Skip to main content

"வேலை செய்யாமலேயே களைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?" - மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

"What to do if you feel tired without working?" - Dr. Arunachalam Explained!

'நக்கீரன் 360' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நமது உடலுக்கு எவ்வளவு தண்ணீர் போதுமானது என்பதை, வெளியேற்றுதல் மூலம் பார்க்கலாம். ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் தண்ணீர் நமது உடலில் இருந்து வெளியேறினால் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. இதே நேரத்தில், வெயில் காலம் என்றால், வேர்வையின் மூலம் தண்ணீர் வெளியேறும். வேர்வையில் உப்பும் வெளியேறும். முற்பகலில் சிறிது உப்பு போட்டோ அல்லது உப்பு கலந்த தண்ணீரையோ, நீர் மோரையோ குடித்துவிட்டு, பிற்பகலில் ஒரு லிட்டர் தண்ணீராவது குறைந்தபட்சம் குடிக்க வேண்டும். 

 

முக்கியமாக, அலுவலகங்களில் அமர்ந்து பணியாற்றுபவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள். நாள்தோறும் 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். உடல் உழைப்பு இருப்பவர்கள், தங்களுக்கு எவ்வளவு வேர்வை வெளியேறுகிறதோ, அதற்கு தகுந்தாற்போல் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருநாள் முழுவதும் வேர்க்காத நேரத்தில் RO தண்ணீரைக் குடிப்பது தவறு இல்லை.  உணவின் மூலம் கிடைக்கும் உப்பு மட்டும் உடலுக்கு போதும். அதே நேரம் கோடைக்காலங்களில் வேர்வை வரும் வகையில் வேலை செய்பவர்களுக்கு இந்த தண்ணீர் போதாது.

 

இன்னும் சொல்லப்போனால் மாலை நேரங்களில் வேலை செய்யாமலேயே களைப்பு ஏற்பட்டு தண்ணீர் குடித்து தாகம் அடங்கவில்லை என்றால் உடலில் உப்பு இல்லாததே காரணம். இதற்கு நீர்மோரில் உப்பு போட்டுக் குடிக்க வேண்டும். தண்ணீரைப் படுத்துக் கொண்டு குடிக்கக் கூடாது. அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ ஒரு மருத்துவரை நீங்கள் நினைத்த நேரம் பார்க்க முடியாது. ஆனால், இந்தியாவில், குறிப்பாக நகரங்களில் ஒரு தெருவுக்கு நான்கு மருத்துவர்கள், மருத்துவமனைகள் இருக்கின்றன. தமிழகத்தில் 250 பேருக்கு ஒரு டாக்டர் வீதம் இருக்கின்றனர். 

 

இந்த நேரத்தில் மக்கள் ஏன் மருத்துவர்களை சந்திக்க யோசிக்கிறார்கள்? என்பது மிகப்பெரிய கேள்விக் குறி. வெளிநாடுகளை ஒப்பிடும்போது, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் மருந்துகளை விட இரண்டு மடங்கு மருத்துவர்களின் கட்டணம் அதிகமாக உள்ளது. ஆனால், இங்கு மருந்துகளை விட ஒரு மடங்கு குறைவாகத்தான் மருத்துவரின் கட்டணம் உள்ளது" என்றார்.