Skip to main content

"என் மகள் பெற்ற வெற்றியால் என் டீக்கடை புகழ்பெற்றது!" - இன்ஸ்பயரிங் இளம் பெண்

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
anchal

 

இந்திய விமானப் படையின் போர் விமானியாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இந்திய விமானப் படையின் போர் விமானிக்கான தேர்வு  நடைபெற்றது. இத்தேர்விற்காக இந்தியா முழுவதிலும் இருந்து ஆறு லட்சம் பேர் எழுதினார்கள். கடந்த ஏழாம் தேதி இத்தேர்விற்கான முடிவுகள் வெளியானது. இதில் 22 பேர் விமானிக்காக தேர்வு செய்யப்பட்டனர். அதில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டீ கடைக்காரரின் மகளான ஆஞ்ச்சல் கங்க்வாலும் ஒருவர். அவருக்கு வயது இருபத்தி நான்கு.           

 

 


இவரின் தந்தை பெயர் சுரேஷ் கங்க்வால், மத்திய பிரதேசத்தின் நிமச் பேருந்து நிலையம் அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். இது குறித்து  அவர் பேசியபோது, “எனது மகளின் படிப்பு, போட்டித் தேர்வுகளுக்காகக் கடன் வாங்கிப் படிக்க வைத்தேன். எனது முயற்சியும் கடினமாக உழைத்துப் படித்த அவளது முயற்சியும் வீண் போகவில்லை. எனது மகள் போர் விமானி பணிக்கு தேர்வானதால் எனது டீக்கடை பிரபலமாகிவிட்டது” என்றார். ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் வரும் 30-ம் தேதி ஆஞ்ச்சல் பணியில் சேருகிறார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்பட பல அரசியல் தலைவர்கள் ஆஞ்ச்சலை பாராட்டி வருகின்றனர். 

 

aanchal

 

தேசமெங்கும் தேர்வெழுதிய ஆறு லட்சம் பேரில் இருபத்தி இரண்டு பேர் மட்டுமே பெற்றுள்ள இந்த வெற்றியைப் பெற ஆஞ்ச்சல் கடுமையாக மட்டுமல்ல தொடர்ந்து தன்னம்பிக்கையோடு உழைத்துள்ளார். ஆறாவது முறைதான் அவர் தேர்வு பெற்றுள்ளார். இந்திய விமானப்படைக்கு முயற்சி செய்யும் முன் அரசு தேர்வுகள் எழுதிய அவருக்கு காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது. ஆனாலும், அவரது முக்கிய இலக்கு விமானப் படை என்பதால், அந்த தேர்வுகளுக்கு படிப்பதற்கு நேரம் அளிக்கக் கூடிய வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அந்த வாய்ப்பை ஏற்காமல் பின்னர் தொழிலாளர் நல துறையில் பணியாற்றுள்ளார். அதுவே நல்ல பணி என்று அதோடு திருப்தியடைந்துவிடாமல் தொடர்ந்து படித்து அவரது இலக்கை அடைந்துள்ளார்.   

 

aanchal teas shop

சுரேஷ் கங்க்வால் தேநீர் கடை


"எனக்கு முன்பே தெரியும், என்னால் இதை செய்ய முடியுமென்று. நான் கல்லூரியில் முதல் மாணவியாக இருந்துகொண்டே விளையாட்டிலும் கவனம் செலுத்தினேன். இரண்டு விஷயங்களிலும் என்னால் கவனம் செலுத்த முடியும், இரண்டும் எனக்குப் பிடித்ததால். அது போலத்தான் நான் பணியில் இருந்துகொண்டே இந்தத் தேர்வுக்குப் படித்ததும். எனக்கு முன்பே வேறு வேலை கிடைத்தபோதும், என் பொருளாதாரத் தேவை இருந்த போதிலும் கிடைத்த வேலையோடு நான் நின்று விடவில்லை. என் இலக்கை நோக்கிப் பயணித்தேன், வென்றேன்" என்கிறார் நம்பிக்கை மிளிரும் கண்களுடன் அந்த இருபத்தி நாலு வயது இன்ஸ்பயரிங் இளம் பெண் ஆஞ்ச்சல் கங்க்வால். தெளிவான இலக்கு, அர்ப்பணிப்பு, கடுமையான மட்டுமல்ல தொடர்ந்த உழைப்பு, இவையிருந்தால் வெற்றி பெற வறுமை மட்டுமல்ல வேறெதுவும் தடையில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார் இவர்.