Skip to main content

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.