Skip to main content

அன்று மொட்டை மாடி கொட்டகை, இன்றோ...? - இந்தியாவுக்கே இங்கிலிஷ் சொல்லித்தரும் தமிழர்! 5 நிமிட எனர்ஜி கதை

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

கஷ்டப்படும் குடும்பம், அப்பா இல்லை, மூத்த அண்ணனின் சம்பளத்தில் தான் அனைத்தும் ஓடுகிறது. தம்பி, கல்லூரி முடித்துவிட்டான். ஒரு நல்ல வேலைக்குச் சென்று குடும்பத்தை உயர்த்துவான் என்று காத்திருந்த அம்மாவுக்கு ஷாக் கொடுத்தான். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில், அப்போதைய கணக்குக்கு நல்ல சம்பளத்தில், கிடைத்த நல்ல வேலைக்குப் போகாமல், 'நான் சமூக சேவை செய்யப் போகிறேன், அல்லது ஆசிரியராகிப் பாடமெடுக்கப் போகிறேன்' என்றான். அதிர்ச்சியடைந்த அம்மா, ஒத்துக்கொள்ளவேயில்லை. 'நீ முட்டாள் தனமாகப் பேசுகிறாய். உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளப் போகிறாய்' என்றார். ஆனால், அந்தப் பையன் தெளிவாக இருந்தான், தான் இன்னொருவரது நிறுவனத்தில் வேலை செய்யப் பிறந்தவனில்லை என்று.

 

Ganesh ram

            

ஆரம்பத்தில் செல்வ வளமிக்க குடும்பம்தான். தாத்தா தஞ்சாவூரில் ரைஸ்மில் வைத்திருந்தவர். அந்த செல்வ வளத்தில் அப்பா வாழ்ந்துவிட்டார், வளர்க்கவில்லை. திடீரென தொழிலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் தாத்தாவின் சொத்துகள் பெரும்பாலும் கரைந்தன. கணேஷுக்கு ஒரு வயதிருக்கும்போதே அப்பா இறந்துவிட, திடீரென ஒரு ஏழை குடும்பமானது கணேஷின் குடும்பம். சென்னைக்கு வந்தது குடும்பம். எத்தனை சிரமத்திலும் கல்வி தடைபடவில்லை. மாநகராட்சி பள்ளி, பின்னர் அரசு கலை கல்லூரி. நந்தனம் கல்லூரியில் படித்த பொழுது NSS மாணவராக, குடிசைப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வகுப்பெடுத்தான் கணேஷ். குழந்தைகளுக்கு பிரியமான ஆசிரியர் ஆனான். கஷ்டமான கணக்குப் பாடத்தை எளிதில் புரிய வைத்தான். தான் ஒரு நல்ல ஆசிரியர் என்ற மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டது. அந்த நம்பிக்கைதான் கல்லூரி முடிந்து நல்ல வேலை கிடைத்த பொழுதும், அதற்குச் செல்லாமல் டியூஷன் சென்டர் ஆரம்பிக்க வைத்தது. முதலில் ஒத்துக்கொள்ளாத அம்மா, அவர்களது ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டார். 'இந்தப் பையனை நீங்க கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்புனாலும், ரெண்டு மூணு மாசத்துல வந்துருவான். அவன் போக்கிலேயே விட்டுவிடுங்க' என்றார் ஜோதிடர். ஜோதிடம் பற்றி பல கருத்துகள் இருந்தாலும், அந்தப் பையனுக்கு நன்மையே செய்தது.

 

Vivekananda study circle


அம்மாவிடம் கெஞ்சிப் பெற்ற 500 ரூபாயைக் கொண்டு, சென்னை நந்தனத்தில் ஒரு வீட்டின் மாடிக்கு அட்வான்ஸ் கொடுத்து  வாடகைக்கு எடுத்து டியூஷன் சென்டர் தொடங்கியாயிற்று. ஆசிரியரும், இடமும் இருந்தால் போதுமா? 1981இல் ப்ளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மூன்று மாணவர்களைக் கண்டுபிடித்து, மாதம் 30 ரூபாய் கொடுத்து டியூஷன் வந்தால் இந்த ஆண்டு உங்களை பாஸ் ஆக வைப்பேன் என்று சத்தியம் செய்து, சேர்த்தார். சில நாட்கள் சிறப்பாக சென்றது டியூஷன். மாணவர்களுக்கும் நம்பிக்கை வந்துவிட்டது. இப்பொழுது மாத வாடகை தர வேண்டுமே? வாடகை, 175 ரூபாய். மாணவர்களோ மூன்று பேர், அவர்கள் கொடுத்தது 90 ரூபாய். என்ன செய்வது? மாணவர்களிடமே கேட்டார், 'நான் பாடமெடுப்பது உங்களுக்குப் பிடித்திருந்தால், மூன்று பேரும் ஆளுக்கொருவரை டியூஷனுக்கு அழைத்து வாருங்கள்' என்று.  அவர்களுக்கு ரொம்பப் பிடித்தது, ஆளுக்கு இருவரை அழைத்து வந்தார்கள். 9 மாணவர்கள், 270 ரூபாய் கட்டணம். முதல் மாதமே லாபமானது.

கல்வி மீது, பாடமெடுப்பது மீது ஆவல் கொண்டுதான் இதை செய்ய வந்தார். ஆனால் , இப்பொழுது அவருக்கு இதுதான் தொழில், இதை நம்பித் தான் அவர். கணக்குப் பார்த்துதானே ஆகவேண்டும்? இப்பொழுதும் கணேஷ் ராம்  கூறுகிறார், "ஒரு விஷயத்தை நீங்கள் சேவை என்று  நினைத்து செய்வதைவிட, உங்கள் தொழில் அதுதான் என்று நினைத்து செய்தால் அதன் தரம் அதிகமாக இருக்கும். உங்கள் தொழில் பிறருக்கு சேவையாக அமைந்தால் அதுவே பெரிய மகிழ்ச்சி. என் தொழிலால் இன்று 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை மாறியிருக்கிறது என்பதே என் மகிழ்ச்சி".

 

ganesh with rajini


முதலில் கணக்குப் பாடம் மட்டும், பிறகு தனது சகோதரன் சகோதரியை கேட்டுக்கொண்டு, அவர்கள் ஆங்கிலம், வணிகவியல் பாடங்கள் எடுக்க மெல்ல வளர்ந்து சென்னையின் மிகப் பெரிய டியூஷன் சென்டர் ஆனது விவேகானந்தா கல்வி நிலையம். முதலில் 'விவேகானந்தா ஸ்டடி சர்க்கிள்' என்று தான் தொடங்கினார். ஸ்டடி சர்க்கிள் என்றால் நூலகமோ என்று பலரும் நினைத்துக் கொள்ள, பெயரை மாற்றினார். கல்லூரி முடிந்த கையோடு தொடங்கிய டியூஷன் சென்டர் மூலம் தன் 24 வயதில் மாதம் 4 லட்சம், அதில் 80 சதவிகிதம் லாபம் என்பது கணேஷ் ராமின் தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த பரிசு. இன்று கோடிகளில் இருக்கிறது வருமானம். 1981இல் ஆரம்பித்து, சில வருடங்களில் அவர் உணர்ந்த விஷயம், தமிழ் மாணவர்களுக்கான ஆங்கிலத் தேவை. இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்த தமிழகத்தின் பார்வை பெரியது. உலக மொழியாம் ஆங்கிலம் இருக்கையில், இந்தி எதற்கு என்று ஆங்கிலம் கற்றுக்கொள்ள தமிழர்கள் பெரிதும் விரும்பினர். அதோடு, மெல்ல வேலைவாய்ப்புகளும் ஆங்கில புலமை கோரத் தொடங்கின. அதனால் 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' பயிற்சியைத் தொடங்கினார் கணேஷ்.

 

ganesh with kamal



அவரது அண்ணன் ராஜகோபாலன் ஆங்கில மொழியிலும் அதைக் கற்றுக் கொடுப்பதிலும் சிறந்து விளங்கினார். 90ஸ் கிட்ஸ்சுக்கு ராஜகோபாலனை நன்கு தெரியும். 'வீட்டா' விளம்பரங்களில் ஆங்கிலம் சொல்லித் தருவாரே அவர்தான் ராஜகோபாலன். ஒரு கட்டத்தில்   'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்புதான் அதிக பேரை ஈர்க்கிறது என்று உணர்ந்த கணேஷ், பிற வகுப்புகளை நிறுத்த முடிவு செய்தார். 'தான் ஆசையாசையாக ஆரம்பித்த டியூஷன் வகுப்புகளை நிறுத்துவதா? அய்யகோ' என்றெல்லாம் அவர் எண்ணவில்லை. சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டார், வளர்ச்சி பெற்றார். இதுதான் அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. பிடித்ததை செய்யும் தைரியம், தேவையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல், இந்த இரண்டும் கணேஷ் ராம் நமக்குக் கற்றுக்கொடுப்பது.

 

veta rajagopalan

 

முதலில் விவேகானந்தா ஸ்டடி சென்டர், விவேகானந்தா கல்வி நிலையம் ஆனது. ஆந்திரா, கர்நாடகாவில் ஆரம்பித்த பொழுது, விவேகானந்தா இன்ஸ்டிடியூட், நாடு முழுக்க பரவிய பொழுது வீட்டா (VETA) என நிறுவன பெயரிலிருந்து பல வகைகளிலும் காலத்திற்கேற்ப மாறிவந்திருக்கின்றார் கணேஷ். ஒரு கட்டத்தில் நாளொன்றுக்கு 2000 மாணவர்கள் வரை சேர்ந்து வந்த நிலை மாறி  2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது. தங்களை மறுபார்வை பார்த்து, ஃபிரான்ச்சைஸ் முறைக்கு மாறினார். இன்று, தனி மாணவர்கள் மட்டுமன்றி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட்  பயிற்சியளிக்கின்றது வீட்டா. இந்தியா மட்டுமன்றி சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து என பல நாடுகளிலும் இருக்கின்றன இதன் வகுப்பறைகள். 
 

வறுமையினால் தனக்குப் பிடித்ததை விட்டு, அந்த நேரத்துக்கு வசதியான, கிடைத்த வேலையை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், அவருக்குத் தெரிந்திருந்தது, அவர் அதற்கானவரல்ல என்று. வாழ்க்கை என்றுமே நம் தேர்வுதான். ஆனால், நாம் தேர்ந்தெடுப்பதில் முழுமையாக, தைரியமாக, மாற்றங்களை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், உயரங்களை அடையலாம்.