. அதுகுறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். பல கடினமான தருணங்களில் அணியைத் திறம்பட வழிநடத்திய சிறந்த கேப்டன் நம்முடன் உள்ளார். தோனி அணியைப் பார்த்துக்கொள்வார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஏற்கனவே பயிற்சியைத் தொடங்கிவிட்டோம். அனைத்து வீரர்களும் உற்சாகமான மனநிலையில் உள்ளனர். பயிற்சியாளர், கேப்டன் என இருவரிடமும் அனைத்து வீரர்களும் இணைய வழியில் விவாதித்து வருகின்றனர். இந்த கடினமாக தருணத்தில் இருந்து நாம் நிச்சயம் மீண்டு வருவோம்" என்றார்.