Skip to main content

ரெய்னாவை திரும்ப அழைக்க வாய்ப்பிருக்கிறதா? சென்னை அணியின் சி.இ.ஓ பதில்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

raina

 

ரெய்னாவை அணிக்குத் திரும்ப அழைக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்.

 

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணிக்கு இத்தொடரின் தொடக்கம் பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, ஒரு வெற்றியும், இரண்டு தோல்விகளும் கண்டுள்ளது. ஐ.பி.எல் தொடருக்காக அமீரகம் சென்றதிலிருந்தே சென்னை அணிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டன. முதலில் ஒரு பந்துவீச்சாளர், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னை அணி வீரர்களால் திட்டமிட்டபடி பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. அதன்பின், சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா, சொந்தக் காரணங்களுக்காக அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மற்றொரு மூத்த வீரரான ஹர்பஜன் சிங்கும், இதே காரணத்தின் பெயரில் விலகினார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 

 

பல பின்னடைவுகள் இருந்தாலும், தொடர் தொடங்கியவுடன் உற்சாகமாகப் பங்கெடுத்த சென்னை அணி, முதல் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக அதிரடியான வெற்றியைப் பெற்றது. இது தந்த உற்சாகம் அடங்குவதற்குள், சென்னை அணியின் மற்றொரு வீரரான அம்பதி ராயுடு காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. சென்னை அணியின் கேப்டனான தோனியின் சர்வதேச ஓய்விற்குப் பின் நடக்கும் முதல் தொடர் என்பதால் அவர் மீது ஏற்பட்டுள்ள கூடுதல் எதிர்பார்ப்பு, களத்தில் அவரைத் தடுமாற வைத்துள்ளது. சென்னை அணி நிர்வாகம் இத்தோல்வியில் இருந்து மீண்டுவர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால், அடுத்து வரவிருக்கிற போட்டிகளில் அணியில் அதிரடியான மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

இந்நிலையில், ரசிகர்கள் ரெய்னாவை அணிக்குத் திரும்ப அழையுங்கள் என்று சென்னை அணி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசியுள்ளார்.

 

Ad

 

அதில் அவர், "ரெய்னா விருப்பப்பட்டு விலகும் போது, நாம் அவரை எப்படி அழைக்க முடியும். அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். அதனால், அவரைத் திருப்பி அழைப்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. உலகெங்கும் சென்னை அணிக்கு ரசிகர்கள் உள்ளனர். நாம் இதிலிருந்து மீண்டு வருவோம் என அவர்களுக்கு உறுதியளிக்கிறோம். விளையாட்டின் போது, வெற்றி, தோல்வி என இரண்டும் இருக்கும். நாம் செய்ய வேண்டியது என்ன என்பது நம் வீரர்களுக்குத் தெரியும்" எனக் கூறினார்.